
ஒருவருடமாக எதுவுமே சரியில்லை ; எல்லோரும் ரசிக்கும் படி அழகாக சென்று கொண்டிருந்த அந்தகுடும்பத்தில் யார் கண் பட்டதோ எல்லாம் தலைகீழாக மாறிவிட்டது,
அந்த வீட்டின் குடும்ப தலைவன் இளமையில் செய்த ஒரு மாபெரும் தவறு முற்றாகவே மறக்கப்பட்டு விட்டதாகவே இவ்வளவு காலமும் நம்பி இருந்தான் . ஆனால் அது பூதாகரமாக மீண்டும் தோன்றுகிறதே?
விலாவாரியாக சொல்லாவிட்டால் புரியாது ,
அந்த வீட்டின் இரண்டு பிள்ளைகளும் படிப்பை சாட்டி கொண்டு டொராண்டோவுக்கும் சிகாகோவிற்கும் சென்று விட்டார்கள் .
வீடு திடீரென வெறிச்சோடி விட்டது, அந்த வீட்டில் நிலவிய அமைதியோ ஏதோ ஒரு வெறுமையை தான் காட்டியது .
அன்பான குடும்ப தலைவியாக இருந்த பிரேமா தற்போது அடியோடு மாறிவிட்டார் . தனது வேலையையும் விட்டு விட்டார் அல்லது அவர்களாகவே நிறுத்தி விட்டார்கள்.
ஜெயராஜுக்கு ஒன்றும் புரியவில்லை.
பிள்ளைகள் இல்லாத வீட்டின் வெறுமையை அவரும் உணர்ந்தார் .
அடிக்கடி பிள்ளைகளுடன் செல்லில் பேசி பேசி ஏதோ சமாளித்துகொண்டிருந்தார் .
அந்த வெறுமை பிரேமாவை மிகவும் மோசமாக பாதித்தது என்றுதான் சொல்லவேண்டும் , ஆனால் போக போக அந்த வெறுமையையும் தாண்டி வேறு ஏதோ ஒரு விஷயம் பிரேமாவின் மனதை குழப்புவது போல் தோன்றியது அவள் சற்று மன நிலை பாதிப்படைந்தவர்கள் போல எதற்கெடுத்தாலும் உணர்சிவசப்பட்டு கலவரப்பட தொடங்கி விட்டார், தனக்குள் அடிக்கடி பேசி கொள்வார் .
கையில் கிடைத்த பொருட்களை திடீர் திடீர் என்று போட்டு உடைப்பார் , கேட்டால் எந்த பதிலும் வராது அல்லது இடக்கு மிடக்காக ஏதொதோ சொல்லுவார் ,
தனக்கு தலை சரியில்லை என்று தானே சொல்லுவார்,
உளவியல் மருத்துவரிடம் செல்லும்போது மட்டும் மிகவும் ஒழுங்காக நடந்து கொள்வார்.
அவர்களுக்கும் கூட பிரேமாவின் மன நிலை சரியாக பிடி படவில்லை .