வெள்ளி, 16 ஜூன், 2017

வள்ளிகுட்டியை தேடி

அந்த சிறு கிராமத்தில்  ஒரு சில மாதங்களாக  அங்கும் இங்குமாக ஆடு மாடுகள் களவு
போய்கொண்டு இருந்தது.  எங்கோ யார் வீட்டு கால்நடைகள் களவு போவதை பேசிக்கொண்டிருந்தவர்களின் நிம்மதியை குலைத்தது ஆனந்தன் கொண்டு வந்த செய்தி.
வள்ளிகுட்டியைகாணவில்லை என்று அவன் கத்தினான். அவனை பொறுத்தவரை வள்ளிகுட்டி  ஒரு சாதாரண கன்று குட்டி அல்ல. அவனுக்கு மிகவும் நெருங்கிய ஒரு ஜீவராசி அது.
தந்தை இறந்து சிலவருடங்கள் ஆகிவிட்டிருந்தது.
தாயார் சிவகிரி  வேலாயுதத்தை  வாழ்க்கையில் சேர்த்துகொண்டார். அது ஆனந்தனின் நிம்மதியை தொலைத்து விட்டிருந்தது ..
வேலாயுதத்தின்  போக்கு ஆனந்தனுக்கு கொஞ்சம் கூட பிடிக்கவில்லை. அந்த ஆள் கிட்டவந்து உரசி உரசி பேசும்  விதம்  அவனுக்குள் சந்தேகத்தை விதைத்தது ..

அக்காவும் அண்ணாவும்  புத்தளத்துக்கு பொன்னையா  மாமாவோடு போய்விட்டார்கள் . அவர்கள் அங்கு உள்ள பள்ளிகூடத்தில் படிக்கிறார்கள். மாமாவுக்கு அங்கு பெரிய தென்னந்தோட்டம் இருக்கிறது.
ஆனந்தன் மட்டும் அம்மாவோடு ஒட்டி சுட்டானில் தங்கி விட்டான்.

புதிய அப்பாவின் மீது உள்ள  வெறுப்பினால்  தானும் புத்தளத்துக்கு  சென்று விடலாம் என்றுதான் எண்ணி கொண்டிருந்தான்.அடிக்கடி தாயை  தொந்தரவு செய்துகொண்டே இருந்தான்.
அவளுக்கும் வேலாயுதம் மீது பூரண நம்பிக்கை வரவில்லை . தான் அவசரப்பட்டு விட்டதாக எண்ணினாள். இனி என்ன செய்வது . மீதி காலத்தை ஒட்டி விடவேண்டியதுதான் வேற வழி?
ஏதோ விதம் விதமாக சிந்தித்து கொண்டிருந்தவளை திடுக்கிட வைத்தது ஆனந்தனின் குரல்


அம்மா நான் புத்தளத்துக்கு   போகப்போகிறேன், காசு தாங்கோ அம்மா!
என்னட்டை எங்க காசு இருக்கு?  வள்ளிக்குட்டியை தேடிப்பிடிச்சு வித்திட்டு போ!
கிணற்றடியில் இருந்த வேலாயுதம் : யாரை கேட்டு   வள்ளிகுட்டியை விக்க உத்தேசம் என்று கொஞ்சம் காரமான வேலாயுதத்தின் குரல் ஒலித்தது.
அந்த குரலில் இருந்த அதிகாரம் ஆனந்தனுக்கு மட்டுமல்ல அவளுக்கும் பயத்தை கொடுத்தது. இருவருமே ஒரு பொறியில் சிக்கிகொண்டதாக உணர்ந்தனர்.
அயல் வீடுகளில் கொஞ்சம் காசு கடன்வாங்கி ஆனந்தனை புத்தளத்துக்கு அனுப்பிவைத்தாள்.

புத்தளத்தில்  ஆனந்தனுக்கு அடுத்த அதிர்ச்சி காத்திருந்தது, அக்காவும் அண்ணாவும் மாமாவின் தென்னந்தோட்டத்து வேலைகளை  செய்து கொண்டிருந்தனர்.பொன்னையா மாமா அவர்களை பள்ளிக்கு அனுப்பவில்லை .அவர்களுக்கு வேறு போக்கிடம் இருக்கவில்லை .பொன்னையா மாமாவுக்கு சம்பளம் இல்லாத வேலைக்காரர்கள் பட்டியலில் ஆனந்தனும் வந்து சேர்ந்தான் .
ஒரு சில நாட்கள் சென்றன,  ஒரு நாள் கதையோடு கதையாக  ஊரில் உள்ள ஒரு பலசரக்கு கடைக்காரரை பற்றி சுவாரசியமான துணுக்குகளை பேசி கொண்டிருந்தனர். அவன்  ஆடு மாடு களவெடுத்து  விற்று பிடிபட்டவன் என்று யாரோ கூறியதாக அக்கா சொன்னாள். ஆனந்தனுக்கு ஒரு பொறி தட்டியது . ஒருவேளை தங்களின்  வள்ளிகுட்டியை  அவன்தான் திருடி இருப்பானோ? அப்படி என்றால் உடனே தான் ஒட்டி சுட்டானுக்கு போகவேண்டுமே?  ஒரு வேளை அவன் எடுத்திருந்தாலும் அதுவரை விற்காமல் இருப்பானா? என்றெல்லாம் மனதில் எண்ணங்கள் அலை மோதின.  அடிமனதில் வள்ளிகுட்டி பத்திரமாக இருப்பது போன்ற எண்ணம் ஓயாமல் வந்து வந்து போனது ,
மூவரும் மீண்டும் ஒட்டி சுட்டானுக்கு போக முடிவெடுத்தனர்..
இரவிரவாக மூவரும் சிந்தித்து அடுத்தநாள் பொன்னையா மாமாவிடம் ஒரு பொய்யை கூறினார், ஊரில் ஒரு ஆச்சியிடம் தங்களின் காலஞ்சென்ற தந்தையார் ஐந்தாயிரம் ரூபா  கொடுத்து வைத்திருப்பதாகவும் அதை மூவரும் போய் கேட்டால்தான் அவர் தருவார் என்றனர்.
பொன்னையா மாமாவுக்கு அதை நம்புவதா இல்லையா என்று கொஞ்சம்  குழப்பம் மேலிட்டது .  இருந்தாலும் அவர்களுக்கு   காசு கொடுத்து அனுப்பி வைத்தார்.
ஒட்டி சுட்டானில் அவர்கள் தங்கள் தாய் வீட்டிற்கு போகாமல் ஒரு  உறவினர் வீட்டிற்கு சென்றனர் . அவர்கள் இவர்களை உள்ள சிறு கொட்டிலில் தங்க அனுமதித்தனர்.
அடுத்தநாள் முழுவதும் அவர்கள் தங்களின் சந்தேகத்துக்கு உரிய  கடைக்காரரின் நடவடிக்கைகளை  அவதானித்தனர்.
அவர்களின் சந்தேகம் வலுத்தது.
மூன்றாவது நாள் இரவு அவர்கள் கடைக்காரரின் ,மறைவான ஒரு தோட்டத்தை கண்டுபிடித்தனர் .
ஊருக்கு  புறம்பாக உள்ள அந்த தோட்டத்துக்கு இரவில் மெதுவாக சென்றனர் . இரவு இருட்டில் அங்கு ஆடு மாடுகளை இனம் காணுவதில் சிரமம் இருந்தது. ஆனாலும்   ஒரு கொட்டிலில் வள்ளிகுட்டியியை கண்டனர்,
இவர்களை அடையாளம் கண்ட அந்த வாயில்லா ஜீவன்கூட  நிலைமையை புரிந்து கொண்டதோ என்னவோ மிகவும் அமைதியாக  ஒரு சத்தமும் செய்யாமல் மெதுவாக அவர்களை பின் தொடர்ந்த வெளியே வந்தது
.
அன்றிரவு அவர்கள் தூங்கவே இல்லை, இரவு முழுவதும் வள்ளிகுட்டியை தடவுவதும் அதை பற்றி பேசுவதுமாக கழிந்தது.
கடைக்காரரை போலீசில் பிடித்து கொடுக்கலாம் என்று சிலர் ஆலோசனை வழங்கினர், ஆனால் அது வீண் பகையை வளர்க்கும் என்பதால் அந்த விவகாரத்தை அப்படியே கைவிடுவது என்று அவரகள் தீர்மானித்தனர்.
அடுத்த நாள் அந்த கடைகாரர் எதுவுமே நடக்காதது மாதிரி அமைதியாக இருந்தார் . காலப்போக்கில் இந்த விடயம் ஊர் மக்களுக்கு தெரியவந்தது . அந்த கடைக்காரனின் மரியாதை மீட்கவே முடியாத அளவு பழுதாகியது.

இந்த சம்பவங்கள் இடம்பெற்று சில வருடங்கள் ஓடிவிட்டன.
அவர்களின் மூத்த சகோதரி தற்போது ஆசிரியையாக கடமை ஆற்றுகிறார், இரண்டு தம்பிகளும் பள்ளிக்கூடம் செல்கிறார்கள். தாயார்  சிவகிரி அடிக்கடி அங்கு வருவார்.
அவருக்கு தற்போது ஒரு ஆண்குழந்தை உண்டு. வேலாயுதம் அந்த குழந்தையை மட்டுமே தன்குழந்தை போல எண்ணுவான் என்ற எண்ணத்திலேயே இந்த மூவரும் அங்கு செல்வதில்லை.  சிவகிரியின் மனதில் இது ஒரு பெரும் துயரமாகி விட்டிருந்தது .அவளால் ஒன்றுமே செய்ய முடியவில்லை.. அவர்களின் வாழ்வுக்கு வேலாயுதத்தால் ஒரு நன்மையும் கிடைக்கவில்லை . அவன்தான் எதுவிதமான  மென்மையான உணர்வுகளுக்கு மதிப்பளிப்பதில்லையே .
 வள்ளிகுட்டியின் தலைமையில் ஒரு  சந்ததியே உருவாகி இருந்தது.
அந்த வீட்டில் இருந்து காலையும் மாலையும் பால் டிப்போவுக்கு பால் விநியோகம் நடைபெறுகிறது.

கருத்துகள் இல்லை: