வெள்ளி, 26 ஆகஸ்ட், 2016

சீனி மாமாவும் யார்ட்லி சோப்பும்

1968..  கிளிநொச்சியில் இருந்து ராமநாதபுரம் போகும் பேருந்து திருவையாறு ஹட்சன் ரோடு சில்வா ரோடு ஆறுமுகம் ரோட்டு மற்றும் தருமபுரம் வழியாக புழுதியை கிளப்பி கொண்டு சென்றது .
அந்த பேருந்தில் வெய்யிலும் புழுதியும் பதம் பார்த்த விவசாயிகள் மூட்டை முடிசுகளோடு ஏறுவது இறங்குவதுமான காட்சி உயிர்த் துடிப்போடு ஓடிக்கொண்டு இருந்தது.
ஆறுமுகம் ரோட்டில் இறங்கிய சீனிமாமா தனது மூட்டை முடிச்சுகளை கவனமாக எடுத்து கொண்டு விறு விறுவென்று தனது வீட்டை நோக்கி நடந்தார்.
சீனிமாமாவின் பொதிகளில் இருந்து வரும் யார்ட்லி சோப்பின் வாசனை ஏனைய பயனிகளையும்கூட கொஞ்சம் தழுவி செல்லும்.
 சீனிமாமாவின் வாழ்க்கை கொஞ்சம் வித்தியாசமானது. பழக்க வழக்கங்களில் கொஞ்சம் ராணுவ மிடுக்கு இருக்கும். அனேகமாக எதற்கும் இலகுவில் தனது பழக்க வழக்கங்களை அல்லது கோட்பாடுகளை மாற்றி கொள்ள மாட்டார்.

அவருக்கு நண்பரகள் குறைவு. கட்டிய மனைவி தனது குழந்தையையும் கூட்டி கொண்டு பல வருடங்களுக்கு முன்பே சீனிமாமாவை விட்டு பிரிந்து விட்டார்.

 சீனிமாமா ஒரு போலீஸ்காரராக வாழ்க்கையை ஆரம்பித்தார். சுமார் மூன்று வருடங்களுக்கு மேல் அந்த உத்தியோகத்தில் அவரால் நிலைத்து நிற்க முடியவில்லை.
ஏதோவொரு சிங்கள குக்கிராமத்தில் அவர் பணியாற்றி கொண்டிருந்த பொழுது   ஒரு நாள் ஒரு விபத்து நடந்தது. அந்த கிராமத்தை ஊடறுத்து ஓடிகொண்டிருக்கும்    ரெயில் முன்பாக ஒருவர் தற்கொலை செய்துகொண்டார். அவரது உடல் துண்டு துண்டாகி பாதையோரம் வீசப்பட்டுகிடந்தது .
அந்த உயிரற்ற  சிதிலமடைந்த  உடலுக்கு ஒரு இரவு  முழுவதும்  காவலுக்கு நிற்க வேண்டிய கடமை  கான்ஸ்டபிள்  சீனீமாமாவிடம் வந்து சேர்ந்தது .

தோற்றத்தில்  மிகவும்   மிடுக்காக ஒரு ராணுவ வீரன் போன்று தோன்றும்  சீனிமாமா உண்மையில்  மிகவும் மென்மையான உணர்வுகள் கொண்டவராகும்.
தனியாக நடுக்காட்டில்  ரெயில் பாதைக்கு அருகில் ஒரு உயிரற்ற  உடலுக்கு காவலுக்கு  நின்ற சீனிமாமாவுக்கு  அந்த இரவு  அவரது வாழ்வையே  தலைகீழாக மாற்றி போட்டு விட்டது.

பொழு விடிந்ததும் முதல் வேலையாக போலீஸ்  வேலையை விட்டு விலக வேண்டும் என்ற தீர்மானத்துடன் அந்த இரவு கழித்தார்.

அதன் பின் அவர் ஒரு விவசாயியாக  அவதாரம் எடுத்தார். கல்யாணம் செய்தார் , சில ஆண்டுகளிலேயே  ஒரு பெண் குழந்தைக்கு தந்தையானார் ,
மூன்று ஆண்டுகள் மட்டுமே நிலைத்து அவரின் குடும்ப வாழ்வு .
அவரது கோபம் அல்லது ஒத்து போக முடியாத சுபாவமோ என்னவோ  அவரது மனைவி குழந்தையையும் விட்டு பிரிந்தார்.

அவர் குடியிருந்த இரண்டு ஏக்கர்  தோட்டத்தில்  நானும் ஒரு சிறு குடிசையில் இருந்தேன்.  அவரை அண்மையில் இருந்து சுமார் இரண்டு வருடங்கள்  வியப்புடன்  பார்த்து கொண்டிருந்தேன்.
அவர் ஒரு ரசனைக்கு உரிய மனிதராகத்தான் இருந்தார்.
மாட்டு வண்டி வைத்திருந்தார். அருகில் உள்ள கிராம மக்களின் சந்தை வியாபார போக்கு வரத்தை அவரது மாட்டு வண்டி உறுதி செய்தது.
காசு வருகிறதே என்று ஓடி ஓடி அவர் வேலைசெய்து நான் காணவில்லை. ஆனால் ஓய்வாகவும் அவரை நான் அதிகம் காணவில்லை . தேவைக்கு ஏற்ற வேலை செய்தார்.
அவர் மீது அந்த கிராம மக்கள் மிகவும்  மரியாதை வைத்திருந்தார்கள். அவரிடம் பேராசையே கிடையாது. எதற்கும் பெரிய அளவில் ஆசைப்படமாட்டார். மிகவும் நேர்மையானவர்.
  
பீடி சுருட்டு பழக்கம் கிடையாது . எப்பொழுதாவது மாதத்திற்கு ஒருதடை அல்லது இரு தடவை அவர் சிகரெட் புகைத்ததை பார்த்திருக்கிறேன். சாராய வைத்திருப்பார். ஆனால் அவர் குடிப்பதை நான் காணவேயில்லை.
மிகவும் சுத்தமான பழக்க வழக்கங்களை கொண்டிருந்தார்.
கிணற்றடியில்  குளிக்கும் காட்சி ஏதோவொரு கோவிலில்  மிகப்பெரும் அபிஷேகம் நடப்பது போல் தோன்றும்.
மீண்டும் மீண்டும் வாளியால் அள்ளி அள்ளி தண்ணீரை தலையில் ஊற்றுவார். அவர் பாவிக்கும் யார்ட்லி சோப் அந்த காலத்தில் அவரது கிராமமே கண்டு கேட்டு ஒன்று.
அந்த சோப்பின் வாசம் அவர் குடியிருந்த தோட்டத்தையும் தாண்டி வீதிக்கும் வீசும். அவர் அந்த சோப்பை அவ்வளவு ரசித்து ரசித்து பயன்படுத்துவார்.
அதன் பின் அவர் உடுக்கும் ஆடைகளோ உண்மையில் பாலை பழிக்கும் வெண்மை என்பார்களே அப்படி இருக்கும்.
எப்படி ரசித்து ரசித்து குளிப்பாரோ அப்படியே ரசித்து ரசித்து சமைப்பார். இடையிடையே எனக்கும் கொஞ்சம் தருவார்.
நேரம் கிடைக்கும் போது கொஞ்சம் ரேடியோ கேட்பார்.
தனிமரமாக நின்றாலும் ஏதோ வொரு மகிழ்ச்சியோடு அவர் எப்பொழுதும் காட்சி அளிப்பார்.
அவரது சுயமான மகிழ்ச்சியான வாழ்வின் இரகசியம் என்ன வென்று யாரும் பெரிதாக சிந்தித்தாக தெரியவில்லை. அவருக்கு ஒரு இரகசிய காதலி எங்கோ இருப்பதாகவும் ஒரு சிலர் பேசிக்கொண்டார்கள்   
அப்படி ஒருவேளை இருந்திருக்குமோ? ம்ம்ம் அப்படி இருந்தாலும் அதில் என்ன தவறு?   நியாயமான நேர்மையான சிலவிடயங்களை கூட வெளிப்படையாக செய்ய கூடிய சமுக சூழ் நிலை அவருக்கு வாய்க்கவில்லையே?  
வாழ்வை மிகவும் ரசித்தார் ஆனால் பெரிதாக எதற்கும் ஆசைப்படவராக தெரியவில்லை. 
சுமார் நாற்பது வருடங்களுக்கு பின்பு நான் இந்த வாரம்  யார்ட்லி சோப் வாங்கினேன்.
 அதன் மெல்லிய  வாசம் சீனிமாமாவின் வாழ்வை என் மனக்கண் முன் கொண்டு வந்தது .   இந்த வாழ்வை கூடியவரை ரசித்து ரசித்து நேர்மையாக நல்லவனாக வாழ்வதை  விட வேறு என்ன பிரபஞ்ச நோக்கம் ஒரு மனித பிறவிக்கு தேவை?  When the ambition end the peace begin.
வெய்யிலும் புழுதியும்  கலந்து வீசும் வட்டக்கச்சி ஆறுமுகம் ரோடு கண்ட ஒரே ஒரு  வித்தியாசமான வாசம்  அந்த  யார்ட்லி சோப்பின் வாசம்.

கருத்துகள் இல்லை: