திங்கள், 1 மே, 2017

9 கோபுரம் கழுவப்போன தீவட்டிகள் - பாலாவோரை - 9.... ஒவ்வொரு தேசங்களாக விழுந்து .

(சமணர்களின் ஆதிபகவன் என்று அழைக்கப்படும் முதலாவது தீர்த்தங்காரர் மாகாவீரர் சிலை)
பாலவோரை வேந்தன் தலைகால் புரியாமல் மகிழ்ச்சியில் குதித்தான்.
பாக்கியத்தம்மாளின் தூதுவன் கொண்டுவந்த செய்தி அவ்வளவு இனிப்பானது. கட்டப்படும் நேமிநாதர் பள்ளிக்கு அல்ல அல்ல கோவிலுக்கு காவல் கோவிலாக வழுக்கியாற்றங்கரையில் ஒரு காவல் கோவில் அமைப்பதற்கு தீர்மானித்து இருப்பதாக அதில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. அது மட்டுமல்ல குலதிலகனின் பார்ப்பன பரிவாரங்களின் உதவியையும் அதற்காக  கோரி இருந்தாள்.
அவனது மனம் தாறுமாறாக கணக்கு போடத்தொடங்கியது . அப்படியே இரண்டு கோவில் கட்டுமானத்தையும் ஒரே நேரத்தில் ஒரே ஆள் அம்பு சேனைகளையும் பயன்படுத்தி கட்டினால் ஏராளமான அனுகூலங்கள் தனக்கு இருப்பதாக எண்ணி கொண்டான். தனது பரிவாரங்களையும் கூட்டி கொண்டு அக்காவை சந்திக்க தூதனுப்பினாள்.
நடக்கும் காரியங்கள் எல்லாம் நம்புவதற்கு கொஞ்சம் கடினமாக இருப்பதாக ஒரு சில பார்ப்பன மேதாவிகள் சந்தேகம் தெரிவித்தனர். அவர்களை குலதிலகன் கடுமையாக கண்டித்தான். தனது அக்கா தன்மீது கொண்ட அன்பினால்தான் இந்த முடிவுக்கு வந்துள்ளதாக அவன் முற்று முழுதாக நம்பினான்.,

அவனது நம்பிக்கை சந்தேகித்து கேள்வி கேட்கும் தைரியம் அங்கு யாருக்கும் இருக்கவில்லை. இருந்தாலும் ஏனோ சிலருக்கு நடப்பது ஒன்றுமே தெளிவில்லாமல்  ஏதோவொரு குழப்ப நிலையை அடைவது போல  தோன்றியது .
அங்கு நிலவிய மகிழ்ச்சி கேளிக்கையில்  திளைத்து பலரும்  சோமபானம் அருந்தி ,பலவகையான பதார்த்தங்களை உண்டு களித்திருந்தனர்.

புதிதாக தூய தாவர உணவுகளையே உண்பதாக விரதம் எடுத்துள்ள சில பார்ப்பனர்கள் மிகவும் இரகசியமாக மாமிச உணவுகளை பதம் பார்த்தனர்.

கேளிக்கை விருந்து  ஒருபுறம் நடந்து கொண்டிருக்கும் போதே குலதிலகன் தனது ஆஸ்தான பரிவாரங்களோடு  அக்காவின்  கோவிலுக்கு  உரிய ஆரம்ப திட்டங்களை பற்றி விவாதிக்க தொடங்கினாenன். பலரும் பலவிதமான கருத்துக்களை முன்வைத்தனர்.
சமண பள்ளிகளை போலல்லாது மூதாதையர் வழிபாட்டு பள்ளிகளுக்கு ஏதாவது  வீரர் கோவில் என்றுதான் பெயர் வைப்பது வழக்கம் என்று குலதிலகன் கூறவும் வீரர் என்பதாக இல்லாமல் பைரவர் என்றுதான் நாமம் சூட்டவேண்டும் என்று ஒரு பார்ப்பன  அதிமேதாவி ஆலோசனை வழங்கினார். பைரவா என்றால் மிகுந்த தெய்வீக  நாதம் இருப்பதாகவும் அது தேவபாஷை என்றும் கதை அளந்து கொண்டிருந்தார் . வழக்கம்போல குலதிலகன் அவர்கள் பேச்சை ஏதோவொரு ஞானோபதேசம் போல கேட்டுகொண்டிருந்தான் ஆனால் கூடவே சோமபானமும் அருந்தி கொண்டிருந்தான்.
ஒருவாறு குடியும் கூத்துமாக வழுக்கியாற்று காவல் கோவில் பற்றிய தங்கள் ஆசைகள் ஆலோசனைகள் எல்லாவற்றையும் கவிழ்த்து கொட்டிக்கொண்டு இருந்தார்கள்.

வழுக்கியாற்று கரையில் அலைமோதும் கூட்டம் !

கோழிகள் கூவ கிளிகள் பேச காலைபொழுதின் இளங்காற்று வீச வழுக்கியாற்றுக்கரை ஒரு புது பொலிவோடு காணப்பட்டது .
திருவிழா போல மக்கள் நிறைந்து ஆரவாரம் மிகுந்து  காணப்பட்டது.
நீண்ட காலத்துக்கு பின்பு அக்கா பாக்கியத்தமாளும் தம்பி குலதிலகனும் மிகுந்த மகிழ்ச்சியுடன் ஒரே இடத்தில் காட்சி அளித்தனர். இந்த காட்சி கொஞ்சம் பழைய நினைவுகளை எல்லோர் மனதிலும் மீட்டது.
அவர்களின் பேராவூர் பெரியவரசுவும் தாயார் பேராட்டியும் உயிரோடு இருந்த காலத்தில் அடிக்கடி காணப்படும் இதுபோன்ற காட்சிகள் அவர்களின் மறைவுக்கு பின்பு ஒருபோதும் இடம் பெற்றதில்லை.

அங்கு கூடி இருந்த இரு தரப்பு ஆலோசகர்களும் கட்டப்போகும் புதிய கோவிலுக்கு வழுக்கியாற்று கரையில் இடம் பார்ப்பது மற்றும்  உரிய ஆரம்பக்கட்ட வேலைகளை எப்படி செய்வது என்று காரசாரமாக விவாதித்தனர்.
இறுதியில்  பல குழுக்களை அமைக்கப்பட்டது.  ஒவ்வொரு குழுவுக்கும்  உரிய பணிகளை விபரமாக வகுத்து கொடுத்தனர். அவற்றை பொறுப்பெடுத்து செய்வதற்கு அவர்கள் பாக்கியத்தம்மாளின்  ஒப்புதல் பட்டயத்தில் ஒப்பம்  பெற்று கொண்டனர்.அவர்களுக்கு தேவையான ஆரம்ப நிதியும் வழங்கப்பட்டது.
சகல பூர்வாங்க சம்பிரதாயங்களும் முடிந்த பின்பு குலதிலகன் பாதி வேடிக்கையாகவும் பாதி கோரிக்கையாகவும் சில ஆலோசனைகளை அக்காவிடம் எடுத்துரைந்தான்.
இரண்டு கோவில் பணிகளையும் நாம் ஒரே திட்டங்களின் கீழ் கொண்டுவந்தால்  கட்டுமான பணிகள் கொஞ்சம் சுலபமாக இருக்கும் என்று கருதுகிறேன் அக்கா என்றான்.   
ஒரு கணம் அவனது அக்கா என்ற வார்த்தை அவளை கொஞ்சம் துணுக்கிட வைத்தது. நீண்ட நாட்களாக அவர்கள் அன்பாக பேசி கொள்வதே இல்லையல்லவா? கொஞ்சம் கவலையாகவும் இருந்தது. என்னசெய்வது? விதி அவனுக்குள் புகுந்து கொண்டு கூத்து ஆடும்பொழுது தான் என்னதான் செய்யமுடியும் என்று மனதிற்குள் எண்ணியவளாய், நானும் அப்படித்தான் கருதுகிறேன் என்று பதிலளித்தாள்.
ஒரு ஏட்டில் எழுதாத ஒப்பந்தம் ஒன்று அந்த மாலை வேளையிலே வழுக்கியாற்று கரையில் இரு அரசுகளுக்கும் இடையே உருவானது.
தம்பிக்கும் அக்காவுக்கும் இடையே ஏற்பட்ட புரிந்துணர்வு இருவருக்குமே மிகவும் திருப்தியை தந்தது.
இவர்களின் அரச கருமங்களை பற்றி மக்கள் மனதில் ஒரே குழப்பமான கருத்து மோதல்கள் அங்காங்கே அடிக்கடி கிளம்பிக்கொண்டு இருந்தது.
இருவரும் இருவேறு துருவங்கள் எதிலும் ஒத்த கருத்து கொள்ளாதவர்கள் எப்படி இந்த முடிவுக்கு வந்தார்கள்? அதைவிட முக்கியம் ஏன் பாக்கியத்தம்மாள் இப்படி ஒரு தீர்மானம் எடுத்தாள் என்பது மக்களிடையே பெரும் கேள்விகளை உருவாக்கி விட்டிருந்தது.
சமண பள்ளிகள் எல்லாம் கோவில்களாக மாறிகொண்டிருக்கும் அவலம் ஒருபுறம். அந்நிய பார்ப்பனர்கள் கைகளில் ஒவ்வொரு தேசங்களாக விழுந்து கொண்டிருக்கும் அக்கிரமங்கள் போதாதென்று பாலவோரையும் அதே பாதையில் போவதாக மக்கள் வேதனை படதொடங்கினார்கள். அவர்களால் பாக்கியத்தமாளை தற்போது புரிந்து கொள்ளவே முடியவில்லை.  
அவளின் அறிவிலும் தேசப்பற்றிலும் மக்களுக்கு மிகவும் தெளிவான நம்பிக்கை இருக்கும் ஒரே காரணத்தினால் மட்டுமே அவர்கள் இதுவரை எதிர்ப்பு குரல் எதுவும் காட்டாமல் பாக்கியத்தம்மாளோடு ஒத்து போனார்கள் . சகலவிதமான அரச ஆணைகளுக்கும் மக்கள் மௌனமாக கட்டுப்பட்டார்கள். இது குலதிலகன் முகாமுக்கு மிகுந்த திருப்தியை கொடுத்தது.அவர்கள்  அக்கா சம்மதித்தாலும் மக்கள் எதிர்த்து விட்டால் என்ன செய்வது என்று கொஞ்சம் கலங்கி இருந்தார்கள் .
அரச கருமங்கள் இவ்வாறு நடைபெற்று கொண்டிருக்க வேறு ஒரு புறத்தில் பாக்கியத்தம்மாளின் ஒற்றர்கள் பார்பனர்களை வேவு பார்த்து
ஒவ்வொருவரினதும் முழு வாழ்க்கை வரலாற்றையும் தேடி தேடி ஆராய்ந்து கொண்டிருந்தனர். அது அந்த பார்ப்பனர்களுக்கும் அரசல் புரசலாக தெரிந்துதான் இருந்தது .ஆனாலும் அவர்கள் அதை பெரிதாக அலட்டி கொள்ளவில்லை. முழுதேசமே தங்கள் கைவசம் வந்து கொண்டிருக்கும் பொழுது யாரோ வேண்டாதவர்களின் வீண் செயலென்று அவற்றை கருத்தில் கொள்ளவில்லை.
ஒற்றர்கள் கொண்டுவந்த பல செய்திகள் மிகவும் அதிர்ச்சிகரமாகவும் இருந்தன . காட்சிக்கு நேர்த்தியாக இருக்கும் பார்ப்பன பரிவாரங்களில் பலர் ஒழுங்கான வாழ்க்கை முறையே இல்லாதவர்கள் என்ற தகவல்   எல்லோருக்கும் கொஞ்சம் அதிர்ச்சியாகத்தான் இருந்தது. அந்த செய்திகளையெல்லாம் தொகுத்து மக்கள் மத்தியில் பரப்புரை செய்ய ஒரு குழுவை இரகசியமாக அமைத்தார்கள். அவர்களின் கடந்த கால குற்றசெயல்கள் பாலியல் முறைகேடுகள் போன்றவற்றை மக்களுக்கு தெரியப்படுத்தவேண்டிய அவசியம் நேர்ந்திருக்கிறது. அவர்களை ஏதோ  ஒரு தேவர்கள் முனிவர்கள் போன்று புகழும் ஒரு கூட்டம் நாட்டில் உருவாக்கப்பட்டிருக்கிறது. அவர்களின் முகமூடியை தகர்க்கவேண்டிய வரலாற்று கடமை பாக்கியத்தம்மாளின் அரசுக்கு உண்டு.
இந்த பிரசாரங்கள் ஒரு புறத்தில் முடுக்கி விடப்பட்ட கையோடு தனது அடுத்த திட்டத்தை அவள் முன்னெடுக்க வேண்டிய நேரம் வந்து விட்டதை அமைச்சர்களுக்கு தெரியப்படுத்தினாள்.

பொருதுவதற்கு போதிய படைகள் இல்லாவிடில் "பொருந்தி பொருத்தி பிரித்து விடு"  என்ற கோட்பாட்டை அவள் மேற்கொண்டு இருக்கிறாள் என்பது  இப்போதுதான் அமைச்சர்களுக்கு மெதுவாக புலப்பட்டது.

கருத்துகள் இல்லை: