வெள்ளி, 14 செப்டம்பர், 2018

குளிர குளிர குளித்த பூசாரி

முழுநாட்டையும் புரட்டி போட்ட அந்த யுத்தம் கோவில் சாமிகளை மட்டும்
விட்டு விடுமா என்ன?
கண்ணுக்கு எட்டிய தூரம் வரை  தெரியும்  வயல்களுக்கு நடுவே   நிற்கும் வெள்ளம்புட்டி விநாயகர்  கோவில்.
 கோயிலை சுற்றி இருந்த மக்கள் கூட்டமோ கோயிலுக்கு ஏற்ற அளவில்  இல்லை .
உலகின் எல்லா திக்குகளிலும் இருந்த நாடுகளையும் நோக்கி அந்த வயல் கிராம மக்கள் ஓடிவிட்டிருந்தார்கள்.
எஞ்சி இருந்த பத்து பதினைந்து குடும்பங்களால்  மட்டுமே அந்த வெள்ளம்புட்டி கிராமம்  மக்கள் வாழும் ஊர்  என்ற அந்தஸ்த்தை  தக்கவைத்து கொண்டிருந்தது.  அவர்களின் ஒரே ஒரு பொழுது போக்கு இடமாக இருந்தார்  வெள்ளம்புட்டி  பிள்ளையார்.
அவருக்கு பூசை பண்ணுவதாக காலத்தை ஒட்டி கொண்டிருந்தார் சம்பு அய்யர்.
நடந்து கொண்டிருந்த உள் நாட்டு போர் திடீர் திருப்பமாக ஒரு வெளிநாட்டு போர் போன்று காட்சி அளிக்க தொடங்கியது .
ஒரே இரவில் இந்திய இராணுவம் அந்த வெள்ளம்புட்டியை சுற்றி வளைத்தது, மக்களுக்கு உடனடியாக எந்த ஆபத்தும் வரவில்லை. இரண்டு நாட்கள் ஆட்களை பதிவு செய்யும் வேலையை  இந்திய இராணுவம் செய்து முடித்தது. ஏராளமான கட்டுப்பாடுகளையும் பொது இடத்தில வைத்து அறிவித்தார்கள்.
ஒரு அசல் லாக் அப்பிற்குள் மாட்டிகொண்டு விட்டோம் என்று மக்களுக்கு  உறைத்தது !
உணவு உண்பதற்கு மட்டுமே மக்கள் வாயை திறக்க பழகி வெகு நாட்கள் ஆகிவிட்டதனால் அங்கு எந்த சத்தமும் பெரிதாக அல்ல சிறிதாக கூட எழவில்லை.

அவர்களின் மௌனத்தை மூன்று வேளையும் கலைத்து கொண்டிருந்தது சம்பு அய்யர் அடிக்கும் கோயில் மணியோசை.

பொதுவாகவே சம்பு அய்யரின் பூஜைக்கு அதிகம் மக்கள் செல்வதில்லை . பிள்ளையாரும் சம்புவும் மட்டுமே அந்த கோவிலின் கதாபாத்திரங்களாக  அந்த  நாடகம் நடந்து கொண்டிருந்தது.

மயான அமைதியை கிழித்து கொண்டு ஒலிக்கும் சம்பு அய்யரின் மணியோசை ஏனோ கோயில் அருகே இருந்த முகாமுக்குள் இருக்கும் இராணுவத்தின் நிம்மதியை கொஞ்சம் குலைத்தது ..
அதற்கு காரணமும் இருக்கிறது.
சம்பு அய்யர் நேரத்தை பற்றி எந்தவித தெளிவும் அற்றவர். தனது விருப்பமான நேரத்தில் கோயிலுக்கு வந்து மணி அடித்து பூஜை செய்வார்.
அவரின் நேர ஒழுங்கற்ற பூசையும்  அடிக்கும் மணி ஓசையும் ஏதாவது  செய்தியை போராளிகளுக்கு பரிமாறுகிறதோ என்ற பொல்லாத சந்தேகம் ஆமிக்காரர்களுக்கு வருவது இயல்பானதே.
ஒருநாள் வழக்கம்போல சம்பு அய்யர் கோவிலுக்குள் நுழையும் போதே கொஞ்சம் அதிகமான இராணுவம் சுற்றி நிற்பதை கண்டார். அடிவயிற்றை கலக்கியது . வெளியே காட்டி கொள்ளாமல் எல்லாரையும் பார்த்து வழக்கம் போல சிரித்து விட்டு பூசையை   ஒருமாதிரி நடத்தி முடித்தார்..

வரிசையில் நின்ற இராணுவத்தினரும் பயபக்தீயோடு விபூதி வாங்கி பூசினார்கள்.
அன்று வந்திருந்த மூன்று வழக்கமான  வயோதிபர்களும் மெதுவாக கோயிலை விட்டு வெளியே சென்றுவிட்டனர்.
புறப்பட இருந்த அய்யரை தடுத்து நிறுத்திய ஒரு இராணுவ வீரன் மிகவும் பணிவுடன் முகாமுக்கு வருமாறு அழைத்தான் .
முகாம் பெரியவர் சம்பு அய்யரை போன்ற ஒரு பார்ப்பனர்தான் என்றும் சம்புவோடு பேச அவர் ஆசைப்படுவதாக உண்மையாகவே சிரித்து கொண்டு கூறினான் . அவன் என்னவோ சிரித்து கொண்டுதான் கூறினான் . ஆனால் அது ஒரு யம தர்மராஜனின் சிரிப்பு போன்று  உணர்ந்தார் சம்பு அய்யர்.
முதல் தடவையாக சம்பு அய்யர் பிள்ளையாரிடம் மனதிற்குள் கும்பிட்டார் கெஞ்சினார்.
ஒரு பள்ளிகூடத்தை இராணுவ முகாமாக மாற்றி இருந்தார்கள் . அதற்குள் உள்ளே நுழையும் போதே சம்பு அய்யரின் மனம் மிகவும் நொந்தது ..
பட்டாம் பூச்சிகள் போல சிறுவர்கள் ஓடி விளையாடிய அந்த பள்ளிக்கூடம் இன்று பட்டுப்போன பாலைவனம் போல...  ஒரு இராணுவ வாடை வீசும் வனாந்திரமாக மாறி போய் இருந்தது .அய்யரின் மனம் மெதுவாக அழுது  மரத்து போனது.
அந்த இராணுவ பெரியவர் வெளியே வந்து சம்பு அய்யரை மிகவும் மரியாதையாக வாங்கோ  சுவாமி  வாங்கோ என்று அழைத்து கொண்டு உள்ளே போனார்..
அய்யரின் குடும்ப சூழ்நிலை எல்லாம் கேட்டுவிட்டு உங்களுக்கு என்ன உதவி தேவை என்றாலும் தயங்காமல் கேட்கலாம் என்று கூறினார்.
அவர் ஒரு உள்நோக்கமும் வைத்து பேசுவதாக தெரியவில்லை என்று அய்யர் எண்ணி கொண்டார்.
சுவாமி  தப்பா நினைக்காதீங்க நீங்கள் செய்யும் பூசையில் பல தவறுகள் இருக்கின்றன் .
நான் உங்களை போல ஒரு பரம்பரை குருக்கள்தான் .
உங்களுக்கு கொஞ்சம் கொஞ்சமாக சொல்லி தருகிறேன் சுவாமி என்று அவர் சொன்னதும் சம்பு அய்யருக்கு தூக்கி வாரிப்போட்டது,
இந்த ஆமி பெரியவரின் பார்ப்பன பின்னணி தனக்கு இப்படி ஒரு வில்லங்கத்தை தரும் என்று  சம்பு அய்யர் கனவிலும் எண்ணி இருக்க வில்லை ..
அடுத்த குண்டை மிகவும் மெதுவான குரலில் பார்ப்பன  ஆமி பெரியவர் தொடர்ந்தார் ..
அய்யா இனி நீங்கள் இங்கு எங்களோடைய இருக்கலாம் .
உங்களுக்கு நான் நிறைய விஷயங்கள் சொல்லி தருகிறேன் .
அதை விட முக்கியமான விஷயம் நீங்கள் இனி வீட்டிக்கு போய் வருகிறது எங்கள் பாதுகாப்பு பிரச்சனையோடு தொடர்பு உள்ள விஷயம் என்று கூறி முடித்தார்.
சம்பு அய்யர் அவசரம் அவசரமாக வாயை திறந்தார் .. அவரை முந்திக்கொண்டு பேசினார் ஆமி பெரியவர்.
அய்யா  கோயில் மணி ஒழுங்கான நேரத்துக்கு அடிப்பதில்லை அதனால் சிலருக்கு அதில் ஒரு சந்தேகம் வருகிறது .. எனக்கல்ல . எனக்கு உங்கள் மீது முழு நம்பிக்கை இருக்கிறது.
நீங்கள் தங்குவதற்கு நல்ல வசதி நாங்கள் செய்து தருகிறோம். மூன்று நேரமும் உங்கள் பூஜைக்கு எங்க ஆக்கள் கூடவே இருந்து உதவி செய்வார்கள் என்று கூறி முடிந்தார்.
தனக்கு முழுதண்டனையும் வழங்கப்பட்டு விட்டது  என்று  விளங்கி கொண்டார். மனதில் ஏற்பட்ட பயத்தை பாறாங்கல்லை முழுங்குவது போல் முழுங்கினார்.

அன்றைய இரவு முகாமில் ஒதுக்கப்பட்ட  ஒரு அறையில் நித்திரை என்ற பெயரில்  ஒரு மாதிரியாக  கழிந்தது.
காலை ஆறுமணியளவில் எழுந்து கோயில் கேணியடிக்கு சென்றார்.

அங்கு ஏற்கனவே சில ஆமிக்காரர் நின்றனர் . சம்பு அய்யரை கண்டதும் அவசரம் அவசரமாக கேணியில் இருந்து வாளியால் தண்ணீரை அள்ளி பெரிய பாரலில் நிரப்பினர்.
சுவாமி குளியுங்கோ என்று பஞ்சாபியோ ஹிந்தியோ கலந்த தமிழில் கேட்டு கொண்டனர்,
வசமாக மாட்டினார் சம்பு அய்யர்,  அவருக்கு  குளிப்பதென்றால் சுத்தமா பிடிக்காது .
மூன்று வேளையும் குளித்தது போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்தி கொண்டு விபூதி குறியெல்லாம் இட்டு ஒரு மேக்கப்போடு வாழ்ந்து வந்தார் அவர்,

இப்பொழுது அவர் உண்மையாகவே குளிக்க வேண்டி இருக்கிறது .. அதுவும்  மூன்று நேரமும் .. இந்த குளிர் தண்ணீரில் எப்படி குளிக்கபோகிறேனோ என்று அவர் மிகவும் குழம்பினார் .
பாதை வகுத்த பின்பு பயன்தென்ன லாபம் என்ற பாடல் வரிகளை எண்ணி கொண்டார்.
இந்த பிள்ளையார் தன்மீது ஏன் இப்படி வஞ்சம் தீர்க்கிறார் என்று  சம்பு அய்யர் கோபப்பட்டார்.
கோபம் கொண்டு என்ன நடக்க போகிறது?
இந்த ஆமி இங்கு இருக்கும் காலம் வரையில் தான் மூன்று நேரமும் குளிக்க வேண்டி இருக்குமே?
அவருக்கு நன்றாக தெரிந்தது தனக்கு பிடித்த சனி சாதாரண சனியல்ல என்பது.
இப்பொழுது பார்த்து இந்த வேலையை விட்டு போனால் பெரிதாக ஏதாவது சந்தேக படுவார்களே?
தான் முறையாக ஒரு  இடியாப்ப சிக்கலில் சிக்கிவிட்டதை உணர்ந்தார்,
அது மட்டுமல்ல கோயில் பூசைக்கு இப்போதெல்லாம் ஏராளமான ஆமிக்கார் வருகிறார்கள்..அதனால் மிகவும் கவனமாக பூசைகளை  செய்ய வேண்டி இருக்கிறது.

போதாக்குறைக்கு  பார்ப்பன ஆமி பெரிசு வேற தனது வேத வித்தை மகிமைகளை எல்லாம் தன்மீது சுமத்தி செய்யும்  கொடுமை  ..
அப்படி செய்யுங்கோ இப்படி செய்யுங்கோ .. சாமி ஸ்தோத்திரம் சொல்லுங்கோ இந்த அனுஷ்டானம் செய்யுங்கோ என்று செய்யும் அடாவடி சொல்லும் தரமன்று/

மூன்று வேளையும் குளிர குளிர குளிக்கவேண்டும் ...  உடம்பை வளைத்து தொண்டை எல்லாம் காய மந்திரம் எல்லாம் சொல்லவேண்டும் .
கையில் பிரம்புடன் நிற்கும் அடிகார வாத்தியின் முன்பு வீட்டு பாடம் செய்யாமல் பயந்து போய் நிற்கும் மாணவன் போலாகி விட்டது தனது வாழ்க்கை என்று அவர் மனம் நொந்து பிள்ளையாரை திட்டியும் கும்பிட்டும் காலைத்தை ஓட்டினார்.
நேற்றுவரை எந்த அரசியலும்  தெரியாமல் ஏதோ கோயிலுண்டு வயலுண்டு பிரசாதம் உண்டு என்று வாழ்ந்தவர் இப்போதெல்லாம் சர்வதேச அரசியல் மற்றும் உள்ளூர் அரசியல் மட்டுமல்ல இராணுவ ராஜதந்திர நகர்வுகள் பற்றி எல்லாம் சிந்திக்கலானார்.
வெள்ளம்புட்டி பிள்ளையார் கோயிலை விட்டு ஆமி எப்போது போகும் என்பது மட்டுமே அவரின் மனதில் இருந்த ஒரே கேள்வி இலட்சியம் எல்லாம் .
இரண்டு வருட குளிர் நீர் குளியலும் எக்கச்சக்கமான பூசை எக்சசைசும் சம்பு அய்யாரை துவைத்து போட்டு விட்டது.
காலம் அய்யருக்கு கருணை காட்ட தொடங்கியது . ராணுவம் வெளியேறும் செய்திகள் மெதுவாக உலா வரத்தொடங்கியது.
வெள்ளம்புட்டி பிள்ளையாருக்கும் ஒருநாள் விடுதலை கிடைத்தது.
ஆம் இந்திய ராணுவம் திரும்ப போகும் செய்தி சம்பு அய்யரின் காதில் தேனாக வந்து பாய்ந்தது .
சம்பு அய்யருக்கு அந்த இராணுவத்தினர் ஒரு வீடு கட்டி கொடுத்திருந்தார்கள். ஆனால் அதில் வசிக்கும் உரிமையை அவர்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக வழங்கி இருக்கவில்லை.
அய்யர் துரும்பாக இழைத்து போயிருந்தார் .
தன்னால் இனி பூசை காரியங்களில் ஈடுபட முடியாது என்று ஊர் மக்களிடம் தெரிவித்தார்.
பூசைக்கு ஆள் பிடிப்பது என்பது இலகுவான காரியம் அல்ல .எல்லோரும் வெளிநாடுகளுக்கு போய்விட்டார்கள். பார்ப்பனர் அல்லாத உள்ளூர் பூசாரிகள் ஏதோ செய்து சமாளித்து கொண்டிருந்தார்கள்.

இராணுவ முகாமில் இரண்டு வருடம் வசித்த சம்பு அய்யரை தேடி தினமும் ஏராளமான அயல் மக்கள் வரலாயினர்.
சம்பு அய்யருக்கு மக்களிடம் கூறுவதற்கு ஏராளமான செய்திகள் இருந்தது.
எதை கூறலாம் எதை கூறக்கூடாது என்ற கலையில் அவர் தற்போது ஒரு அனுபவசாலி ஆகியிருந்தார்.
சம்பு அய்யரை மூன்று வேளையும் குளிர குளிர  குளிக்க வைத்து  பூசையையும் நடத்தி வைத்த வெள்ளம்புட்டி பிள்ளையாரின் மகிமையை எண்ணி பலரும் தமக்குள் சிரித்து கொள்வது அய்யருக்கும் தெரிந்தே இருந்தது.!

கருத்துகள் இல்லை: