வெள்ளி, 16 ஜூன், 2017

வள்ளிகுட்டியை தேடி

அந்த சிறு கிராமத்தில்  ஒரு சில மாதங்களாக  அங்கும் இங்குமாக ஆடு மாடுகள் களவு
போய்கொண்டு இருந்தது.  எங்கோ யார் வீட்டு கால்நடைகள் களவு போவதை பேசிக்கொண்டிருந்தவர்களின் நிம்மதியை குலைத்தது ஆனந்தன் கொண்டு வந்த செய்தி.
வள்ளிகுட்டியைகாணவில்லை என்று அவன் கத்தினான். அவனை பொறுத்தவரை வள்ளிகுட்டி  ஒரு சாதாரண கன்று குட்டி அல்ல. அவனுக்கு மிகவும் நெருங்கிய ஒரு ஜீவராசி அது.
தந்தை இறந்து சிலவருடங்கள் ஆகிவிட்டிருந்தது.
தாயார் சிவகிரி  வேலாயுதத்தை  வாழ்க்கையில் சேர்த்துகொண்டார். அது ஆனந்தனின் நிம்மதியை தொலைத்து விட்டிருந்தது ..
வேலாயுதத்தின்  போக்கு ஆனந்தனுக்கு கொஞ்சம் கூட பிடிக்கவில்லை. அந்த ஆள் கிட்டவந்து உரசி உரசி பேசும்  விதம்  அவனுக்குள் சந்தேகத்தை விதைத்தது ..

அக்காவும் அண்ணாவும்  புத்தளத்துக்கு பொன்னையா  மாமாவோடு போய்விட்டார்கள் . அவர்கள் அங்கு உள்ள பள்ளிகூடத்தில் படிக்கிறார்கள். மாமாவுக்கு அங்கு பெரிய தென்னந்தோட்டம் இருக்கிறது.
ஆனந்தன் மட்டும் அம்மாவோடு ஒட்டி சுட்டானில் தங்கி விட்டான்.

புதிய அப்பாவின் மீது உள்ள  வெறுப்பினால்  தானும் புத்தளத்துக்கு  சென்று விடலாம் என்றுதான் எண்ணி கொண்டிருந்தான்.அடிக்கடி தாயை  தொந்தரவு செய்துகொண்டே இருந்தான்.
அவளுக்கும் வேலாயுதம் மீது பூரண நம்பிக்கை வரவில்லை . தான் அவசரப்பட்டு விட்டதாக எண்ணினாள். இனி என்ன செய்வது . மீதி காலத்தை ஒட்டி விடவேண்டியதுதான் வேற வழி?
ஏதோ விதம் விதமாக சிந்தித்து கொண்டிருந்தவளை திடுக்கிட வைத்தது ஆனந்தனின் குரல்

வியாழன், 15 ஜூன், 2017

ஆறுமுகத்தின் பழைய சைக்கிள்

சகிக்க முடியாத  கொடுமையான வெய்யில் நகரையே சுட்டு எரித்து கொண்டிருந்தது, வெயிலின் வெப்பத்துக்கும் சாலையின் தூசிக்கும் சவால் விட்டுக்கொண்டு ஆறுமுகத்தின்  பழைய சைக்கிள் பறந்து கொண்டிருந்தது.
யாழ் வைத்தியசாலைக்கு பின்புறமாக உள்ள  மின்சார நிலையவீதியின் திருப்பத்தில் அவனுக்கும் அந்த சைக்கிளுக்கும் ஒரு இடி காத்திருந்ததை அந்த வீதியில் யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். வீதியின் கரையில் காத்திருந்த ஒரு சண்டியன்  எட்டி ஆறுமுகத்தின்  சேர்ட்டை இழுத்து பிடித்தான் . நிலை குலைந்த ஆறுமுகம்  தரையில் உருண்டு விழுந்தான் . அவன் கொண்டுவந்திருந்த தலையணை, துவாய், சோற்று பார்சல் எல்லாம் தரை மீது சிதறி எல்லா பக்கமும் சிதறி ஓடியது.  இரண்டாவது சண்டியன் சைக்கிளை தூக்கி நிலத்தில் குத்தி மிதித்தான்.
ஆஸ்பத்திரியில் உள்ள ஒரு நோயாளிக்கு கொண்டு செல்லும் உணவும் உடையும் அடிபட்டு விழுந்த அனாதைகள் போல காட்சி அளித்தது, இந்த காட்சியை பார்த்தவர்கள் திகைத்து போனார்கள். எவரும் முன்னே வந்து என்ன என்று கேட்கும் திறன் அற்று இருந்தனர். அந்த சண்டியர்களின் தோற்றமும் செயலும் அந்த தெருவையே பயமுறுத்தி விட்டிருந்தது, தங்கள் கடமை முடிந்தது என்பது போன்ற திருப்தியில் சண்டியர்கள் படு மோசமான வார்த்தைகளால் வசை பாடிக்கொண்டே அவ்விடத்தை விட்டுஅகன்றனர்.. வந்தார்கள் அடித்தார்கள் சென்றார்கள் . ஏன் எதற்கு என்று கேட்பதற்கு அங்கு யாருக்கும் துணிவு இருக்கவில்லை.