வெள்ளி, 26 ஆகஸ்ட், 2016

சீனி மாமாவும் யார்ட்லி சோப்பும்

1968..  கிளிநொச்சியில் இருந்து ராமநாதபுரம் போகும் பேருந்து திருவையாறு ஹட்சன் ரோடு சில்வா ரோடு ஆறுமுகம் ரோட்டு மற்றும் தருமபுரம் வழியாக புழுதியை கிளப்பி கொண்டு சென்றது .
அந்த பேருந்தில் வெய்யிலும் புழுதியும் பதம் பார்த்த விவசாயிகள் மூட்டை முடிசுகளோடு ஏறுவது இறங்குவதுமான காட்சி உயிர்த் துடிப்போடு ஓடிக்கொண்டு இருந்தது.
ஆறுமுகம் ரோட்டில் இறங்கிய சீனிமாமா தனது மூட்டை முடிச்சுகளை கவனமாக எடுத்து கொண்டு விறு விறுவென்று தனது வீட்டை நோக்கி நடந்தார்.
சீனிமாமாவின் பொதிகளில் இருந்து வரும் யார்ட்லி சோப்பின் வாசனை ஏனைய பயனிகளையும்கூட கொஞ்சம் தழுவி செல்லும்.
 சீனிமாமாவின் வாழ்க்கை கொஞ்சம் வித்தியாசமானது. பழக்க வழக்கங்களில் கொஞ்சம் ராணுவ மிடுக்கு இருக்கும். அனேகமாக எதற்கும் இலகுவில் தனது பழக்க வழக்கங்களை அல்லது கோட்பாடுகளை மாற்றி கொள்ள மாட்டார்.