திங்கள், 1 மே, 2017

17 கோபுரம் கழுவப்போன தீவட்டிகள் - பாலாவோரை - 17.. கண்ணீரை சுமந்து வந்த வெற்றி !

பாலவோரை எங்கிலும் ஒரு சகிக்க முடியாத அமைதி குடிகொண்டிருந்தது. அரசன் நிலையோ என்னவென்று அவனுக்கே தெரியாத நிலையில் மக்களுக்கு என்ன தெளிவு கிடைக்கும்?
மழை ஒய்ந்து விட்டது . கோவில் கட்டுமானம் வேலைகளை புறந்தள்ளி விட்டு ஏராளமான பணியாளர்கள் அரண்மனையை செப்பனிடும் அதிசய காட்சி அரங்கேறி கொண்டிருந்தது. பணியாட்கள் அரண்மனையை செப்பனிடுகிறார்களா அல்லது குப்புற கவிழ்க்கிறார்களா என்று ஊர் மக்கள் தமக்கு பேசிக்கொண்டனர். அரசன் குலதிலகனோ ஒரு நிரந்தர மயக்க நிலைக்கு சென்றுவிட்டான். அவனோடு மேனகா பிராட்டியார் மட்டுமே கூட இருக்கிறார். இதர பார்ப்பன பரிவாரங்கள் சென்ற இடமே தெரியவில்லை.
ஏராளமான கேள்விகளுக்கு விடை தெரியாமல் அல்லது விடைகள் தெரிந்து விடுமோ என்ற பயத்தில் மேனகா மௌனமாக அழுதுகொண்டே இருந்தாள்.
தன்னை சுற்றி இருப்பவர்கள் எல்லோரும் பாக்கியத்தம்மாளின் ஆட்கள்தான் என்பதை சரியாகவே உணர்ந்து கொண்டாள். யாரிடம் போய் என்ன விளக்கத்தை கேட்பது? என்னன்னவோ நாடகம் எல்லாம் நடக்கிறது . தானும் அரசனும் உயிரோடு இருப்பதே பெரிய அதிசயம் என்று அவளுக்கு தோன்றியது. போதையில் ஊமையாகிப்போன அரசன் .  மனைவி என்ற அந்தஸ்து இல்லாமலேயே அரசனுக்கு மனைவியாகி கொண்டிருப்பதை எண்ணினாள். எவ்வளவு மோசமான ஒரு  நிலைக்கு வந்து சேர்ந்துள்ளேன் என்று மனதிற்குள் குமைந்தாள்.

பாக்கியத்தம்மாள் மீது அளவுகடந்த கோபம் கொண்டாள். தனது கோபத்திற்கு அர்த்தம் நியாயம் எதுவும் இல்லை என்றும் புரிந்தது. இருந்தாலும் மனது கேட்க மறுக்கிறதே?
பொன்னும் பொருளும் தேடி வந்த பழைய மேனகா பிராட்டியார் இப்போது ஒரு மிக சாதாரண பெண்ணாக உருமாறி கொண்டிருந்தாள். முட்டாள் அரசனுக்கு ஒரு உண்மையான காதலி கிடைத்த அதிசயம் விதியின் விளையாட்டு போலும்.

குலதிலகனின் வீழ்ச்சிக்கு தானும் தனது பார்பன  கூட்டமும்தான் காரணம் என்ற உண்மை அவள் நெஞ்சை சுட்டு எரித்து கொண்டிருந்தது.
வஞ்சகர்களின் சதி வலையில் தானும் விழுந்து குலதிலகனையும் வீழ்த்தி விட்டோமே என்று அடக்க முடியாமல் மனதிற்குள் ரத்த கண்ணீர் வடித்தாள்.

காணமல் போன பார்ப்பனர்களை தேடிக்கொண்டு அயல்நாட்டு தூதுவர்கள் சிலர் பாலாவோரைக்கு வருகை தந்தனர்.
புத்தூர் நம்பியோடு அவர்கள் தொடர்பு கொண்டு விசாரித்தனர். அவர்களை பாக்கியத்தமாளிடம் அழைத்து வந்தான் புத்தூர் நம்பி.
பாக்கியத்தம்மாளின் பிரமாண்டமான மாளிகை மற்றும் ஆயுதச்சாலை பட்டறைகள் முதலனவற்றை அவர்கள் பார்வை இட்டனர்.
மிகவும் உயர்ந்த வசதிகள் அவர்களுக்கு அளிக்கப்பட்டது. பாலாவோரையின் பலம் அவர்களுக்கு தெரியவேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் படைகளின் அணிவகுப்பு போன்ற மரியாதைகளும் அளிக்கப்பட்டது.
வந்த தூதுவர்களுக்கு கொஞ்சம் பயம் வரும்படியான படைகளின் சாகச நிகழ்சிகள் போன்ற காட்சிகளும் அரங்கேறின.
இவற்றை எல்லாம் பார்த்து பலரும் விக்கித்து போயினர்.
தேடிவந்த பார்பனர்களை காணவில்லை . பாலாவோரை தேசமோ ஒரு பெரிய போருக்கு தயாராவது போல காட்சி அளிக்கிறது . உண்மையில் என்னதான் நடக்கிறது?
பார்பனர்களுக்கு நட்பு பாராட்டும் தேசங்களில் இருந்து வந்த தூதுவர்கள் பாலாவோரையின் எதிர்பாராத காட்சிகளால் அதிர்ந்து போனார்கள்.
பல நூற்றாண்டுகளாக சத்தம் போடாமல் அமைதியாக இருந்த பாலவோரை தேசம் தற்போது முற்றிலும் உருமாறி ஒரு போருக்கு நாள் குறிக்கும் தேசமாக அல்லவா காட்சி அளிக்கிறது?
காணமல் போன பார்பனர்களை இவர்கள் கொன்றிருப்பார்களோ என்று நடுங்கினார்கள். யாரிடம் கேட்பது?
இந்த காட்சிகளை எல்லாம் குலதிலகன் வெறும் பொம்மை போல பார்த்து கொண்டிருந்தான். அவனுக்காக சிந்திக்க மேனகை மட்டும்தான் இருந்தாள்.
அக்கையார் பாக்கியதம்மாள் தற்போதெல்லாம் மிகவும் இறுக்கமான முகத்தோடு யாரோடும் அதிகம் பேசாமல் கண்களை உருட்டி உருட்டி எல்லாவற்றையும் கவனித்து கொண்டிருந்தாள் .

தூதுவர்கள் மௌனமாக வெளியேறிய சில நாட்களின் பின்பு நிமித்தகாரி பாலாவோரை அரண்மனைக்கு வந்தாள்.
 அவளை கண்டதும் மேனகை கண்ணீரை மறைக்க முடியாமல் எதோ கேட்க எத்தனித்தாள்,
அவளின் தலை மீது கையை வைத்த நிமித்த்காரி சிறிது நேர மௌனத்திற்கு பின்பு , உனக்கு ஒரு குறைவும் இல்லையே? ஏன் அழுகிறாய்?
உன்னை சுற்றி இருந்த ஓநாய்கள் எல்லாம் ஓடி விட்டனவே?
உன்னை இரையாக கொடுத்து வேட்டையாடவும் கொள்ளை அடிக்கவும் வந்தவர்களுக்காக நீ ஏன் அழவேண்டும்?
அவர்கள் உன்னை  விலை பேசி விற்க அல்லவா வந்தார்கள்? உண்மையில் நீ விற்கப்பட்ட பொருளல்லவா?  உனக்கு எப்படி உயிர் வந்தது?
சரியாக சிந்தித்து பார்த்தால்  உண்மையில் நீ மகிழ்ச்சி அடையவேண்டும் அல்லவா?
நீ இப்பொழுது ஒரு சுதந்திரமான பெண். நீ இப்பொழுது வேண்டுமானாலும் இங்கிருந்து போகலாம் என்றாள்.
இதை எல்லாம் அமைதியாக கேட்டு கொண்டிருந்த  குலதிலகன் மிகவும் விரக்தியோடு மேனகாவை பார்த்தான்.
அந்த பார்வையை தாங்க முடியாத மேனகா பிராட்டியார் அவனை ஓடிச்சென்று அணைத்து கொண்டாள்.
இந்த காட்சியை தூரத்தே இருந்து கண்டு கொண்ட பாக்கியத்தம்மாள் மெதுவாக இவர்களை நோக்கி வந்தாள்.
தம்பி மீது உள்ள பாசம் அவள் கண்களை நிறைத்து விட்டிருந்தது.
கண்களில் கண்ணீர் வழிந்தாலும் நெஞ்சில் உள்ள நெருப்பு கொஞ்சம் குறையாத அவளின் குணம் தம்பிக்கு தெரியாது. .
மேனகா பிராட்டிக்கு அக்கையரை பார்க்கும் பொழுதெல்லாம் அவர் ஒரு சாதாரண பெண்மணி அல்ல என்று தெரிந்திருந்தது, அவள் மிகச்சரியாக கணித்திருக்கிறாள் .
அருகில் வந்த அக்கையாரின் பாதத்தை தன்னையும் அறியாமல் குனிந்து வணங்கினாள்.  ஏன் இன்று திடீரென்று இப்படி செய்கிறாள் என்று
அக்கையாருக்கும் விளங்கவில்லை.
குலதிலகனோ எல்லாவற்றையும் பார்த்து கொண்டு எதுவித சலனமும் அற்று இருந்தான்.
அக்கையாரின் மனதில் மின்னல் போல சில எண்ணங்கள் பளிச்சிட்டன.
மேனகை பிராட்டியாரின் கைகளை பற்றி கொண்டு கண்களில் கண்ணீர் நிரம்ப சில வினாடிகள் மௌனமாக கண்களை ஊடுருவி பார்த்தாள்.
ஒ இவளின் கண்களில் தெரியும் காதல் உண்மையானதுதான் என்று எண்ணினாள்.
தறிகெட்டு  நெறிகெட்டு மந்தமாகி போன தம்பிக்கு இவள்தான் இனி எல்லாம் என்று தோன்றியது.
அவளின் கரங்களை பற்றி தம்பியின் கரங்களில் வைத்தாள். \
தம்பி என்னனவோ சொல்ல தயாராவது போல இருந்தது ஆனால் எதுவும் கூற கூடிய அளவு விழிப்பாக இல்லை ..
அவனின் நிலையை பார்க்கும்போது அக்கையருக்கு மனம் சுக்கு நூறாக உடைந்தது. எங்கே தனது துக்கம் தன்னை பலவீனமாக காட்டி விடுமோ என்ற பயத்தில் இருவரின் தோள்களிலும் மெதுவாக தட்டி விட்டு அவ்விடத்தை விட்டு அகன்றாள்.
வாழ்வின் எந்த நிகழ்வையும் சமபார்வையுடன் நோக்கும் சிந்தனை தெளிவும் உறுதியும் கொண்ட நிமித்தகாரியும் அன்று ஒரு சாதாரண பெண் போல கண்ணீரை அடக்க சிரமப்பட்டாள்.
பாக்கியத்தம்மாள் தனக்கு கிடைத்த வெற்றியை ஒரு கணம் வெறுத்தாள். குலதிலகனின் தோற்றம் அவளின் மனதை நொறுக்கி விட்டிருந்தது.  

கருத்துகள் இல்லை: