திங்கள், 1 மே, 2017

3 கோபுரம் கழுவப்போன தீவட்டிகள் - பாலாவோரை - - யாகவேள்வியும் சோமபானமும்

பாலாவோரை புதிய அரசனாகிவிட்ட தம்பி குலதிலகனுக்கு கூடா நட்புகள்
ஏராளம் உண்டு. அவர்களின் கபட நோக்கங்களை அறியக்கூடிய ஆழ்ந்த அறிவு அவனிடம் இல்லை . கோவில் கட்டுமான ஆலோசனைகளை பற்றி அவனுக்கு ஆலோசனை கூறுபவர்கள் எல்லோருமே குலதிலகனின் மனம் எதை விரும்புகிறதோ அதையே தங்கள் ஆலோசனைகளாக வழங்கினர். அவர்களின் ஒரே நோக்கம் அரசனை குளிர்வித்து அவனிடம் இருந்து  காணிக்கைகளை பெறுவதுதான். .அவர்கள் ஒருவருக்கும் பாக்கியதம்மாளிடம் மட்டுமல்ல யாரிடமும் நல்ல பெயர் இல்லை.
எதிர்காலத்தில் பாக்கியத்தம்மாளின் கையோங்கி விட்டால் தங்களின் நாற்காலிகள் காலியாகிவிடும் என்பதை அவர்கள்  நன்கு உணர்ந்துள்ளனர்.  நாட்டின் பெரும் பகுதி செல்வம் வழுக்கியாற்று குளம் கட்டுவதற்கே பயன்பட்டால் அது பாக்கியத்தமாளின் செல்வாக்கை உயர்த்திவிடும் என்று பயந்தார்கள்.  அது நடந்து விடக்கூடாது என்பதற்காகவே நேமிநாதர் கோவில் ஆசையை அவனின் உள்ளத்தில் விதைத்து விட்டிருந்தனர். அவர்களின் வஞ்சக நோக்கம் ஓரளவு  நிறைவேறி கொண்டு இருந்தது.

இந்த  வஞ்சகர்கள் குலதிலகனை முன்னே நிறுத்தி அவனுக்கு பின்னால் இருந்து கொண்டு பாக்கியதம்மாளுக்கு எதிரான வியூகங்களை வகுத்து முன்னேறி வருவதை பாக்கியத்தமாள் உணர்ந்தே இருந்தாள்.

ஆனால் அதை எப்படி தடுத்து நிறுத்துவது  என்று அவள் பலவாறாக சிந்தித்தாள். தனக்கு மிகவும் நம்பிக்கையான அமைச்சர்கள்  அறிஞர்கள் போன்றோரிடம் மீண்டும் மீண்டும் கலந்து ஆலோசித்து மெதுவாக தனது  வியூகங்களை வகுக்கலானாள்.

போதிய நிதிவளம் மட்டும் அல்லாது தங்கு தடையின்றி பணியாளர்களின் சேவையும் கிடைத்தாக  வேண்டிய ஒன்றாகும். பணியை கோடை காலத்தில் மட்டுமே செய்யமுடியும்.  மழைக் காலங்களில் கட்டுமான பணியை  மேற்கொள்ள முடியாது . ஆனாலும் மழைக்காலத்தில் பணியாளர்கள் வேறு பணிகளுக்கு சென்று விடாமல் இருப்பதற்கு அவர்களுக்கு; ஏதாவது பணிகளை வழங்கி அவர்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்தாகவேண்டும்.

கட்டுமான பணிகள் நிறைவேறும் வரை அவர்கள் வேறு பணிகளுக்கு சென்றுவிடாமல்  இருப்பதற்கு அவர்களோடு ஒரு உடன்பாட்டுக்கு வரவேண்டும். அது மட்டும் அல்லாமல்  மழைக்காலங்களில் அவர்களுக்கு கண்டிப்பாக பணி வழங்க வேண்டும். பெரிய பெரிய கொட்டகைகள் அமைத்து பலவிதமான தொழில்கூடங்களையும் அங்கு உருவாக்கவேண்டும். வீட்டுக்கு தேவையான தளவாடங்கள் பாத்திரங்கள் மற்றும் பாதுகாப்பு கருவிகள் உழவுத்தொழிலுக்கு தேவையான கருவிகள் போன்றவற்றை செய்யும் பணிகளை அங்கு மேற்கொள்ளவேண்டும். அதற்கு உரிய திட்டங்களை ஏராளமான அரண்மனை நிருவாகிகள் மற்றும் தொழித்துறை அறிஞர்களோடு ஒரு நிர்வாக குழுவை நியமித்தாள்.

மறுபுறத்தில் தம்பி குலதிலகன் தனது விருப்பத்துக்கு உரிய ஆலோசகர்களோடு நேமிநாதர் கோவில் கட்டுமான திட்டங்களை பற்றி இரவு பகலாக விவாதித்து ஒரு முடிவை எட்டியிருந்தான். அவர்களின் சமண வழக்கப்படி நேமிநாத தீர்த்தங்காரர் கோவிலுக்கு உள்ளூர் திகம்பர துறவிகள்தான் முன்னின்று கோபுரம் கழுவி பூசையை ஆரம்பித்து வைப்பார்கள். இந்த வழக்கத்தை மாற்ற   பாலாவோரை பெரிய கூட்டான் இளவரசன் குலதிலகன் முடிவுசெய்தான். இந்த முடிவு எல்லோருக்கும் பெரும் அதிர்ச்சியாக இருந்தது.
அண்மைக்காலமாக வடநாடுகளில் இருந்து வருகை தந்த பார்ப்பனர்கள் கோவில்களிலும் அரண்மனைகளிலும் பர்ணசாலைகளிலும்
ஆடு மாடு குதிரை போன்றவைகளை பலி கொடுத்து அதை யாகம் என்று கொண்டாடினார்கள் . அந்த யாகத்தின் இறுதி நிகழ்ச்சியாக சோமபானம் வழங்கப்படும் .இங்கு வழங்கப்படும் சோமபானம் மிகவும் உள்ள கிளர்ச்சி அளிக்க கூடிய உற்சாக பானமாகும். பாலாவோரை வாழ் மக்கள் மட்டும் அல்லாது பெரும்பான்மையான  திராவிட தேசமக்கள்  மத்தியில் யாகங்களில்  வழங்கப்படும் இறைச்சி கறியும் சோமபானமும் மிகவும் வரவேற்பை பெற்றது.
மக்களைவிட அரசன் குலதிலகனே யாகத்திலும் பானத்திலும் அதிகமாக  கவரப்பட்டான் எனலாம் .
பார்ப்பனர்களின் யாகமும் சோம பானமும் ஏராளமான மக்களை கவரும் என்று எண்ணினான் .அதன் மூலம் கோவிலுக்கு அதிக நிதி வரவு ஏற்படும் என்றும் அவனது குள்ளநரி புத்திக்கு எட்டி இருந்தது.

புதிய வரவான வடநாட்டு பார்ப்பனர்கள் மீது சமண வழிபாட்டு மக்கள் இடையே ஒரு ஈர்ப்பு உருவாக்கப்பட்டிருந்தது.
திகம்பர துறவிகளின் கொல்லாமை, இவ்வுலகின் நிலையாமை போன்ற கருத்துக்களை விட பார்பனர்கள் அறிமுகப்படுத்திய  மாமிச யாகம் சோமபானம் போன்றவை அரச குடும்பங்களையும் உயர்தட்டு மக்களையும் வெகுவாக கவர்ந்தது.
இந்த காலகட்டத்தில் தான் வடநாட்டு பார்பனர்கள் தங்களின் சாதிபாகுபாட்டு  கருத்துக்களை திராவிட தேசத்திலும் மெதுவாக பரப்ப தொடங்கினார்கள்.
அரச குடும்பங்களுக்கும் இதர செல்வந்தர்களுக்கு இந்த சாதிகள் பற்றிய கோட்பாடுகள் மிகவும்   கவர்ச்சிகரமாக காட்சி அளித்தது.  மிக சிறிய அளவிலேயே உள்ள பார்ப்பனர்களை மிகவும் உயர்ந்தவர்களாக காட்டி விட்டு அடுத்தடுத்த ஸ்தானங்களை தாங்கள் நிரந்தரமாகவே சமுகத்தில் ஏற்படுத்தி விடலாம்.  எப்படி தலைகீழாக  கணக்கு பண்ணி பார்த்தாலும் தாங்கள்தான் சமுகத்தில் இனி நிரந்தர ஆட்சியாளர்கள். தங்கள் சந்ததிதான் இனி உலகம் உள்ளளவும் ஆண்ட பரம்பரை என்ற முடிவுக்கு வந்தார்கள்.

இந்த ஆதிக்க ஆசைகொண்ட கூட்டம் சமண துறவிகளிடம் இருந்து கோவில்களை பெற்று பார்பனர்கள் கையளிப்பதற்கு முடிவு செய்தனர்.
சமண வழிபாட்டை விட பார்பனர்கள் மூலம் செய்யப்படும் வழிபாட்டு முறையே உயர்ந்தது என்று மக்கள் மத்தியில் தங்கள் பிரசாரத்தை ஆரம்பித்து வைத்தனர்.  தனது சவக்குழியை தானே வெட்டும் கொடிய செயலை தங்களது குறுகிய நோக்கத்திற்காக தொடக்கி வைத்தனர்.
கோவில்களில் பூசைக்கு நியமிக்கப்படும் பார்பனர்களுக்கு நன்றாக விளையக்கூடிய நல்ல நிலங்களாக பார்த்து மக்களிடம் இருந்து பறித்து தானமாக கொடுக்க தொடங்கினார்கள்.

இந்த அநியாயம் கண்முன்னேயேநடப்பதை காணசகிக்காமலோ என்னவோ பெரியவரசு நோய்வாய்ப்பட்டு கண்ணைமூடினார்.அவரை தொடர்ந்து சில மாதங்களுக்குள்ளேயே  பேராட்டியும் கணவனோடு போய் சேர்ந்துவிட்டார்.
தனித்து விடப்பட்ட  பாக்கியத்தம்மாள் தலையில்  ஏராளமான சுமைகள் வந்து சேர்ந்துவிட்டது.
பெரியவரசு இருக்கும்வரையில் தம்பி குலதிலகனின்  கூட்டம் கொஞ்சம் அடங்கி இருந்தது. இப்போது  அவர்களின் ஆட்டமோ  பேயாட்டமாக  உருவெடுத்துவிட்டது.
வழுக்கியாற்று குளகட்டுமான பணியாளர்களுக்கு  ஆசைவார்த்தை கூறி அவர்களை கோவில் திருப்பணிக்கு அழைப்பதற்கு உரிய சதியாலோசனையில் அவர்கள் ஈடுபட்டார்கள்.
அவர்களின் சதியை முறியடிக்கவேண்டும்.. திராவிட மக்களின் சமண கூடங்கள் பார்ப்பனர்களின் கைகளிற்கு போய்விடப்போகிறதே? பாக்கியத்தம்மாளால் எல்லாவற்றையும் எதிர்கொள்ள போகிறாள்?  நிச்சயம் எதிர்கொண்டு வெற்றி பெற்றே ஆகவேண்டும்!
இப்பொழுதான் முதல் தடவையாக தனது பாதுகாப்பை பற்றி யோசிக்க தொடங்கினாள். சுற்றிலும் கண்ணுக்கு தெரியாத எதிரிகள் சூழ்ச்சி வலைகள் பின்னுவதை உள்ளுணர்வு சொல்ல்லிற்று. வாளாவிருக்கலாமா?
தனது குதிரைலாயத்தை சுற்றி வந்தாள்.அவளது குதிரைகள் அவளின் செல்ல குழந்தைகள் மட்டுமல்ல அவை  விசுவாசமான படைவீர்களும்கூட.! எதிரிகளை எத்தனை அடி பாய்தாலும் அவர்களை விட ஒரு அடியாவது அதிகம் பாய்ந்தே தீரவேண்டிய வரலாற்று கடமை முன்னே தெரிந்தது.

கருத்துகள் இல்லை: