வியாழன், 9 மே, 2013

விஷ்ணுதாசரின் ஜென்மம் முழுதும் அந்த முகம் ?

அப்புச்சி இப்படி நொறுங்கிடுவார்னு நான் ஒருக்காலும் கருதலையே? அப்புச்சி
எவ்வளவோ நல்ல மனிஷன் ஆனால் ஏதோ போறாத காலம் , அந்த ஸ்ரீ சுதான்ன சிறுக்கியை பிடிச்சிட்டார் ,
அதுகூட பரவாயில்லை ஆனால் அவளை வீட்டுக்கே கூட்டியாந்திட்டரே ?
என்னத்தை சொல்ல ? எல்லாம் தலைவிதி , அவன் என் தலைல எழுதிட்டான் ,
எனக்கு தான் நிறைய விஷயம் புரியல வாழ்க்கைன்னா என்னன்னும் தெரியல,
அப்புச்சி சதா கச்சேரின்னு ஊர் ஊரா சுத்திட்டே இருக்கும் , எந்த ஊருக்கு போனாலும் எனக்குன்னு எதாச்சும் வாங்கிரும் , அதுதான் வாழ்க்கைன்னு வெகுளியா இருந்தேன் ,
 அப்புச்சிக்கு விஷ்ணுதாசர்ன்னுதான் பேர் ஆனா அப்புச்சி அப்புச்சின்னு அதுதான் அவர்பேராயிடுச்சு, என்பேர் சரஸ்வதிஆனா  இப்ப சச்சுவாயிடுச்சு,

அப்புச்சியோட சரியா பேசகூட எனக்கு தெரியல்ல ,
அந்த ஸ்ரீ சுதா அப்புச்சியோட பேசறப்போ எல்லாம் ரொம்ப ரசனையா இருக்கும் அவளுக்கு தான் எத்தனை விஷயங்கள் தெரியும் , சும்மா சொல்ல கூடாது அப்புச்சியை விட அவளுக்கு அறிவும் ஜாஸ்த்தி அழகும் ஜாஸ்த்தி ,
அவமேல நான் பொறாமை பட்டு என்னதான் ஆவப்போவுது ? ஒருவேளை ஆரம்பத்திலேயே நான் பொறாமை பட்டு சண்டை பிடிச்சிருந்தா அப்புச்சி அவளை கைவிட்டிருக்குமோ ?
நான் ஒரு பைத்தியம் அவளோட பாட்டையும் பேச்சையும் நானே ரசிச்சு ரசிச்சு கேப்பேனே ? அப்புச்சிக்கு வேற பெண் சகவாசம்கூட இருக்குன்னும் ஒருவாட்டி சொன்னா ,
என் அப்புச்சி என்னையை விட்டு அவளோடு சாயறார்ன்னு கூட எனக்கு தோணலையே? அவ்வளவு மண்டுகம்,

அப்புச்சிலே ஏதோ கோளாறு என்னக்கும் குழந்தை இல்லை அவளுக்கும் இல்லை , எனக்கு குழந்தை இல்லைன்னுதான் அப்புச்சி அவளை கூட்டியாந்திருக்கும் , தலை எழுத்து சும்மா விடுமா?
கொஞ்சம் கொஞ்சமா சுதாசிறுக்கி அடுக்களைக்கு என்னை விடறதே இல்லை,
எல்லாமே அவளே பார்த்துப்பா . ஆரம்பத்திலே எனக்கு இதுவும் ஒரு நல்ல விஷயமா பட்டுச்சு  ஆனா போக போக தான் தெரிஞ்சிச்சு , இந்த அடுக்களை தான் அவளோட ராஜாங்கம்னு . தெரிஞ்சு என்னதான் பிரயோஜனம் ?
எல்லாம் கைநழுவி போயிடுத்து ,
அப்புச்சிக்கு எல்லாம் தப்புன்னு விளங்க தொடங்கவே பத்து வருஷமாயடுத்து. என்னை ஒரு குழந்தையாத்தான் அப்புச்சி நினைசிடுத்து , அதுவும் சரிதான் நான் அப்படித்தான் இருந்தேன்.
அப்புச்சி என்னோட எந்த நாளும் ஏதாவது பேசிட்டுதான் படுக்க போகும்,
கச்சேரி செய்ய எப்பவும் வெளி ஊரு போக வேண்டியிருந்ததால நான் எப்பவும்  தனி அறையிலே ஒரு வேலை கார பொண்ணோட தான் படுத்துப்பேன் . அந்த வேலைக்கார பொண்ணுக்கும் சுதாவுக்கும் ஒத்து வரல்ல.
ஒரு நாள் அவளே வேலைக்கு வரமாட்டேன்னுட்டா . ஆனா அவ ஒண்ணு சொன்னா : அம்மா நீங்க ஒரு குழந்தைம்மா வந்திருக்கிறது வெறும் சிறுக்கி பார்த்து நடந்துந்கோமா . ம்ம்ம் அவள் தீர்க்க தரிசி .
எப்படி படிப்படியாக நான் என் வீட்டிலேயே ஒரு அடிமை பெண் ஆயிட்டேன்னு எனக்கே சரியா புரியமாட்டேங்குது .
கொஞ்ச நாளா அப்புச்சிகிட்ட ஏதோ நிலம் எழுதி தரச்சொல்லி சுதா சத்தம் போடறது வழக்கமாயிடுத்து ..
அப்புச்சி பிடி கொடுக்காமல் ஏதோ தகராறு பண்றார்னு தெரியுது , அது என்னான்னு விளக்கமா தெரியல்ல , அவளுக்கு தெரியாமல் அப்புச்சிட்ட எப்படி கேக்கிறது ? எப்ப கேக்கிறது ?
அப்புச்சியும் ரொம்ப துக்க படறார் தெரியறது.
அடிக்கடி என்னை ஒரு மாதிரியாக பார்த்து ரொம்ப துக்க படறார் , எனக்கு ஒரே துக்கமாக இருக்கு , ஆனா வெளிக்காட்ட முடியாதே . அவள்தான் எப்பவும் வீட்டை சுத்தி சுத்தி வர்றாளே ?
அப்புச்சியும்  என்னை போலவே வெகுளிதான். சங்கீதம் மட்டும்தான் தெரியும் , வேறொன்னும் தெரியாது,
சதா ஏதாவது ஒரு புது உருப்படி யாருக்காச்சும் தெரியும்னா மாட்டு வண்டிகாரனையும் எந்த நடுநிசியானாலும் எழுப்பிக்கொண்டு போயிடுவார் ,அப்புறம் சோறு தண்ணி எல்லாம் மறந்து ஏதாவது கத்து கொண்டு அல்லது கத்து கொடுத்து விட்டு வருவார்.
வேற ஒன்னுமே தெரியாது . சதா ராக ஆலாபனை தவிர சொந்த ஆலாபனையே கிடையாது .இருந்திருந்தா குடும்பம் இப்படி ரெண்டு கேட்டானையிருக்குமா ?
எப்படி இருந்த மனுஷன் இப்படி தவிக்கிறார்?
சுதாவை பார்த்து நான் பயந்த காலம் போய் இப்ப அப்புச்சியும் இல்ல பயப்படர மாதிரி தெரியறது?
இன்னிக்கு நானும் அப்புச்சியும் சாப்பிட உக்காண்டிருந்தோம். வழக்கம்போல சுதா அலட்சியமாக வட்டில எடுத்துகொண்டு வந்து அப்புச்சிக்கு முன் போட்டாள் .
அவளோட அலட்சியம் ! வட்டில தொப்புன்னு போட்டாள்  அந்த சத்தம் அப்புச்சிக்கு என்னவோ செய்தது.
எனக்கும் அப்புச்சியை பாக்க பாவமாயிருந்திச்சு . ஆனா நான் முகத்தில ஒன்னும் காமிக்கல.
அப்புச்சியை அவ மதிக்கல ரொம்ப துச்சமா நடத்தறான்னு எனக்கும் தெரிஞ்சிடுத்துன்னா அப்புச்சி ரொம்ப துக்கப்படும்னு நான் ஒண்ணும் தெரியாத மாதிரி நடிச்சேன். ஆனா என்னால அப்புச்சியை பாக்காம இருக்க முடியல .
அப்புச்சி நேருக்கு நேர் என்னை பாத்திச்சு அப்புறம் ஓ ன்னு அழ ஆரம்பிச்சுடுத்து . அப்புச்சி அழுது நான் இது வரை பாக்கல.
என்னை பார்த்து நாக்கு தடுமாறி என்னனவோ சொல்லி சொல்லி அழுத்திச்சு .  அவளும் கொஞ்சம் திகைச்சு போய் பாக்கிறா . நான் ஏதாவது சொல்ல போக அவளுக்கு கோபம் வந்து அப்புச்சியை ஏதாவது மரியாதை இல்லாம பேசிடுவாளேன்னு நான் தயங்கினேன் .
அப்புச்சிக்கு அதுவும் விளங்கிடுச்சு . ஆய்யோ இந்த குழந்தைக்கு நான் துரோகம் பண்ணிட்டேனேன்னு கேவி கேவி அழறார் , சரஸ்வதி என்னை மன்னிசுடுவயான்னு என்னை கட்டுக்கொண்டு ஒரே கத்தல்தான் , அப்புச்சி என்பேர உச்சரிக்கிறது ரொம்ப அபூர்வம் ,

இந்த ஜென்மத்தில நான் எந்த பாவமும் பண்ணலையே . இந்த பாவம் மட்டும் பண்ணிட்டேனேன்னு தலை நிலத்திலே மோதி மோதி அழுதிடுச்சு .நானும் அழுதேன் ,
அப்புச்சி ஒண்ணும் நடக்கல அழுவாதிங்கோன்னு சொல்லி சொல்லி நானும் அழுதேன்,
விஷ்ணுதாசரின் அழுகை அனேகமாக இந்த ஜென்மம் முழுதும் தொடரும் போல தெரிந்தது , சச்சுவின் அப்பாவி முகம் அவரை சித்தரவதை செய்து கொண்டே இருந்தது

 

கருத்துகள் இல்லை: