
அங்குதான் மண்வெட்டி போன்ற கட்டுமான கருவிகள் வைக்கப்பட்டிருந்தன. சில கொட்டகைகளில் குளகட்டுமானத்தில் தேர்ச்சி பெற்ற விற்பனர்களும் . வேறு சில கொட்டகைகளில் பணியாளர்களும் தங்க வைக்கப்பட்டிருந்தனர். உணவு பானம் தயாரிப்பதற்கு தனியாக நான்கு கொட்டகைகள் இருந்தன.
இவற்றிக்கு நடுவில் பாக்கியத்தமாளின் கொட்டகையும் இருந்தது.
வெகு வேகமான கட்டுமான பணிகள் நடந்து கொண்டிருந்தன. எண்ணியபடி குளம் கட்டி முடிப்பதற்குள் ஏராளமான தடங்கல்கள் வந்து கொண்டே இருந்ததால் பாக்கியத்தமாள் நிம்மதி இழந்து காணப்பட்டாள்.
குலதிலகனும் அவனது புதிய நண்பர்களாகி விட்ட பார்பன பூசாரிக்களும் செய்யும் முன்னுக்கு பின் முரணான கூத்துகள் மக்களிடம் பெரும்
விவாதங்களை உண்டாக்கி இருந்தது. மக்களில் பலருக்கும் அவர்களின் பல சம்பிரதாயங்கள் வேடிக்கையாகவும் கொஞ்சம் கவர்ச்சியாகவும் இருந்தது.முதலில் அவர்களது வர்ண அலங்கார ஆடைகள் மற்றும் வர்ணப்பூச்சுக்கள் சிறுவர்களை மட்டுமல்ல பெரியவர்களையும் மகிழ்வித்தது. அவர்களின் உணவு முற்று முழுதாக பாலாவோரை மக்களின் பாரம்பரிய உணவுகளிலும் பார்க்க பெரிதும் மாறுபட்டு இருந்தது. எல்லாவற்றிலும் பார்க்க சதா ஆடல் பாடல் போன்ற கொண்டாட்டங்கள் அவர்களை சுற்றியே இருந்தது. அவர்கள் கூடும் இடமெல்லாம் குலதிலகனின் அரண்மனை பணியாட்கள் சிற்றுண்டிகளை வழங்கினர்.

எல்லாவற்றிற்கும் சிகரம் வைத்தது போல அவர்களின் புதிய பசுநேசன் வேஷம் மக்களை பெரிதும் கவர்ந்தது. ஏராளமான பசுக்களை நீராட்டி அலங்கரித்து வர்ணபொடிகளை பூசி அவற்றை தேவதை போல பூசித்தனர். இயல்பிலேயே கொல்லா நோன்பை கடைப்பிடித்த பாலாவோரை சமண மக்களுக்கு பார்ப்பனர்களின் பசு நேசம் உள்ளத்தை தொட்டது. மெல்ல மெல்ல சமணர்களின் மனதில் பார்பனீயம் இடம் பிடிக்க தொடங்கியது. பார்பனர்களின் கோமாதா பூசைக்கு மக்கள் தங்களது பசுக்களை ஒட்டிக்கொண்டு வரலாயினர்.
தங்களின் செல்லபிராணியை எங்கிருந்தோ வந்த பூசாரிகைகள் அலங்கரித்து பூசைகள் செய்கிறார்களே என்று அந்த பார்பனர்கள் மீது மிகுந்த அன்பு பாராட்டினர்.

பார்ப்பனர்களை பாலாவோரையில் நிரந்தரமாக குடியமர்த்துவதற்கு அவர்களுக்கு தேவையான பொன் பொருள் மட்டுமல்லாது நல்ல விளைச்சலை தரக்கூடிய வயல் நிலங்களும் வழங்கவேண்டுமே?
அமைச்சர் பெருமக்களிடம் இதுபற்றி ஆலோசனையில் ஈடுபட்டான்.
அவனது அமைச்சர்கள் என்று கூறப்படுபவர்கள் பெரும்பாலோர் அவனுக்கு விருப்பமானவற்றை கூறி அவனை தவறாக நடத்தினர்.
சில ஊர்களை தெரிவு செய்து முற்று முழுதாக பார்பனர்களுக்கு வழங்கலாம் என்றும் முடிவெடுத்தனர், அது மட்டுமல்லாமல் அவ்வூர்களிலேயே ஏனைய பணிகள் செய்யும் இதர மக்களையும் இந்த பார்பனர்களுக்கு வேலையாட்களாக நியமிக்கலாம் என்றும் திட்டங்கள் தீட்டினர்.
இப்படியாக குலத்தையும் குளத்தையும் கெடுக்க வந்த கோடரி காம்பு போல குலதிலகன் தனது சதியாலோசனைகளை மேற்கொள்ளலானான்.
தம்பியின் அத்தனை ஆலோசனைகளையும் திட்டங்களையும் அவ்வப்போது அறிந்து கொண்டே வந்த அக்கா பேராவூர் பாக்கியத்தம்மாள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானாள். அன்னையும் தந்தையும் இல்லாதவிடத்து அந்த குறை தெரியாமல் தம்பியிடம் அதிக பாசம் வைத்து அவனை கெடுத்து விட்டோமே என்று எண்ணினாள்.
ஒருநாள் காலை பொழுது குலதிலகனின் அமைச்சர்கள் சிலர் பாக்கியத்தம்மாளின் தரிசனம் வேண்டி வந்தனர். அவர்களின் நேரிடையாக தாங்கள் வந்த நோக்கத்தை கூறாமல் வழுக்கியாற்று குளப்பணிகள் பற்றி மிகுந்த அக்கறையோடு கேட்டறிந்தனர்.
பாக்கியத்தமாளுக்கு இவர்களின் நோக்கம் நிச்சயம் படு மோசமானதாக இருக்கும் என்று தோன்றியது. அவர்களின் அதீத இனிப்பான வார்த்தைகள் அதை வெளிக்காட்டியது.
வெகு நேர வெட்டி பேச்சுக்கு பின்பு அவர்கள் மெதுவாக பாம்பு தலை காட்டுவது போல குலதிலகனின் கோரிக்கையை வெளிப்படுத்தினர்.
பார்ப்பனர்களுக்கு வழுக்கியாற்று கரையில் இரண்டு கிராமங்கள் தானமாக அளிக்க வேண்டுமாம். அதுவும் அவர்கள் குறிப்பிட்ட அந்த கிராமங்கள் நல்ல விளைச்சல் தரும் அழகிய வயலையும் கொண்டதாகும். பாக்கியத்தம்மாளால் கட்டப்பட்டு கொண்டிருக்கும் குளத்தின் நீர்பாசனத்தால் முதலில் பயன்படப்போவதும் அந்த கிராமங்கள்தான்.
இதுவரை பாக்கியத்தம்மாள் தம்பி குலதிலகனின் பாசமிகு அக்காவாகத்தான் இருந்தாள். ஒருவர் வெறும் நல்லவராக மட்டுமே இருந்தால் அவரை சுண்டி பார்க்க சுரண்டிப்பார்க்க கோழைகளுக்கும் குள்ள நரிகளுக்கும் ஆசை வரத்தானே செய்யும் ?
பல இடிகளை ஒரே நேரத்தில் கேட்ட பறவைகள் போல அவளது மனமும் உடலும் ஆன்மாவும் ஒரு கணம் ஆடிப்போய் விட்டது. தனது பதட்டத்தை கொஞ்சம் கூட வெளிகாட்டி கொள்ளவில்லை.
இந்த புயலையும் இடியையும் ஓரளவு அவள் எதிர்பார்த்தாள். அவளது ஒற்றர்கள் ஏற்கனவே இதுபற்றிய செய்திகளை அறிவித்திருந்தனர். என்னதான் சிந்தித்தாலும் சிலவேளை பார்ப்பனர்களுக்கு கிராமங்களை தாரை வார்க்கும் திட்டத்தை கடைசி நேரத்திலாவது குலதிலகன் கைவிட்டு விடக்கூடும்.
தாய்மண்ணை அன்னியருக்கு தாரை வார்க்கும் அளவுக்கு குலதிலகன் முட்டாளாகி விடமாட்டான் என்று ஒரு சிறு நம்பிக்கை அவளிடம் இருந்தது. இன்று அது பொய்த்து போனது.

சிறு மௌனத்தின் பின்பு புன்சிரிப்புடனேயே பாக்கியத்தம்மாள் பேசினாள்,
சரி உங்கள் கோரிக்கையை அமைச்சர்களுடனும் இதர பெரியவர்களுடனும் பேசிவிட்டு கூறுகிறேன். மேலும் இரண்டு கிராமங்களை தருவதால் மக்களுக்கும் தனக்கும் என்ன பயன் ஏற்படும் என்பதையும் விளக்குமாறு கேட்டாள்.
பேராவூர் அரசர் குலதிலகன் நிச்சயம் தகுந்த கைம்மாறு செய்வார் என்றும் அது பற்றி பின்பு கூடி பேசலாம் என்றும் பதில் கூறினர்.
வந்தவர்களை மிகவும் நன்றாக உபசரித்து அவர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் விதத்தில் பேச்சு வார்த்தைகளை முடித்து ஒருவழியாக வழியனுப்பி வைத்தாள்.
பாக்கியத்தம்மாளுக்குள் மறைந்திருந்த ஈவு இரக்கமற்ற ஒரு
இராஜதந்திரியின் தலையில் கைவத்து விட்டார்கள் .. மெல்லிய மேகங்கள் மெதுவாக மோதும்போதுதான் பயங்கரமான மின்னலும் இடியும் முழங்கும் என்பதை இனி பாலாவோரை வரலாறு பார்க்க போகிறது.
இனி அவர்கள் படிக்க போகும் பாடங்கள் மிகவும் பயனுள்ள ஆட்சியியல் தத்துவங்களாக சரித்திரம் பகரப்போகிறது..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக