
திட்டங்கள் தீட்டி பாலவோரை தேசத்தை காக்க திடசங்கற்பம் பூண்டு இருந்தாலும் அது அவ்வளவு இலகுவானதல்லவே?
தேசத்தை காப்பாற்ற தம்பியை பணயம் வைக்கவேண்டி இருக்கிறதே என்ற எண்ணம் அவளை கொஞ்சம் கூட தூங்க அனுமதிக்கவில்லை.
தாயும் தந்தையும் இறந்து சில ஆண்டுகள் ஆனாலும் அவளின் மனதளவில் அவர்கள் இன்னும் உயிரோடுதான் இருக்கிறார்கள் . சஞ்சலம் வரும்போதெல்லாம் மனதில் அவர்களிடமே கேள்விகளை கேட்டு பதில்களையும் பெறுவதாக அவள் அடிக்கடி கூறுவாள். அது எவ்வளதூரம் உண்மை என்பது எவருக்கும் தெரியவில்லை.
பகலும் இரவும் பொருதிக்கொள்ளும் பொல்லாத மாலை
எதிரே நிற்பது தனது ஒரே தம்பி , அதுவும் தாய் தந்தை இல்லாது தான் ஒருத்தி மட்டுமே உறவாக இருக்கும் அவனே தனது பகைவனாகவும் வந்து விடுவானோ என்ற பயம் கலக்கம் எல்லாம் சேர்ந்து சோர்வை தந்தது.
வீசும் பூங்காற்றும் கூட மிகவும் பாரமாக தெரிந்தது அழகான மாலைபோழுதுகூட ஒரு பகலும் இரவும் பொருதிகொள்ளும் ஒரு கொடிய மாலை பொழுதாக தோன்றியது.

புற்றுவெட்டு பூதூர் நம்பி ... ஒரு மின்னல் பளிச்சிட்டது போல் புத்துவெட்டு பூதூர் நம்பியின் ஞாபகம் தோன்றியது. வழி தோன்றியது போல ஒரு உணர்வும் தோன்றியது.
புற்று வெட்டு பூதூர் நம்பி பாலாவோரை அரச குடும்பத்தின் மிகவும் விசுவாசமான ஒரு ஊழியனின் மகனாவான்.
பூதூர் நம்பி இளமையில் பெரும்பாலும் அரண்மனையில் விளையாட்டு தோழனாக இருந்தவன்தான். பேராவூர் பெரியவரசுவின் அன்புக்கு பாத்திரமானவன். அரசன் அவன் மீது காட்டும் அன்பு பலரையும் கொஞ்சம் சந்தேக படவைத்ததும் உண்டு. அவனும் பார்வைக்கு கொஞ்சம் அரசனின் முக தோற்றத்தை கொண்டு இருந்தான். பாக்கியத்தம்மாளை அக்கையார் என்றுதான் அவன் அழைப்பது. அவனது அக்கை என்ற உறவு முறையை பற்றி கேள்வி கேட்கும் துணிவு யாருக்கும் இருக்கவில்லை.

பாக்கியத்தமாள் பூதூர் நம்பியின் இடத்துக்கு யாரும் அறியாவண்ணம் சென்றாள். அக்கையாரை கண்டதும் நம்பியின் கண்களில் ஆறாக ஓடியது கண்ணீர். பாலாவோரையின் புயலும் காற்றும் மின்னலும் முழக்கமும் மட்டும்தான் நம்பியின் கண்ணீருக்கு காரணம் என்பதல்ல அக்கையாரை காணும் போதெல்லாம் அவனின் உள்ளே ஒரு பாசம் கண்களில் கண்ணீராக ஓடுவதன் காரணம் அவனே கூட அறியாததுதான்.
எந்த இருட்டிலும் உற்றுபார்த்து வழிசொல்லும் நம்பிதான் பாலவோரையின் நம்பிக்கை நட்சத்திரம் என்று அவளின் உள்மனதில் ஒரு குரல் ஒலித்துகொண்டே இருந்தது , அது அவளின் தாய் தந்தையர் குரலென்று அவள் நம்பினாள்.

பாலவோரையில் ஒரு போர் மூழும் என்று எண்ணுவதே அவர்களுக்கு மிகவும் சிரமமாக இருந்தது , எப்படியும் ஒரு போருக்கு தேவை இருக்காது என்று நம்புவதற்கு முயற்சி செய்தார்கள் . ஆனால் போருக்கு உரிய ஆயத்தங்கள் தேவை என்று முடிவெடுத்தனர்,
எதிரே நிற்பவன் எதிரியாக இருந்தால் அல்லவா போர் புரியவேண்டும.
இது ஒரு முட்டாள் தம்பியால் வந்த வினை அல்லவா?
எனவே மிகவும் தந்திரமாகத்தான் சூழ்ச்சிகளை முறியடிக்க வேண்டும் என்று அக்கையும் நம்பியும் பல வியூகங்களை வகுத்தனர்.நம்பிக்கு நிச்சயம் வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கை இருந்தது. அவனது அறிவுக்கூர்மைக்கு பார்ப்பனர்கள் ஒருபோதும் ஈடாக மாட்டார்கள் என்று அக்கையும் நம்பினாள்.
ஆனால் அவன் தனது திட்டங்களுக்கு கேட்கும் பொருட்களும் ஆட்களும் மிகவும் அதிகம். அதுதான் தற்போது அக்கை பாக்கியத்தமாளின் பிரச்சனையாக இருந்தது.
எப்படியாவது ஐநூறு விசுவாசமான படை வீரர்களும் அவர்களுக்கு தேவையான நிதியும் இலகுவானதல்ல..
இந்த திட்டத்தின் காரணமாக பாலவோரை வழுக்கியாற்று குளக்கட்டுமான பணிகளில் தொய்வு ஏற்பட்டுவிட கூடாது , அது வீண் சந்தேகங்களை வளர்த்து பார்பனர்களை உசுப்பி விட்டு விடும், ஒருபக்கம் குளக்கட்டுமான பணிகளும் நடைபெறவேண்டும். அதேசமயம் பாலவோரை பார்பனர்களை ஒரே நேரத்தில் முற்றுகை இட்டு கைது செய்யவேண்டும்.இந்த திட்டத்தில் ஏதாவது தவறு நேர்ந்தால் பார்பனர்களுக்கு ஆதரவான தேசங்களின் படைகள் வந்து பாலவோரையை தாக்க கூடும் என்ற பேராபத்தும் உண்டு,
கத்தி மேல் நடப்பது போன்று எதிரியை உசுப்பேத்தி விடாமல் ஒரேயடியாக மூழகடிக்க வேண்டும், சதா போதையிலும் பெண் மயக்கத்திலும் இருக்கும் தம்பி குலதிலகன் அப்படியே மாதக்கணக்கில் அல்லது சில வருடங்களாவது தூங்கியே இருக்கட்டும் , பாலாவோரை விழித்தே இருக்கட்டும்.
மூன்று நாட்கள் இரவும் பகலும் சிந்தித்து அக்கையும் நம்பியும் ஒருவழியாக இறுதி தீர்மானத்துக்கு வந்தனர்.
எந்த சூழ்நிலையிலும் போர் புரிவதை தவிர்க்கவேண்டும் என்பதில் இருவரும் உறுதியான தீர்மானத்துக்கு வந்தனர். ஆனாலும் வெற்றி பெற்றே ஆகவேண்டும் . மிக மிக சவாலான ஒரு பணியை பாலாவோரை மக்களின் துணையோடு மேற்கொள்ள துணிந்தனர்,.
புயலாகிய புத்தூர் நம்பி
கருமங்கள் வேகமாக முடுக்கி விடப்பட்டன. நாலாபுறமும் பேராவூர்
தேசத்தின் நட்பு சக்திகளுக்கு இரகசிய தூது அனுப்பப்பட்டது.
பார்ப்பன குடிப் பரம்பலுக்கு எதிரான சகல சக்திகளையும் ஒருங்கிணைக்கும் தேச நிர்மாண நகர்வுகள் மேற்கொள்ளப்பட்டன.
புத்து வெட்டு பூதூர் நம்பியின் முழு ஆற்றலும் இந்த முயற்சிக்கு உறுதுணையாக இருந்தது . நம்பியை போன்ற ஒரு அறிவாளியின் பக்க பலம் பாலவோரை மக்களுக்கு ஒரு நம்பிக்கையை கொடுத்தது.
குலதிலகன் மிகவும் மகிழ்வாக அக்காவிடம் கோவில் பொறுப்புக்களை கொஞ்சம் கொஞ்சமாக ஒப்படைத்து கொண்டே வந்தான்.
அவனது தேவைகள் எல்லாவற்றையும் பூர்த்தி செய்யத்தான் அக்கா என்று ஒருவர் இருக்கிறாரே என்ற அளவற்ற நம்பிக்கை அவனுக்கு. சதா மேனைகை பிராட்டியோடும் இதர வேடிக்கை வினோதங்களோடும் அவனின் நாட்கள் ஓடிக்கொண்டு இருந்தன .
அவனது பரிவாரங்களோ ஆனந்தமாக வழுக்கியாற்று கரைக்கு வருவதும் உண்டு களியாட்டங்களில் மகிழ்வதுமாக காலத்தை விரயமாக்கி கொண்டு இருந்தனர்,
தலையில் கொஞ்சம் அறிவு கொண்ட பார்ப்பனர்கள் மட்டும் கொஞ்சம் கவலையோடு நடப்பதை கண்டு ஒன்றும் புரியாமல் முகத்தை தொங்க போட்டு கொண்டு உலாவினர்.
நடப்பது எல்லாம் தாம் நினைத்தபடிதான் நடக்கிறதா என்ற சந்தேகம் உள்ளூர இருந்தது. ஆனால் தாம் சந்தேகம் கொள்வதை குலதிலகன் அறிந்து விடக்கூடாது என்பதால் நடிக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருந்தனர்.

அவர்களிடையே ஒரு புழுக்கம் நிறைந்த மௌனம் நிலவியது.
கீழ்மட்ட பரிவாரங்களோ இதைப்பற்றி எல்லாம் எதுவித கவலையும் இன்றி கிடைத்ததை உண்டு குடித்து மகிழ்ந்திருந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக