திங்கள், 6 மே, 2013

அந்த அழகான மல்லிகை சிரிப்பு

தூசிகளின் தலைநகரம் என்று சொல்லக்கூடிய அளவும் மோசமான அளவு
தூசியும் குப்பையும் நிறைந்தது  அந்த பேருந்து நிலையம், எவ்வளவுதான் படு மோசமான நிலையில் இருந்தாலும் மக்கள் கூட்டமோ நெரிசலாக இருக்கும் , வேறு வழி ?
ஒவ்வொரு பேருந்தும் வரும்போது அள்ளிவரும் தூசி இருக்கிறதே சொல்லி மாளாது . விரைவில் ஊர் போய் சேர வேண்டும் என்ற துடிப்பில் இருக்கும் ஜனக்கூட்டமோ அந்த பேருந்தை நோக்கி படுவேகமாக போய் ஏறிவிடுவார்.
அந்த ஜனக்கூட்டத்தில் யாருமே சிரித்து மகிழ்சியோடு முகத்தை வைத்திருக்கும் காட்சியை காணவே முடியாது ,
எப்போதும் ஒரு கடுமையான பாவத்தோடு அல்லது முகத்தை தொங்க போட்டுகொண்டு ஏதோ நோய் வாய்ப்பட்டவர்கள் போல காட்சி அளிப்பார்கள் ,
இது ஏன் என்று விளக்கப்போனால் பெரிய விவகாரமாகிவிடும் , அவ்வளவு இலகுவில் சொல்லி விடக்கூடிய செய்தியும் அல்ல அது .
எந்த ஒரு காரிருளிலும் ஒரு சிறிய ஒளியாவது தெரியும் அதே போல எவ்வளவு பிரகாசமான ஒளியினுள்ளும் ஒரு இருள் இருக்கும் என்று எங்கேயோ நான் படித்த ஞாபகம் ,
எந்தவித மென்மையான உணர்வுகளும் இல்லாது மிகவும் இறுக்கமான ஒரு அமைதி நிலவிய அந்த  பேருந்து நிலையத்தில் ஒரு வித்தியாசமான வேடிக்கையான  காட்சி  அடிக்கடி  அரங்கேறி கொண்டிருந்தது ,
சுமார் அறுபது வயது மதிக்கத்தக்க உயரமான மனிதன் வேடிக்கையான விளம்பரங்கள் எல்லாம் எழுதப்பட்டிருந்த ஆடைகள் அணிந்து ஆடி பாடி அதிஷ்ட லாபச்சீட்டுக்களும்  மற்றும் இனிப்பு பலகாரங்கள் போன்ற சிறு சிறு
பொருட்களும் விற்று கொண்டிருப்பார் .

இடையிடையே சினிமா பாடல்களும் அதனோடு சுயமாக கலவை செய்த விளம்பர பாடல்களும் பாடி எப்போது சிரித்த முகத்தோடு தனது தொழிலை செய்த வண்ணம் இருப்பார்
அவர் மிக பழைய பாடல்களை சற்று மாத்தி மாத்தி பாடுவார் , அடிக்கடி சாந்து  பொட்டு பழபழக்க சந்தனவாசம் கமகமக்க என்றும் பின்பு அடிக்கடி மல்லிகை பூக்கள் சிரித்து என்று பாடும் பொழுது அவரது அழகான பல்வரிசையே ஒரு மல்லிகை பூச்சரமாகவே எனக்கு தோணும் ,
அவரை பற்றி மக்கள் பலவிதமான வரலாறுகளை சொல்லி கொண்டு இருந்தனர் . அவர் ஏதோ ஒரு வைரமாளிகை என்ற வியாபார ஸ்தாபனத்தின் விளம்பர பாட்டை அதிகமாக பாடுவார் . அதனாலேயே அவருக்கு வைரமாளிகை என்ற பெயர் கிடைத்து விட்டது ,
அவரை கண்டதும் அழுத பிள்ளை சிரிக்கும். களைப்பில் ஓய்ந்து போன வயோதிபர்கள் கூட ஏதாவது ஜோக்கடித்து வைரமாளிகையின் நகைச்சுவை ஜோதியில் தற்காலிகமாகவேனும் ஐக்கியமாவர்.
ஒவ்வொரு பேருந்து நிற்கும் இடமாக ஒரு ஒழுங்கு முறையிலேயே அவர் தனது ஆடல் பாடல் விற்பனையை கொண்டு செல்வார். அவரை கைதட்டி சிலர் கூப்பிட்டு பொழுதுபோக்கிற்காக கதை கொடுப்பார்கள் .
அவருக்கு எல்லா ஊர்கதைகளும் தெரியும், பாட்டி வடை சுட்டு காக்காவை சாட்டி விட்டு தானே எல்லாவற்றையும் உண்டுவிடார் என்று அவர் சொல்லும் பொது சிறுவர் பெரியவர் பேதமில்லாமல் எல்லோரும் தங்களை சிறுது மறந்துவிடுவர் .
அந்த பிரதேசத்தை தற்காலிகமாக் தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்தவர்களுக்கு மக்கள் எப்போதும் தங்களுக்கு பயந்து அடங்கி ஒடுங்கி இருக்க வேண்டும் என்ற கோட்பாட்டில் நாட்டம் கொண்டவர்கள் .
பிறரின் மகிழ்ச்சியை பார்த்தால் பிடிக்காதவர்கள் யாரும் இருப்பார்களா?
இருந்தார்கள் , ஒரு வித மனநோய் பிடிக்கப்படவர்களுக்கு மனிதர்கள் மகிழ்வாக இருந்தால் பிடிக்காது ,
பயப்படும் மனிதர்கள் எப்படி மகிழ்வாக இருக்க முடியும் ?
ஆகவே மகிழ்வாக இருப்பவர்கள் அல்லது பிறரை மகிழ்விக கூடிய திறமை உள்ளவர்கள் மக்களின் பயத்தை போக்கி விடுவார்கள் என்று சைக்கோ பாணியில் முடிவெடுத்தார்கள் .
 ஒரு மோசமான காலப்பகுதியில் பேருந்து நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது ,
ஊரில் என்னதான் நடக்கிறது என்று யாருக்குமே எதுவும் சரியாக விளங்காத அந்த காலங்களில் பல மனிதர்கள் அநியாயமாக இறந்து போனார்கள் .
ஒரு நாள் சாலை ஓரம் அந்த பேருந்து நிலைய பாடகன் வைரமாளிகை என்று அழைக்கப்பட்ட கலைஞனின் உயிரற்ற உடல் கண்டெடுக்கப்பட்டது ,
அந்த உத்தம கலைஞனின் உயிரற்ற உடல் மீது ஒரு வெள்ளை கடுதாசி , அதில் எழுதப்பட்டிருந்த வாசகங்கள் வழக்கம்போல ஏதேதோ குற்றச்சாட்டுக்கள். சுத்தி வைளைப்பானேன்  அந்த வைரமாளிகை பாடகரையும் துரோகி முத்திரை குத்தியிருந்தார்கள் . அந்த காலத்தில் மிகவும் மலிவான ஒரு பட்டம் அதுதான் ,
பேருந்து நிலையம் இயங்காமல் போன பொழுது அவர் தெருவோரம் சிறு வியாபாரம் செய்து வந்தார் . அவரது விற்பனை பொருட்களில் திருப்பதி லட்டும் இருந்ததாம் . அதாவது அதை யாரோ ஒரு இந்தியாகாரன் கொடுத்திருக்க வேண்டும் என்ற கண்டு பிடிப்பு ஒன்றே அவர் யார் என்பதை காட்டிகொடுத்து விட்டதாக விளக்கம் வேறு ,
சில மாதங்களுக்கு பின்பு பேருந்துகள் ஓட்டத்தொடங்கி விட்டன,
மக்கள் முன்பை  விட மேலும் இறுக்கமாகவும் முகத்தை தொங்கபோட்டு கொண்டு வழக்கமான தூசிகளையும் சுவாசித்துக்கொண்டு அகோரமான வெய்யிலில் அமைதியாக பேருந்துகளுக்கு காத்திருந்தனர் .
அந்த பேருந்து நிலையம் தனதுஒரே ஒரு ( களியாட்டகாரன்)   என்டடைனரையும் இழந்துவிட்டது ,
யாருக்குமே சிரிக்க கூடிய துணிவு இப்போது வருவதில்லை அதற்குரிய கடைசி வாய்ப்பும் இறந்து விட்டது
அந்த மக்களின் மயான  அமைதியை மிகவும் திருப்தியுடன் சிலர் நோக்கியது  எல்லோருக்கும் தெரிந்ததுதான்
சாமானிய மனிதர்களின் சிரிப்பை கண்டு பயப்படும் எதிரிகள் என்பது இவர்களுக்குத்தான் பொருத்தம் 

கருத்துகள் இல்லை: