சனி, 25 மே, 2013

தேவைகள் உன்னை துரத்தும் வரை தான் ....

அவள் ஒரு அழகான ஒரு குட்டி  தீவின் சுகவாசி .அந்த தீவின் ரம்மியத்தை
ரசித்துகொண்டிருந்தாள்  .
அவளை சந்திக்கும் பலரும் வேறு ஒரு பெரிய கற்பனைக்கு எட்டாத அற்புத தீவை பற்றி புகழ்ந்து புகழ்ந்து பேசிகொண்டேயிருந்தர்னர் . அதைப்பற்றிய வர்ணனைகளால் நாளடைவில் அவளுக்கும் எப்படியாவது அந்த அற்புத தீவுக்கு செல்ல வேண்டும் என்று தோன்றி நாளடைவில் அது அவளது ஒரே நோக்கம் என்றாகி விட்டது ,
தான் குடியிருக்கும் குட்டி தீவின் எந்த அழகும் தற்போது அவளை இப்போது அதிகம்  கவர்வதில்லை, எப்போது  அந்த அற்புத தீவை அடைவோம் என்ற ஒரே சிந்தனையில் காலம் கழிந்தது ,
பல நாள் விடா முயற்சியின் பின்பு அவளது எண்ணம் நிறைவேறக்கூடிய தருணம் வந்தது , அந்த அற்புத தீவுக்கு செல்லும் படகு ஒன்று அவளருகில் வந்தது . அவளும் மிக மகிழ்வுடன் படகில் ஏறிக்கொண்டாள் .
செல்லும் வழிதோறும் சொர்க்கம் என்று வர்ணிக்கப்படும் அந்த தீவை பற்றிய பலவிதமான கற்பனைகளுடன் யாத்திரை செய்து  இறுதியில் அந்த தீவை அடைந்ததும் விட்டாள் ,
தனது நோக்கம் நிறைவேறிய மகிழ்ச்சியில் துள்ளி குதித்து ஆனந்தித்தாள் ,
எல்லோரும் குறிப்பிட்டது போலவே அழகான மரங்கள் மலர்கள் சின்ன சின்ன மலை குன்றுகள் ஏராளமான பழவகைகள் கொண்ட அற்புத சோலைகள் எல்லாவற்றிலும் மேலாக அழகான மாந்தர்கள் என்று எல்லோரும் குறிப்பிட்ட நல்ல காட்சிகளையே அவள்  கண்டாள் ,
சில நாட்கள் தன்னை மறந்து தனது பழைய தீவின் சகல ரம்மியங்களையும் மறந்து இருந்தாள் ,
எந்த விடயத்திற்கும் காலம் வேறு வேறு விதமான அர்த்தங்களை தந்து கொண்டிருக்கும் தானே ?

பல நாட்கள் உருண்டோடிய பின் அவளுக்கு தனது பழைய குட்டி தீவுக்கு செல்ல வேண்டும் என்ற ஆவல் துளிர்த்தது , ஏனோ அந்த பழைய குட்டி தீவில் இருந்த பல சுவாரசியமான ஆனால் குறைபாடுகள் என்று அப்போது தெரிந்த விடயங்கள் ஒன்றும் இந்த புதிய தீவில் இல்லாமையே இப்போது பெரும் குறையாக தோன்ற தொடங்கியது.
அந்த பழைய தீவில் ஒவ்வொரு நாள் வாழ்வும்  ஒரு நிச்சயம் இல்லாத தன்மையில் ஓடிக்கொண்டு இருந்தது .
ஆனால் இப்போது எல்லாமே இருக்கிறது , இல்லாமை என்ற ஒன்று மட்டும் இல்லை .
அவளுக்கு மனம் முழுதும் பழைய குட்டி தீவை எண்ணி எண்ணி ஏங்கலாயிற்று .
ஒரு தடவை தானும் அங்கு போய் அந்த பழைய குறைகள் நிரம்பிய வேடிக்கையான வாழ்வை வாழ முடியுமா என்று எண்ணினாள் ,
 ஆனால்  அது சாத்தியமில்லை என்ற உண்மை அப்போதுதான் மெதுவாக உறைக்க தொடங்கியது ,
 மனதில் ஒரு ஏக்கம் உருவாகியது. எவ்வளவுதான் இந்த தீவு அற்புதமான மகிழ்ச்சி நிறைந்த தீவாக இருந்தாலும்  மனம் ஏனோ குறைகள் நிரம்பிய  தனது பழைய குட்டி தீவையே நாடியது.
இனி திரும்பி செல்லவே முடியாது என்ற எண்ணம் வந்ததும்  துக்கம் தொண்டையை அடைத்தது .
அது மட்டுமல்ல இந்த அழகான அற்புத தீவு இப்போதெல்லாம் அற்புத தீவாகவே  தெரிவதில்லை , இங்கு எல்லாமே இருக்கிறது ஆனாலும் ஏதோ ஒன்று குறைகிறதே ?
அது என்ன என்று மனம் கேள்வி மேல் கேள்வி கேட்டு கொண்டே இருந்தது ,
இந்த அற்புத தீவில் நேற்று போலவே இன்றும் இருக்கிறது இன்று போலவே நாளையும் இருக்கும்.
எல்லா நாட்களும் இரவும் பகலும் எதுவித பிரச்சனைகளும் இன்றி அழகாக அமைதியாக ஒரே மாதிரி கழிந்து கொண்டிருக்கும் , இங்கு யாருக்கும் எந்த துன்பமும் இல்லை , நிச்சயமாக எந்த ஜீவா ராசிக்கும் எந்த துன்பமும் இல்லை அதானால்தானோ என்னவோ இதற்கு அற்புத தீவு என்று பெயர் வந்தது ?
வருடங்கள் அல்லது அதற்கு மேலான,
அவளது அற்ப   கணக்குக்குள் அடங்காத காலங்கள் சென்றுவிட்டன , குறிப்பிடும் படியாக எந்த மாற்றமும் அவளது வாழ்வில் நிகழவில்லை ,
வாழ்கை படகு மிகவும் அமைதியாக சென்று கொண்டிருந்தது ,
 வாழ்க்கை மிக அமைதியாக கழிந்து கொண்டே இருந்தால் நீ வாழவே இல்லை என்றுதான் அர்த்தம் என்று  எங்கோ எப்போதோ படித்த ஒரு வாக்கியம் நினைவுக்கு வந்தது.
 மனம்  வெறுமையாகவே இருந்தது,
அந்த வெறுமையை ஓரளவாவது  போக்குவது பழைய குட்டி தீவின் குறைகள் நிரம்பிய வாழ்வின் நினைவுகள் மட்டுமே,
என்ன அழகான அந்த நாட்கள் ?
சிலநாட்கள் உண்பதற்கு எதுவுமே கிடைக்காது . சில வேளைகளில் தேவைக்கு அதிகமாகவே கிடைக்கும் அவற்றை பங்கிடுவதற்கு நண்பர்களை தேடி அலைவோம் .
இப்போது எதை தேடுவது ? தேடுவதற்கும் தேவை இல்லாமல் போய்விட்டது என்பது தற்போதுதான் அவளுக்கு  நினைவுக்கு வந்தது ,
ஏதோ ஒன்றை தான் இழந்தது நன்றாகவே புரிந்தது

கருத்துகள் இல்லை: