வெள்ளி, 26 ஆகஸ்ட், 2016

சீனி மாமாவும் யார்ட்லி சோப்பும்

1968..  கிளிநொச்சியில் இருந்து ராமநாதபுரம் போகும் பேருந்து திருவையாறு ஹட்சன் ரோடு சில்வா ரோடு ஆறுமுகம் ரோட்டு மற்றும் தருமபுரம் வழியாக புழுதியை கிளப்பி கொண்டு சென்றது .
அந்த பேருந்தில் வெய்யிலும் புழுதியும் பதம் பார்த்த விவசாயிகள் மூட்டை முடிசுகளோடு ஏறுவது இறங்குவதுமான காட்சி உயிர்த் துடிப்போடு ஓடிக்கொண்டு இருந்தது.
ஆறுமுகம் ரோட்டில் இறங்கிய சீனிமாமா தனது மூட்டை முடிச்சுகளை கவனமாக எடுத்து கொண்டு விறு விறுவென்று தனது வீட்டை நோக்கி நடந்தார்.
சீனிமாமாவின் பொதிகளில் இருந்து வரும் யார்ட்லி சோப்பின் வாசனை ஏனைய பயனிகளையும்கூட கொஞ்சம் தழுவி செல்லும்.
 சீனிமாமாவின் வாழ்க்கை கொஞ்சம் வித்தியாசமானது. பழக்க வழக்கங்களில் கொஞ்சம் ராணுவ மிடுக்கு இருக்கும். அனேகமாக எதற்கும் இலகுவில் தனது பழக்க வழக்கங்களை அல்லது கோட்பாடுகளை மாற்றி கொள்ள மாட்டார்.

செவ்வாய், 22 மார்ச், 2016

சிவநந்தினி.....தகுதியற்ற ஒரு மனிதகூட்டம்

சென்ற மாதம் ஒரு ஊருக்கு பிதிர்கடமை செய்வதற்கு நான் போயிருந்தேன். அது ஒரு இளம் பெண்ணின் ஆத்மா சாந்தி பூஜை,
நான் வெறும் பார்ட் டைம் பூசாரி மட்டும்தான்.
வழக்கமாக இது போன்ற காரியங்கள் நான் செய்வதில்லை.எனக்கு அதிக அனுபவம் கிடையாது. ஏனோ வெகு தொலைவில் இருந்து தேடி வந்தார்கள்.
அவர்கள் ஊரில்தான்  ஏராளமாக பூசாரிகள் இருப்பார்களே?
 அந்த ஊர் பிரமுகர் வைத்தியநாதன் வீட்டுக்கு வருமாறு சிலர் என்னை வந்து அழைத்தார்கள்.
சுமார் ஐம்பது கிலோமீட்டர்களுக்கு அப்பால் இருந்து தேடிக்கொண்டு வரவேண்டும் என்பது ஏன் என்று எனக்கு அன்று விளங்கவில்லை.    அது பற்றி கேட்டதற்கு ஏதேதோ பதில்கள் சொன்னார்கள் ஆனால் அவை தெளிவானதாக இருக்கவில்லை. எனக்கு பணம் வந்தால் சரிதானே ஏன் வீண் கேள்விகள் என்று பேசாமல் இருந்துவிட்டேன்.

சனி, 9 ஜனவரி, 2016

ராமனும் ஜாலியாக சனியன் விட்டது...விருந்து களியாட்டங்கள்...

ராமன் ஒரு பணக்கார வீட்டு விளையாட்டு பிள்ளை. பணக்கார அமைச்சர்களின் மகன்களை போல் ஒரு அடாவடி உதவாக்கரை பையனாக இருந்தான் .மது மாது மற்றும் கேளிக்கை விடுதி வில்லங்கங்கள் என ஜாலியாக திரிந்தான். தசரதன் எவ்வளவோ முயற்சி செய்தும் ராமனை ஒரு பொறுப்புள்ள அரச வாரிசாக உருவாக்கவே முடியவில்லை.
பெரும் பிரயத்தனம் செய்து . தங்கள் அந்தஸ்த்துக்கு சமமான ஜனக மகாராஜாவின் புத்திரியான சீதையை கண்டுபிடித்தனர். அவளை  எப்படியாவது ராமனுக்கு திருமணம் செய்து வைத்தால் ராமன் வழிக்கு வந்து விடுவான் என்று பல ஜால்ராக்கள் உபதேசம் செய்யதனர்.
சீதையின் சுயம் வர செய்தியும் வந்து சேர்ந்தது. இங்குதான் சுயம்வரம் என்ற பெயரில்  வில்லங்கம் வந்தது. ராமன் சுயம்வரத்தில் வெல்லகூடிய அளவு பெரும் அழகனோ  திறமைசாலியோ இல்லை. தசரதன்  சீதையின் மனதில் ராமனை பற்றி நல்ல விதமாக சொல்லிவைக்க சிலரை ஏற்பாடு செய்தான். இந்த தந்திரம் நன்றாக வேலை செய்தது. அடிமை சமுகத்தில் இது ஒன்றும் பெரிய காரியம் இல்லை. பணம் வருமென்றால் எதுவும் செய்ய தயாரான கூட்டம் தாராளமாகவே இருந்தது. அப்படி தப்பு தகவல் கொடுக்கப்போன வதந்தி கூட்டம் அந்த சீதைக்கு ஏற்கனவே ஒரு காதலன் இருப்பதாக அரசல் புரசலாக அறிந்தது. இது தசரதனுக்கு நல்ல செய்தி இல்லையே . எனவே அவர்கள் எல்லோரும் கப் சிப் என்று வாயை முடிக்கொண்டு விட்டனர். போதாக்குறைக்கு சீதை பற்றி இல்லாதது பொல்லாததாக தங்கள் பங்குக்கு போலி புகழுரைகளை வேறு அள்ளி வீசி விட்டனர் .