வெள்ளி, 12 ஜூலை, 2019

குஞ்சு பணிக்கன் வளவு

குஞ்சு பணிக்கன் வளவில் மிளகாய் மூட்டைகள் எக்கச்சக்கமாக அடுக்கி
வைக்கப்பட்டிருந்தது . சென்ற வாரம் மலையாள வியாபாரிகள்  வண்டிகளில் கொண்டு வந்து இறக்கிவிட்டு போனார்கள்
வந்து சேர்ந்த மிளகாய் மூட்டைகளை குஞ்சு பணிக்கரும்  கூட்டாளிகளும் அளந்து பனை ஓலைகளால் சிறு சிறு பொதிகளாக   கட்டி கொண்டிருந்தனர்.
இந்த மிளகாய் மூட்டைகள் எல்லாம்  கொச்சியில் இருந்து வள்ளங்கள் மூலம் வந்தவையாகும் . இன்னும் இரண்டு மூன்று நாட்களில் வந்த வள்ளங்கள் வெற்றிலையையும் வைக்கோலையும் நிரப்பி அடுக்கி கொண்டு மீண்டும் மலையாள தேசத்துக்கு சென்று விடும்.
இந்த மிளகாய் வெற்றிலை வைக்கோல் மட்டுமல்லாது வேறு பல பொருட்களும் அங்கிருந்து வருவதும் இங்கிருந்து போவதும் பல ஆண்டுகளாக யாழ்ப்பாணத்தை  சுற்றி நடைபெறுவதுதான்.
சீனிவாச ரெட்டிதான் இந்த கிட்டங்கியின் உரிமையாளர். அவருக்கு குஞ்சு பணிக்கர் மீது அளவு கடந்த நம்பிக்கை, குஞ்சு பணிக்கர் சொல்வதே கணக்கு. அவர் கூறுவதை மறுவார்த்தை பேசாது சீனிவாச ரெட்டி ஏற்றுக்கொண்டு விடுவார். சிங்கள  வியாபாரிகளிடம் மிளகாயை கொடுத்து வெற்றிலையை கணக்கிட்டு வாங்கி கூலியாட்களை கொண்டு சரியான அளவுகளில் பொதி கட்டி ரெட்டியின் வள்ளத்தில் ஏற்றி விடுவதுவரை குஞ்சு பணிக்கர் பொறுப்புத்தான்.
இந்த் மலையாளதேச தீவுத்திடல் வியாபாரம் பல ஆண்டுகளாக நடந்து கொண்டு வருகிறது.
ரெட்டிக்கு சொந்தமான கிட்டங்கியே குஞ்சுபணிக்கன் வளவு என்றே பலருக்கும் தெரிகிறது . அந்த அளவு அதில் அவர் காலூன்றி இருந்தார்..

எல்லாம் சரியாக போய் கொண்டு இருந்தது.ஒரு நாள் வழக்கம் போல வரும் மிளகாய் மூட்டைகளோடு ஒரு உயிருள்ள மிளகாயும் வந்து சேர்ந்தது .அதன் பெயர் தேவநாயகி..
இடுக்கியில் ஏதோவொரு சிக்கலில் மாட்டுப்பட்டு தற்காலிகமாக தப்பி ஒடுவந்துள்ள பெண் என்று மட்டுமே குஞ்சு பணிக்கனுக்கு தெரியும். கொஞ்ச நாட்கள் பாதுகாப்பு கொடுக்கவும் என்று ரெட்டி ஓலை அனுப்பி இருந்தார்.
குஞ்சு பணிக்கனின் குடும்பத்தோடு தேவநாயகியும் இருப்பதில் அவர்களுக்கு ஒரு பிரச்சனையும் இருக்கவில்லை.
ஆனால் மெதுவாக தேவநாயகியின் கதையை தெரிந்த பின்பு குஞ்சு பணிக்கன் குடும்பத்தின் நிம்மதி போய்விட்டிருந்தது.