திங்கள், 1 மே, 2017

18 கோபுரம் கழுவப்போன தீவட்டிகள் - பாலாவோரை 18 புயலில் அடிபட்ட முல்லைக்கொடி a

புத்தூர் நம்பியின் தலைக்கு மேல் ஏராளமான கடமைகள் சுமத்தப்பட்டிருந்தன.  பார்ப்பனர்களின் சகவாசத்தில் ஒரு கோவிலாக  உருமாறி போயிருந்த நேமிநாதர் சமண பள்ளியை மீண்டும் நிர்மாணிப்பது முதல் கடமையாக இருந்தது . அது  பற்றி உரியவர்களோடு பல விதமான ஆலோசனைகளில்   ஈடுபட்டான். சமண பள்ளிகளில் பயின்ற மாணவர்களை தேடிப்பிடித்து மீண்டும் சமண பள்ளிகளில் சேர்க்கவேண்டும் . இடையில் வந்த கோவில் களியாட்டங்கள் அவர்களின் மனதை திசை திருப்பி இருக்க கூடாதே என்ற நியாயமான கவலை பலரையும் ஆட்கொண்டது.

கோவில் கட்டுமானம் பற்றி எல்லாம் தற்போது யாரும் பேசுவதே இல்லை . பார்ப்பனர்களின் நடமாட்டம் இல்லாதபோதே எல்லோருக்கும் நிலைமை புரிந்து விட்டது.  இடையில் வந்த பார்பனீயம் வந்த வழியே மறைந்தும் விட்டது , அது எப்படி இவ்வளவு விரைவாக ஓடிவிட்டது என்பது ஏராளமான மர்மங்கள் நிரம்பிய கனவு போல் தெரிந்தது. என்றாவது ஒருநாள் அதுபற்றி விபரங்கள் வெளியாகும் அதுவரை பொறுத்திருக்க வேண்டியதுதான்.
புத்தூர் நம்பியும் அக்கையரும் மற்றும் இவர்களோடு சேர்ந்த குறிப்பிட்ட சில அமைச்சர்கள் தளபதிகளுக்கு மட்டுமே முழு விபரமும் தெரிந்திருந்தது.
நினைத்த காரியம் எல்லாம் வெற்றிகரமாக நிறைவேறிய மகிழ்ச்சியில் பாலாவோரை மக்கள் இருந்தாலும். அக்கையாரும் நம்பியும் அவ்வளவு மகிழ்ச்சியாக இல்லை.
இந்த வெற்றிக்கு அவர்கள் மிகப்பெரிய விலை ஒன்றை கொடுத்து விட்டிருந்தார்கள் என்ற இரகசியம் அவர்களை வாட்டியது.
குலதிலகனின் உடல் நிலை மெல்ல மெல்ல கவலை அளிப்பதாகவே இருந்தது. உரிய வைத்தியர்களை கொண்டு சிகிச்சை அளிக்கப்பட்டாலும், அவை முழு வீச்சில் நடைபெறுகிறதா என்பது கேள்விக்குறிதான்.
அவன் குணமாக வேண்டும் என்று மேனகா பிராட்டி விரும்புவது மட்டும்தான் நிச்சயமான விடயமாக இருந்தது. அவளுக்கு என்னனவோ சந்தேகங்கள் எழுந்தது ஆனால் பேதைப்பெண் யாரிடம் கேட்பாள்?

நடந்த காரியங்கள் எல்லாம் தப்பும் தவறுமாகவே நடந்து விட்டனவே? குலதிலகனின் அரசாட்சி  வேடிக்கை வினோதங்கள் மட்டுமல்லாமல் விபரீதங்கள் நிறைந்தும் இருந்தது..
மேனாகவுக்கு இப்போது எல்லாமே ஓரளவு தெளிந்து விட்டது. எப்படி குலதிலகன் நோய்வாய்ப்பட்டான் என்பதில் மட்டும் இன்னும் சில சந்தேகங்கள் இருந்தது. அவனின் மோசமான வாழ்க்கை முறையையும் தாண்டி ஏதாவது சதி முயற்சியின் காரணமாகவும் அவன் நோயுற்று இருக்கலாம் என்ற எண்ணம் அவளை தூங்க விடாமல் செய்தது.
சந்தேகங்கள் எல்லா திசைகளிலும் இருந்து எழுந்தவண்ணமே இருந்தன. அயல்தேசங்களிலும் சந்தேகப்புயல் சுழன்று சுழன்று அடித்தது.
பாலாவோரையை புரட்டி போட்ட மழையின் மீதே பெருத்த சந்தேகம் எல்லோருக்கும் எழுந்தது . சாதாரண மழையா அது? ஒரு அரசாங்கத்தையே புரட்டி போட்டு விட்ட மழையல்லவா அது?
எந்த காலத்திலும் எப்படிபட்ட மழைக்கும் புயலுக்கும் வெள்ளத்திற்கும் எதிராக கம்பீரமாக நிற்கும்  பாலாவோரை அரண்மனை  எப்படி மழை உள்ளே வர அனுமதித்தது?
மழைக்கு ஓடி சென்ற பார்பனர்கள் ஒரே அடியாக ஓடிசென்ற மர்மம் என்ன? அவர்களுக்கு என்ன நடந்தது? யாரும் அதுபற்றி பேசவே பயப்படுகிறார்களே?
அரசனே செயலிழந்த பின்பு யார்தான் அவர்களின் இருப்பை உறுதி செய்வது?
எல்லாமே தற்செயலாக நடந்த சம்பவங்களா?
அக்கையாரிடம் கோவில் கட்டும் பணியை குலதிலகன் ஒப்படைத்த நாளில் இருந்து என்னனவோ நடந்து முடிந்து விட்டன.
மழையும் குலதிலகனின் நோயும் பார்பனர்கள் ஓட்டமும் எல்லாமே ஒரு திட்டத்தின் அடிப்படையில் இடம்பெற்ற சம்பவங்கள் போல தோன்றினாலும் , யாராலும் எதையும் அறுதி இட்டு கூற முடியாமல் இருந்தது.
இது போன்ற ஏராளமான கேள்விகள் எல்லோர் மனதிலும் இருந்தாலும் இக்கேள்விகளுக்கு செவி கொடுக்கும் மனநிலையில் அக்கையாரோ புத்தூர் நம்பியோ இல்லை .
மழையால் ஏற்பட்ட சேதங்களை நிவர்த்தி செய்வதிலும் சமண பள்ளிகளை செப்பனிடுவதிலும் சுறுசுறுப்பாக இருந்தனர். எவரது கேள்விகளுக்கும் பதில் கூறக்கூடிய மன நிலையில் அவர்கள் இல்லை. ஆனால் அவர்களது  செயல்கள் எல்லாமே அவர்கள் எதை நோக்கி செல்கிறார்கள் என்பதை தெளிவாக காட்டிற்று. அது மக்களுக்கு அவர்கள்மீது உள்ள நம்பிக்கை மேலும் மேலும் அதிகரித்தது.
குலதிலகனின் குடியும் கூத்துமான ஆட்சியை கண்டு கவலையில் இருந்த பாலாவோரரை மக்கள் தற்போது  நிம்மதி பெருமூச்சு விட்டனர்.
மீண்டும் சமண பள்ளிகள் சீர்படுத்தப்படும் செய்திகள் அவர்களின் காதுகளில் தேனாக பாய்ந்தது. நடக்கும் காரியங்கள் எல்லாம் நல்ல திசையை நோக்கி செல்லும் பொழுது வெறும் ஊகங்களை கிளறி யாருக்கு என்ன பயன் என்ற எண்ணமே எங்கும் மேலோங்கி இருந்தது.
புத்தூர் நம்பியின் வைத்தியர்களின் மேற்பார்வையில் குலதிலகன் எதோ காலத்தை ஒட்டி கொண்டிருந்தான்.
அரச நிர்வாக கருமங்களுக்கு தேவையான சகல பத்திரங்களிலும்  குலதிலகன் தனது கைவிரல் ஒப்பத்தை இடுவது ஒன்றே அவனது ஒரே ஒரு வேலையாக இருந்தது.
புத்தூர் நம்பி எப்பொழுது தேவை ஏற்படினும் குலதிலகனை சந்தித்து வேண்டிய அரச கருமங்களை நெறிப்படுத்தினான் . அவனின் நெறிப்படுத்தலில் எல்லாம் இனிதாக நடந்தேறிகொண்டிருந்தன.
பெயருக்கு அரசனாக இருந்த குலதிலகனுக்கு நாட்டில்  நடப்பது  எதுவுமே  தெரியவில்லை.  சதா எங்கோ வெறித்து நிலைகுத்திய   பார்வையோடு  ஒரு சிலை போன்றே காணப்பட்டான்.
அவனை இந்த நிலைக்கு ஆளாக்கியதற்கு  தனது கூட்டமும் ஒரு பெரும் காரணம் என்பது மேனகாவின் மனதுக்கு தெரிந்தே இருந்தது . ஆனாலும் ஏராளமான சந்தேகங்கள் போட்டி போட்டுகொண்டிருந்தன.
கொந்தளித்து கொண்டிருந்த மனதை  கொஞ்சமாவது சமாதானம் செய்ய எண்ணியவள் நிமித்தகாரியை சந்திக்க எண்ணினாள் மேனகா பிராட்டி .

ஏராளாமான அதிசயங்களை தன்னுள்ளே கொண்டிருந்த நிமித்தகாரியின் சிந்தைக்கு  மேனாகாவின் எண்ணம் வந்து சேர்ந்தது .
மனதுக்குள் சிரித்துக்கொண்டே மேனகாவை எதிர்பார்த்து கொண்டிருந்தாள்.
தண்டனை பெற்ற குற்றவாளி அதன் விபரங்களை அறிந்து என்னவாக போகிறது ?
குடிலுக்கு வெளியே மேனகாவின் குதிரை வண்டி வரும் ஓசை கேட்கவே வெளியே வந்தால் நிமித்தக்காரி.
புயலில் அடிபட்ட முல்லைக்கொடி போல வந்தாள் பாலாவோரையின்  அங்கீகாரம் இல்லாத அரசி மேனகா பிராட்டியார்.
இன்று அவள் ஒரு அரசிதான் ஆனால் இப்படி ஒரு துன்பமான அரசி பதவியை அவள் ஒருபோதும் எதிர்பார்க்கவே இல்லை.
அரசனை அடித்து வீழ்த்தி விட்டு  அவனுக்கு அரசியாக இருப்பது கொடுமையிலும் கொடுமை என்ற குற்ற உணர்வு மேனகாவை குத்தி குதறியது .
முகத்தில் மறைக்கவே முடியாத ஒரு வெற்றி புன்னகையுடன் அவளை   வரவேற்றாள் நிமித்தக்கார அம்மணி: தாங்கள் அழைத்தால் தங்களின் அரண்மனைக்கே வந்திருப்பேனே?
மேனகா :அம்மணி தாங்கள் தெய்வத்துக்கு நிகரானவர் நானல்லவா தேடி வரவேண்டும் என்று உண்மையிலேயே பணிவாக பதிலழித்தாள்.
அம்மணி : என்ன அரசியாரே உங்கள் முகம் மகிழ்வாக இல்லையே?
மேனகா :அம்மணி என்னை அரசி என்று அழைக்காதீர்கள் .. நான் வெறும் ஒரு பார்ப்பன அனாதைப்பெண் என்று கண்ணீரை சிந்திக்கொண்டே கூறினாள்.
அப்படி ஏன் கூறுகிறீர்கள் தாங்கள் இன்று பால்வோரையின் அரசி அல்லவா?
தாங்கள் விரும்பிய பதவி அல்லவா?
காதில் ஏதோ கேட்க கூடாத சொற்களை கேட்டது போல மேனகா நடுங்கிக்கொண்டே நான் ஒன்றும் அறியாத ஒரு பாவியாக இருந்துவிட்டேன்.
குலதிலனகனின் இன்றைய நிலை என்னை கொல்கிறது என்று கூறி கொண்டே முகத்தை பொத்தி கொண்டு அழுதாள்.
மேனகாபிராட்டியாரின் அழுகையை பார்க்கும்போது நிமித்தகரியின் மனதில் வேதனை ஓடிற்று . இந்த பேதை பெண்ணின் கண்ணீருக்கு தானும் ஒரு காரணம் என்ற குற்ற உணர்வு அவளின் நிம்மதிக்கும் வேட்டு வைத்தது.
     

கருத்துகள் இல்லை: