திங்கள், 1 மே, 2017

16 கோபுரம் கழுவப்போன தீவட்டிகள் - பாலாவோரை - 16 . கண்ணீருக்கு கவசம் போட்ட மழைநீர் c

நடக்கும் சம்பவங்களை பார்க்கும் போது குலதிலகன் மெதுவாக தனிமை
படுத்தப்படுவதாக மேனகா பிராட்டிக்கு தோன்றியது. அவன் மிக வேகமாக தோற்று கொண்டிருக்கிறான் என்று அவளுக்கு தோன்றியது.  எதுவிதத்திலும் ஆலோசனை கூறமுடியாத ஒரு சூழ்நிலை கைதிகளாக அவனும் தானும் இருப்பதாக எண்ணினாள்.
அவளின் சுயநலத்தையும் மீறி ஒரு காதல் அவளுக்குள் பூத்திருந்தது.  அரசனை பார்க்கும் போதெல்லாம் இப்போது கண்ணீர் விட்டாள்.
சுயநலத்தால் அவனை சதா தழுவிகொண்டிருந்த மேனகை முதல் தடவையாக அவனுக்காக மனதிற்குள் அழுதாள்.   மழைச்சாரல் முகத்தில் விழுந்து அவள் கண்ணீருக்கு கவசம் போட்டு கொண்டிருந்தது. 
ஒரே இரவில் பாலாவோரை எங்கும்  வெள்ளகாடாகி விட்டது. அரண்மனையும் இதர குடி மனைகளும் பெரும் வெள்ளத்தில் அல்லோகல்லோலப்பட்டு கொண்டிருந்தன. மழையோ தொடர்ந்து பொழிந்து கொண்டே இருந்தது. இப்படி ஒரு மாரிமழையை கடந்த இருபது ஆண்டுகளில் அவர்கள் கண்டதே இல்லை.  புதிதாக வந்து சேர்ந்துள்ள பார்ப்பனர்களுக்கு இந்த மழை ஒரு  பெரும் சோதனையாகிவிட்டது.
அவர்கள் தங்கி இருந்த கூடாரங்கள் மழை வீச்சுக்கு ஈடு கொடுக்க முடியாமல் ஆட்டம் கண்டது . ஆமானப்பட்ட அரண்மனைகளும் மாடமாளிகைகளும் மழையால் நனைந்து கொண்டிருக்கையில் இவர்கள் தங்கிருந்த கூடாரங்கள் மழை நீரில் தோற்று போனமை ஒரு அதிசயம் அல்லவே?
மழையானது தனது ஆட்டத்தை ஆரம்பித்து உச்சகட்டத்தை நெருங்கி கொண்டிருந்தது.

மழையின் ஊழி ஆட்டத்தை தங்கள் மேடையில் மீது ஏற்றி ஒரு அரசியல் நாடகத்தை அரங்கேற்றி கொண்டிருந்தார்கள் அக்கையும் நம்பியும்.
மழையை எதிர்பார்த்து முன் ஏற்பாடுகள் அனைத்தையும்  செய்து விட்டு  காத்திருந்த நம்பியும் அக்கையும் படுவேகமாக இயங்கினார்கள்.
சதா மதுபோதையிலும் பார்ப்பன அழகிகளின் அரவணைப்பிலும் தூங்காமல் தூங்கி கொண்டிருந்த குலசேகரனின் அமைச்சர்களும் பணியாளர்களும்  மிகவும் செயலற்ற வேற்று மனிதர்களாக காட்சி அளித்தனர்.
முதல் தடவையாக நிலைமையின் கேவலம் பேராவூர் அரசன் குலசேகரனுக்கு புரியதொடங்கியது .
அவனின் பணியாளர்களையும் அமைச்சர்கள் ஆலோசகர்களையும் பார்க்கும்போது அவன் தன்னையே நொந்துகொண்டான்.
அக்கையாரின் ஆலோசகர்களும் நம்பியின் பணியாளர்களும் மிகவும் உயர்ந்த அறிவும் நேர்த்தியான வினைத்திறனும் மிக்கவர்களாக தெரிந்தார்கள்.
அவர்களின் உதவி மிகவும் தேவையாக இருந்தது. தான் மெதுவாக அவர்களின் உதவியை நாடும் ஒரு நிலைக்கு தள்ளப்பட்டு விட்டதை உணர்ந்து கொண்டான்.

முதல்தடவையாக தனது அரச பரிபாலனம் மிகவும் தவறான ஒரு பாதையில் சென்று கொண்டிருப்பதை நேரடி காட்சியாக கண்டு கொண்டான்.
அவனோடு இருந்த பார்ப்பன அழகிகள் குலசேகரனை பற்றி கொஞ்சம் கூட எண்ணி பார்க்காமல் இதர பார்பனர்களுக்கு ஒதுக்கப்பட்ட மாளிகைகளுக்கு சென்று விட்டனர். மேனகை பிராட்டியார் மட்டும் ஏனோ குலசேகரனை விட்டு பிரிய மனமில்லாமல் அவனோடு தங்கினாள்.
மழை நீரில் பாதி நனைந்தும் நனையாமலும் குளிரில் கொஞ்சம் நடுங்கிவாறு பார்ப்பனர்கள் படு வேகமாக தங்கள் மூட்டை முடிசுகளுடன் நம்பியின் வண்டில்களில் ஏறும் காட்சியை கண்டபொழுது இவர்கள் என்ன இப்படி ஒரு சுயநலவாதிகளாக இருக்கிறார்களே என்று எண்ணி கொண்டான்.
இவர்கள் எப்பொழுதும் தங்கள் மீது ஒரு தூசியும் படாமல்  சொகுசாக வாழ்ந்து  விடுவார்கள் என்று  தோன்றிற்று.
இந்த உண்மைகளை தெரிந்து கொள்ள அவன் எவ்வளவு பெரிய விலையை கொடுத்து விட்டான் என்பதை இனி வருங்காலம் அவனுக்கு சொல்லி தரும்.
பாலவோரையின் கம்பீரமான ஒரு அரசனாக இருந்தும் இப்போது எல்லாவற்றிற்கும் அக்கையாரையும் நம்பியையும் தங்கி இருக்க வேண்டி இருக்கிறதே என்ற எண்ணம் அவனின் வருத்தியது .    
அக்கையாரிடம் எல்லாவற்றிக்கும் கைநீட்ட வேண்டி இருக்கிறதே என்று கவலைபட்டான்.
வாழ்க்கையில் முதல் தடவையாக இந்த உணர்வு அவனுக்கு ஏற்பட்டது.அக்கையாரும் நம்பியும் என்ன கூறினாலும் அதற்கு  செவிசாய்க்கும் மன நிலையில் அவன் இருந்தான்.
பேராவூர் அரசன் குலதிலகனின் மனதில் ஓடும் எண்ணங்களை ஒவ்வொரு கணமும் உற்று அவதானித்தபடியே இருந்தனர் பாக்கியத்தம்மாளும் புத்தூர் நம்பியும்.
புத்தூர் நம்பியின் குதிரை வண்டிகளும் மாட்டு வண்டிகளும் பார்ப்பனர்களை ஏற்றி கொண்டு உரிய இடங்களுக்கு சென்று கொண்டே இருந்தன.
மறுபுறம் நம்பியின் பணியாட்களின் உத்தரவுகளுக்கு ஏற்ப அரசனின் பணியாளர்களும் சேர்ந்து கூடாரங்களையும் அங்கு அடுக்கி வைத்திருந்த கட்டுமான பொருட்களை உரிய இடங்களுக்கு அப்புறப்படுத்தினர்.



குலதிலகனின் படைகள் மற்றும் அமைச்சர்கள் ஆலோசகர்கள் அடங்கிய   கூட்டமானது ஒரு காட்சி பொருளாகவே இருந்தது. அவர்களால் உருப்படியான எந்த பயனும் நாட்டுக்கோ அரசனுக்கு கிடையாது. சதா குலதிலனை புகழ்ந்து அவனை ஒரு இருட்டில் வைத்து தங்கள் சொந்த  நலன்களை மட்டுமே பேணினார்கள்.
குலதிலனின் அரசு மிகவும் பலவீனமான நிலையில் இருப்பதை உறுதிப்படுத்தினர்  அக்கையரும் நம்பியும்.
பார்ப்பன மாயையில் இருந்து பாலவோரையை மீட்டுவிடும் தங்கள் திட்டத்தின் அடுத்த கட்டத்திற்கு வந்து விட்டோம் என்பதை உணர்ந்து கொண்டனர்.
பலவீனமான படையை மிரட்டியும் விலைக்கு வாங்கியும் அடக்கிவிடும் முயற்சியில் நம்பியின் படைகள் முழு மூச்சுடன் ஈடுபட்டனர், கணிசமான வெற்றியும் அடைந்திருந்தனர்.
 
பார்ப்பனர்களோ மிகவும் தூரத்தில் இருக்கும் மாளிகைகளில் தங்க வைக்கப்பட்டு இருந்தார்கள்.
ஒரு வாரத்திற்கு மேலாகியும்  அரண்மனை கூரை சீராக்கும் பணிகள் தொடர்ந்த வண்ணமே இருந்தது. நீண்ட காலமாக சரியாக பராமரிக்காத காரணத்தாலோ என்னவோ அவற்றை சீராக்குவது அவ்வளவு எளிதாக இருக்கவில்லை. அல்லது அவை அவ்வளவு எளிதான காரியம் அல்ல என்று பேராவூர் அரசன் குலதிலகனை நம்பவைக்கும் முயற்சி நடைபெற்று கொண்டிருந்தது.
மேனகா பிராட்டியாருக்கு அரண்மனையில் நடக்கும் சில காரியங்கள் கொஞ்சம் சந்தேகம் தருவனவாக தோன்றியது.
பார்ப்பனர்களின் திடீர் இடமாற்றம் அவளுக்கு தற்போது சந்தேகத்தையும் கொஞ்சம் பயத்தையும் கொடுத்தது. மழையும் பெருமளவு ஓய்ந்து விட்டது. ஏன் இன்னும் பார்ப்பனர்கள் திரும்பி வரவில்லை?
கூடாரங்களை மீளமைப்பதில் தாமதம் ஏற்படுவது சந்தேகத்தை கொடுத்தது.
அரசனுக்கு தனது சந்தேகங்களை அல்லது பயத்தை தெரிவிப்பதற்கு அவள்  அஞ்சினாள். காரணம் கண்ணுக்கு தெரிந்த இடத்தில் எல்லாம் பாக்கியத்தமாளின் அமைச்சர்களும்  புத்தூர் நம்பியின்  பணியாளர்களும் நிறைந்து காணப்பட்டனர்.
எங்கே போய்விட்டனர் பேராவூர் குலதிலகனின் பணியாட்களும் அமைச்சர் பெருமக்களும்?
மாரி மழையில் அவர்கள் எல்லோரும் அள்ளுண்டு போய்விட்டனரோ? என்று பலவாறு மனதை குழப்பும் கேள்விகளுக்கு பதில் தேடவும் பயந்து போயிருந்தாள்.
குலதிலகனும் ஏதோவொரு திக்பிரமையில் இருந்து விடுபட முடியாதவனாக காணப்பட்டான்.
அவனை சுற்றி மாறி மாறி அக்கையரும் நம்பியும் அவர்களது அமைச்சர் பெருமக்களும் சதா மொய்த்து கொண்டிருந்தனர்.

பாலாவோரையின் பெருமழை ஓய்ந்துவிட்டது. ஆங்காங்கே சிறு மழை பெய்தவண்ணம் இருந்தது.
குலதிலகனின் அரண்மனையை செப்பனிட வந்த பணியாளர்கள் அரண்மனையை அடியோடு மாற்றி விடுவது போல ஏராளமான தூண்களை பெயர்த்து கூரைகளையும் கழற்றி ஏதேதோ  நிர்மாணப்பணிகளை செய்து கொண்டிருந்தனர். அவர்கள் வேண்டும் என்றே காலத்தை கடத்துகிறார்கள் என்ற சந்தேகம் தற்போது மேனகா பிராட்டிக்கு ஏற்பட்டது.
குலதிலனகன் என்ன சிந்திக்கிறான் என்ன செய்கிறான் என்று மக்களிடையே பெரிய பெரிய கேள்விகள் உருவாக்கி கொண்டிருந்தன.
பெருமழை ஓய்ந்து முப்பது நாட்கள் ஓடிவிட்டன. மழைக்கு ஒதுங்கி போன பார்ப்பனர்கள் என்னவானார்கள் என்ற கேள்வியும் பலருக்கும் எழுத்தன.
இந்த கேள்விகளுக்கு எல்லாம் பதிலை தேடவே மக்கள் பலரும் பயந்தார்கள்.
பாலாவோரையின் முழு அரச கருமங்களும் பாக்கியத்தம்மாளின் கட்டுப்பாட்டிலே உள்ளதோ என்ற சந்தேகம் எல்லோருக்கும் ஏற்பட்டு விட்டது.
நேமிநாதர் கோவில் திருப்பணிக்கு உரிய கருவிகள் பலவும் அரண்மனை கட்டிட சீரமைப்பு பணியாளர்களிடம் ஒப்படைக்க பட்டிருந்தது.
நடக்கும் கருமங்கள் எல்லாம் தன்னை மீறியே நடப்பதாக குலதிலகன் கலக்கம் அடைந்தான்.
மனம்  பித்து பிடித்தவன் போலானான். அக்கையரை பார்த்ததும் ஏதோதோ சம்பந்தம் சம்பந்தம் இல்லாமல் பேசினான்.  அவனின் தற்போதைய போக்கு அவன் மெல்ல மெல்ல ஒரு உளவியல் தாக்கத்திற்கு உள்ளானது போல தெரிந்தது.  ஊர்மக்கள் பலரும் அரசனின் பிதற்றல்களை பேசத்தொடங்கி இருந்தனர்.  அரண்மனை பணியாட்கள் மூலம் அவனது இன்றைய நிலை ஊரெங்கும் பரவி இருந்தது.
ஒரு பெருமழை வந்து இப்படி பாலவோரையின் சகல விடயங்களையும் புரட்டி போட்டுவிட்டது. இது உண்மையில் சாத்தியமா? ஒரு மழைக்கு இவ்வளவு பலம் இருக்குமா? மழைக்கு பின்னால் ஒரு சதி மறைந்து இருக்குமா?
மேனகா பிராட்டியின் மனதில் சந்தேகம் எழுந்தது. குலதிலகன் இப்படி அக்கையாரிடம் ஏமாந்து விட்டானே என்று எப்படி குலதிலகனுக்கு விளங்க வைக்க முடியும்?        
  .  
      

கருத்துகள் இல்லை: