வியாழன், 15 ஜூன், 2017

ஆறுமுகத்தின் பழைய சைக்கிள்

சகிக்க முடியாத  கொடுமையான வெய்யில் நகரையே சுட்டு எரித்து கொண்டிருந்தது, வெயிலின் வெப்பத்துக்கும் சாலையின் தூசிக்கும் சவால் விட்டுக்கொண்டு ஆறுமுகத்தின்  பழைய சைக்கிள் பறந்து கொண்டிருந்தது.
யாழ் வைத்தியசாலைக்கு பின்புறமாக உள்ள  மின்சார நிலையவீதியின் திருப்பத்தில் அவனுக்கும் அந்த சைக்கிளுக்கும் ஒரு இடி காத்திருந்ததை அந்த வீதியில் யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். வீதியின் கரையில் காத்திருந்த ஒரு சண்டியன்  எட்டி ஆறுமுகத்தின்  சேர்ட்டை இழுத்து பிடித்தான் . நிலை குலைந்த ஆறுமுகம்  தரையில் உருண்டு விழுந்தான் . அவன் கொண்டுவந்திருந்த தலையணை, துவாய், சோற்று பார்சல் எல்லாம் தரை மீது சிதறி எல்லா பக்கமும் சிதறி ஓடியது.  இரண்டாவது சண்டியன் சைக்கிளை தூக்கி நிலத்தில் குத்தி மிதித்தான்.
ஆஸ்பத்திரியில் உள்ள ஒரு நோயாளிக்கு கொண்டு செல்லும் உணவும் உடையும் அடிபட்டு விழுந்த அனாதைகள் போல காட்சி அளித்தது, இந்த காட்சியை பார்த்தவர்கள் திகைத்து போனார்கள். எவரும் முன்னே வந்து என்ன என்று கேட்கும் திறன் அற்று இருந்தனர். அந்த சண்டியர்களின் தோற்றமும் செயலும் அந்த தெருவையே பயமுறுத்தி விட்டிருந்தது, தங்கள் கடமை முடிந்தது என்பது போன்ற திருப்தியில் சண்டியர்கள் படு மோசமான வார்த்தைகளால் வசை பாடிக்கொண்டே அவ்விடத்தை விட்டுஅகன்றனர்.. வந்தார்கள் அடித்தார்கள் சென்றார்கள் . ஏன் எதற்கு என்று கேட்பதற்கு அங்கு யாருக்கும் துணிவு இருக்கவில்லை.

சில நிமிடங்கள் சென்ற பின்பு அருகில் இருந்த காக்கா கடையில் இருந்து ஒருவர் வந்து என்ன ஏது என்று கேட்டார் . ஆறுமுகத்தால்  எதுவுமே பேச முடியவில்லை. அருகில் இருந்தவர்கள் ஒருமாதிரி சைக்கிளையும் தூக்கி நிமிர்த்தி கிழிந்துபோன தலையணை,துவாய் மற்றும் தட்டு முட்டு பொருட்களை தேடி எடுத்து சைக்கிள் கூடைக்குள் போட்டனர், சாப்பாட்டு பார்சல் வீணாக போகாமல் தெருநாய்கள் ஓடி வந்து ஆவலுடன் சாப்பிட்டன. காக்கா கடைக்காரர் தனது கடையின் பின்புறத்தில் உள்ள கிணற்றில் முகம் கைகால்கள்  கழுவி கொள்ளும்படி கூறினார்  .
சைக்கிள் கொஞ்சம் பழுதாகி விட்டிருந்தது அதை உருட்டி கொண்டே ஆஸ்பத்திரியை நோக்கி ஆறுமுகம்  செல்கையில் தம்பி சாப்பாடு வாங்க காசு இருக்கா என்று கடைக்கார் கேட்டார் . ஆஸ்பத்திரியில் இருக்கும் அய்யாவிடம் காசு இருக்கிறது என்று பதில் கூறும் பொழுது அவரால்  தனது  அழுகையை மறைப்பது கடினமாக இருந்தது,

ஆஸ்பத்திரியை விட்டு  வெளியே வந்து ஒரு சைக்கிள் கடையில் சைக்கிளை திருத்த கொடுத்தார்.   அருகில் உள்ள மரக்குற்றியில் அமர்ந்து  ஒரு பித்து பிடித்தவன் போல பலவாறு சிந்தித்தான்.

முன்பின் அறிமுகமில்லாத சண்டியர்களிடம் ஆறுமுகம்  அடிவாங்கிய
வரலாறு சைக்கிள் கடைக்காரரை கொஞ்சம் அனுதாபம் கொள்ளவைத்தது.

அந்த சண்டியர்கள் ஏன் ஆறுமுகத்தை  அடிக்க வேண்டும் என்பதுதான் பெரும் மர்மமாக இருந்தது. சைக்கிள் கடைக்காரர் துருவி துருவி விசாரித்தார்.
 பின்பு அந்த சண்டியர்களை தேடிப்பிடித்து விசாரிப்பது  ஒன்றுதான் வழி என்று  "நான் விசாரித்து பார்க்கட்டுமா" என்று கேட்டார்.
ஆறுமுகம்  நடுங்குவதை பார்த்து விட்டு நீங்கள் பயப்படவேண்டாம் நானே விசாரிக்கிறேன் என்று கூறினார்.
 கொஞ்சம் இங்கேயே இருங்கோ . பயப்படவேண்டாம் என்று விட்டு வெளியே சென்றார். ஆறுமுகத்துக்கு  பயம் பிடித்து கொண்டது, இந்த ஆள் ஏதாவது கேட்கப்போய் திரும்பவும் சண்டியர்கள் வந்து விட்டால் ? பேசாமல் சைக்கிளையும் எடுத்து கொண்டு ஓடிவிடலாமா என்றெண்ணினான்.

சைக்கிளை பார்க்கும் பொழுதெல்லாம்  வெட்கமும் துக்கமும்  நிறைந்த அந்த  சம்பவம் ஞாபகத்துக்கு வருவதால் அதையும் விற்பது என்ற முடிவுக்கு வந்தான் .
சைக்கிள் கடைக்காரர் திரும்பி வந்தார். : உங்களுக்கு நடராஜா என்ட ஆளோட என்ன பிரச்சனை ?
ஆறுமுகத்தின் மூளைக்குள் பொறி தட்டியது " அது பக்கத்துக்கு வீட்டுக்காரர்." அவரோட எங்களுக்கு கொஞ்சம் வேலி பிரச்சனை இருக்குது .
ஆனா அது வேற பிரச்னை அதுக்காக அந்த ஆள் ?   அவரோ ?
இந்த சண்டியர்களை நம்ப முடியாது சும்மா அவரை சாட்டி இருக்கலாம் என்றான் ஆறுமுகம். 
ஆனா அவங்களுக்கு உங்களைபற்றி நிச்சயமாக தெரிஞ்சிருக்கு .ஆள்மாறாட்டம் இல்லை.என்று சைக்கிள் கடைக்காரர் கூறினார்.
ஆறுமுகம் சைக்கிளை அந்த கடைக்காரருக்கே  விற்று விட்டு வெளியே வந்தான்.
இப்பொழுது ஆறுமுகம் கொஞ்சம் வன்மத்தோடு ஏறுமுகமாக  உருமாறி இருந்தான்.
நேராக தனக்கு தெரிந்த போலீஸ் நிலைய சிற்றூழியரின் வீடு நோக்கி நடந்தான். கையில் சைக்கிள் விற்ற காசும், பையில் சாராய போத்தலும்  இருந்தது.
அடுத்த நாள்  போலீஸ் நடராஜாவை வீட்டில் வைத்து கைது செய்து  கூடவே பக்கத்து வீட்டு ஆறுமுகத்தையும்  போலீஸ் நிலையத்துக்கு வருமாறு கூறிவிட்டு சென்றார்கள்.
நடராஜா  ஆறுமுகத்தை  போலீஸ் நிலயத்தில் கண்டதும் சத்தம் போட்டு அழுதார். ஒரு சைக்கிள் கள்ளன் என்று ஆக்கி போட்டீங்கள் என்று நெஞ்சே வெடித்துவிடும் சோகத்தோடு அழுதார்.
ஆறுமுகத்துக்கும் பார்க்க துக்கமாகத்தான் இருந்தது. இனி என்ன செய்ய முடியும்? நாடகத்தை அரங்கேற்றி விட்டாகி விட்டது பாதியில் எழுந்திருக்க முடியாதே?
நடராஜா மனதிற்குள் பலவாறாக எண்ணினார். ஆறுமுகத்தின்  முகத்திலும் கைகளிலும் இருந்த காயம் அவருக்கு என்னனவோ மர்ம கதைகளை கூறி கொண்டிருந்தது .
வேலிப்பிரச்சனைக்காக தான் அனுப்பிய ஆள்  கொஞ்சம் அத்து மீறி நடந்திருப்பார்களோ? அவர்கள்தான் ஆறுமுகத்தின்  சைக்கிளையும் களவு எடுத்திருப்பாரோ?
 என்னவோ தான் நினைத்ததை விட பெரிதாக ஏதோ நடந்திருகிறது என்று மெல்ல மெல்ல ஊகித்தார் .
போலீஸ் இருவரையும் விசாரித்து விட்டு பின்பு அழைப்பதாக கூறி அனுப்பி விட்டனர்,
ஆறுமுகத்தை  சண்டியர்கள் அடித்த விடயம் நடராஜவுக்கு தெரிந்ததும்  அவர் அதிர்ந்துவிட்டார்.. சும்மா கொஞ்சம் மிரட்டி வைக்குமாறு ஒருவரை தான் கேட்டு கொண்டது இவ்வளவு தூரத்துக்கு வந்திருக்கிறது, இனி என்ன செய்வது?  வீணாக அயல்வீட்டானை பகைத்து விட்டோமே என்று வருந்தினார்.
 நடராஜா  உண்மையில் தன்னை அடிக்க ஆள் அனுப்பவில்லை கொஞ்சம் மிரட்டத்தான் அனுப்பியிருக்கிறார் என்று ஆறுமுகத்துக்கும்  தெரியவந்தது ..

கோபம் குறையவில்லை இருந்தாலும் நடராஜாவின் பெயர் தன்னால்  கெட்டு போய்விட்டது. ஊர் சிறுவர்கள் கூட நடராஜாவை சைக்கிள் கள்ளன் என்று கேலியாக குறிப்பிடும்போதெல்லாம் ஆறுமுகத்தின் நெஞ்சில் ஊசி குத்தியது.
சைக்கிள் களவு போனதாக பொய் முறைப்பாடு கொடுத்ததை எண்ணி வேதனைபட்டான்.
 உண்மையாகவே சைக்கிள் களவு போயிருந்தால் கூட இவ்வளவு கவலை பட்டிருக்க மாட்டான்.
இது நடந்து சுமார் பத்து வருடங்களாக இரு குடும்பங்களும் ஜென்ம எதிரிகளாகவே அந்த அழகிய கிராமத்தில் வசித்தனர்..

பின்பு ஒரு நாள் ஏனைய ஊர்களைப் போலவே அந்த ஊருக்கும்  யுத்த தேவதை  அட்டகாசமாக வந்து சேர்ந்தாள்.
நல்லவன் கெட்டவன் ஆண் பெண் முதியோர் இளையோர் உயர் சாதி கீழ் சாதி பணக்காரன் ஏழை  ஆடு மாடுகள்  என்ற பாகுபாடுகள் எதுவும் காட்டாது அடித்து நொறுக்கி ஓட ஓட விரட்டினாள்.
உலகமே அழிந்து போய்கொண்டிருப்பதாக எல்லாரும் கருதினர். கூட்டத்தோடு கூட்டமாக இரு குடும்பமும் உயிரை கையில் பிடித்து கொண்டு  ஓடத்தொடங்கினர்.
சைக்கிள்கள் எல்லாம்  லாரிகள் போன்று பாரம் சுமந்தன. அவற்றில் பாத்திரம் பண்டங்களை ஏற்றி உருட்டி கொண்டு சென்றனர் .......
பழைய இரும்புகளோடு இரும்பாக துருவேறி இறந்து போய் கிடந்த சைக்கிள்களுக்கு எல்லாம் வாழ்வு வந்தது ,
அவற்றையும் ஏதேதோவெல்லாம் செய்து சக்கரம் பூட்டி அவற்றின் மேலும் பாரங்களை ஏற்றி உருட்டி கொண்டு அந்த கிராமமே ஒற்றுமையாக ஊரை காலி பண்ணியது.
அந்த இரு குடும்பமும்  ஒருவரோடு ஒருவர் அதிகம் பேசாவிடினும் அன்பாக  செல்வதை காணும் யாரும் நேற்றுவரை நம்பியிருக்க மாட்டார்கள்.
ஆனால் அதை காண்பதற்கு  இன்று யாரும் அங்கு இருக்கவில்லை. ஆங்காங்கு சில மாடுகளும் ஆடுகளும் நாய் பூனைகளும் வெறிச்சோடி போய் இருந்த வீதிகளில் அனாதைகளாக திரிந்தன.
தங்களோடு நேற்றுவரை இருந்த மனிதர்களை எங்கே காணவில்லை என்று ஏங்கி வழிமேல் விழி வைத்து அவர்களுக்காக காத்திருந்தன.

கருத்துகள் இல்லை: