ஞாயிறு, 8 ஜூலை, 2012

கற்பூரம் தேடிய கழுதை ஒன்று

இரவு மூன்று மணியை கடந்துகொண்டிருக்கிறது ஆனாலும் அந்த வீட்டில் தூக்கம் இல்லை. உஷாவும் பரமும் தாங்கள் பொருந்தாத தம்பதிகள் தான் என்பதை பரஸ்பரம் உணர்ந்துகொள்ளும் கசப்பு மாத்திரையை மாறி மாறி விழுங்கிகொண்டார்கள்.
நாளை ஒரு நடன கச்சேரிக்கு பாட்டு பாட வேண்டியுள்ளது. அட டா இப்படி தூங்காமல் சண்டை பிடித்து கொண்டிருந்தாள் எப்படி நாளை பாட முடியும்?
உஷா அழுது அழுது கலைத்து விட்டாள்.
விஷயம் இதுதான் அந்த நடன நிகழ்ச்சியை தனது வீடியோவில் பதிவு  செய்ய போவதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் சொன்ன பொது அவர்கள் மிக அழுத்தமாக மறுத்து விட்டார்கள். பிடிவாதக்கார பரமோ இதை ஒரு கௌரவ பிரச்சனையாக எடுத்துக்கொண்டு நாளை பாட என் மனைவி வரமாட்டா என்று கோபமாக சொல்லிவிட்டான் .
ஏற்பாட்டாளர்கள் ஆடிப்போய் விட்டனர். பலநாள் ஒத்திகை பார்த்து பார்த்து உருவாகிய ஒரு நடன அரங்கேற்ற நிகழ்ச்சியது. இனி திடுதிப்பென்று அதில் மாறுதல் பண்ணவே முடியாது. நடனம் ஆடும் சிறுமியும் பெற்றோர்களும் கூட இரவு தூங்காமல் ஒரே டென்ஷனில் இருந்தார்கள்.

நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த ஜெயன் இரவிரவாக டெலிபோனில்  எவ்வளவு கெஞ்சி பார்த்தான். ஆனால் நேரம் போக போக பரம் பேசவில்லை அவனது வைனும் விஸ்கியும் ஆணவத்துடன் கலந்து பேசத்தொடங்கியது.
டே அவள் உன்ரை மனிசியோ அல்லது என்ரை மனிசியோ என்ற வார்த்தைகள் வரத்தொடங்கியது.
ஜெயன் எவ்வளவோ ஆறுதலாக தனது நிலைமையை எடுத்து சொன்னான், அரங்கேற்றம் செய்கின்ற சிறுமியின் பெற்றோர் வீடியோ பதிவை விரும்பவில்லை என்றும் அவர்களின் காசில் தான் இந்த நிகழ்ச்சி நடக்கிறது என்றும் கெஞ்சி பார்த்தான் .பரம் மேலும் மேலும் சாராயம் குடித்த குரங்கு போல பேசிக்கொண்டிருந்தான் .
கடைசியில் எதோ வருவது வரட்டும் என்று சரி அண்ணா நீங்கள் வீடியோ எடுங்கோ என்று சொல்லி விட்டு போனை வைத்து விட்டான்.
என்ன செய்வது எல்லா ஏற்பாடுகளும் செய்தாகி விட்டது. வேறு நாடுகளில் இருந்தெல்லாம் கூட சிறுமியின் உறவினர்கள் வருகை தந்திருக்கிறார்கள்.
இது ஒரு நல்ல பாடம் இனி உஷாவை பாட்டு பாட கூப்பிடக்கூடாது. இந்த ராஸ்கல் கடைசியில் எனக்கும் உஷாவுக்கும் கள்ளதொடர்பென்று தானே கதையை பரப்பி விடுவான்.என்ன செய்வது தாழ்வு மனப்பான்மையால்
karசெத்துக்கொண்டிருகிறான்.பாவம் உஷா.
அதன் பின் பரம் எதோ சாதித்த திருப்பதியில் மிச்சம் மீதி குடிவகைகளையும் முடித்து விட்டு வாயில் வந்ததை எல்லாம் உளறிக்கொண்டே படுத்துவிட்டான்.
உஷாவுக்கு எல்லாமே வெறுத்துவிட்டது.
ஏன்தான் இந்த சங்கீதத்தை படித்தோம் என்று அதன் மீதும் வெறுப்பு வந்தது.
இந்த படுபாவி எதோ புரோக்கர் மூலம் சங்கீதம் தெரிந்த பெண்தான் வேண்டும் என்று தேடி உஷாவை கட்டினான். உஷாவும் அட டே சங்கீதம் தெரிந்த பெண்தான் வேண்டும் என்று ஒருவர் தேடி வருகிறாரே என்று அதிசயித்து முற்று முழுதாக தன்னை ஒப்படைதாள்.
இப்போது பார்த்தல் இது ஒரு கற்பூர வாசனை அறியாத கடோத்கஜனாக அல்லவா இருக்கிறான்?
சரி ஒரு சாதாரண மனிசனாக இருக்க கூடாதா? எனக்கு ஏன் இப்படி ஒரு அயோக்கியன் வர வேண்டும் என்று தன்னை நொந்துகொண்டே உறங்கினாள்.
அடுத்தநாள் வெகு ஆடம்பரமாக நிகழ்ச்சி ஆரம்பமானது. உஷாவோ முதல்நாள் எதுவும் நடவாதது போல் மிக அழகாக மேடையில் அமர்ந்து பாடத்தொடங்கினாள்.
ஜெயனின் கண்கள் பரம் எங்கே என்று அங்கும் இங்கும் அலைபாய்ந்து கொண்டிருந்தது.அவனுக்கு ஒரே பயம் எங்கே இந்த பரம் குடித்துவிட்டு வந்து கலாட்டா ஏதும் பண்ணுவானோ என்று வாசலையும் மேடையையும் பார்த்துக்கொண்டிருந்தான். ஒரு சில நண்பர்களை தயார்படுத்தியும் வைத்திருந்தான்.
ஆனால் கடைசிவரை பரம் வரவில்லை. வீணாக அவன் வருவானோ என்று ஜெயன் பதட்டப்பட்டதுதான் மிச்சம்.
நிகழ்ச்சியை பூரணமாக ரசிக்க முடியாமல் செய்து விட்டான் இந்த பாழாய்ப்போன பரம்.
உஷா பிறவியிலேயே வரம் வாங்கி வந்த பாடகி.வழமை போல அட்டகாசமாக சகல உருப்படிகளையும் சாஸ்திர நுட்பம் தவறாமல் பாடினாள். சங்கீத கச்சேரிகளுக்கு பாடிவது வேறு நடன நிகழ்சிகளுக்கு பாடுவது வேறு.நடன நிகழ்ச்சிகள் தாளத்தை மையமாக வைத்து உருவானவை. பாவத்தை காட்டுகிறோம் பேர்வழி என்று இழுத்து விட்டாள் தாளம் சில் வேளைகளில் தடுமாறும். இது ஒரு வழியில் உஷாவுக்கு உதவியாகிவிட்டது. அவளால் இன்று என்ன பாவத்தை காட்ட முடியும்? கண்ணதாசன் பாட்டு போல இதய வீணை தூங்கும்போது பாட முடியுமா?
உஷாவை நன்றாக தெரிந்த பார்வையாளர்களுக்கு சற்று ஏமாற்றமாக பொய் விட்டது. உஷாவின் கானமழையில்  எதோ ஒன்று இன்று குறைகிறதே?
அவரின் இஷ்ட ராகமான பூர்வ கல்யாணி கூட எதோ உயிர் இல்லாத மாதிரி இருக்கிறதே?
உஷாவுக்கு மெதுவாக புரிந்தது தனக்குள் இருக்கும் கலாதேவி  மெதுவாக செத்துகொண்டிருக்கிறாள் .

கருத்துகள் இல்லை: