செவ்வாய், 22 மார்ச், 2016

சிவநந்தினி.....தகுதியற்ற ஒரு மனிதகூட்டம்

சென்ற மாதம் ஒரு ஊருக்கு பிதிர்கடமை செய்வதற்கு நான் போயிருந்தேன். அது ஒரு இளம் பெண்ணின் ஆத்மா சாந்தி பூஜை,
நான் வெறும் பார்ட் டைம் பூசாரி மட்டும்தான்.
வழக்கமாக இது போன்ற காரியங்கள் நான் செய்வதில்லை.எனக்கு அதிக அனுபவம் கிடையாது. ஏனோ வெகு தொலைவில் இருந்து தேடி வந்தார்கள்.
அவர்கள் ஊரில்தான்  ஏராளமாக பூசாரிகள் இருப்பார்களே?
 அந்த ஊர் பிரமுகர் வைத்தியநாதன் வீட்டுக்கு வருமாறு சிலர் என்னை வந்து அழைத்தார்கள்.
சுமார் ஐம்பது கிலோமீட்டர்களுக்கு அப்பால் இருந்து தேடிக்கொண்டு வரவேண்டும் என்பது ஏன் என்று எனக்கு அன்று விளங்கவில்லை.    அது பற்றி கேட்டதற்கு ஏதேதோ பதில்கள் சொன்னார்கள் ஆனால் அவை தெளிவானதாக இருக்கவில்லை. எனக்கு பணம் வந்தால் சரிதானே ஏன் வீண் கேள்விகள் என்று பேசாமல் இருந்துவிட்டேன்.

அந்த வீட்டு பெரியவரின் முகம் அளவு கடந்த சோகத்துடன் காணப்பட்டது. அங்கு இருந்த ஒருவரும்  அந்த சோகத்தை பெரியதாக வெளியில் காட்டிக்கொள்ளவில்லை ஆனால் அவர்கள் எல்லோரது முகத்திலும் அடக்கி வைத்திருந்த துயரம் தெரிந்தது.
ஒரு வருடத்துக்கு முன்பு இறந்து போன பெரியவரின் பேத்தியின் ஆத்மாவுக்குதான் சாந்தி வேண்டி அந்த தர்ப்பணம் என்று தெரியவந்ததும் நான் அதிர்ந்து போனேன்.
ஒரு அழகான இளம்பெண்ணின் போட்டோவை கொண்டுவந்து வைத்தார்கள். அந்த பெண்ணின் பெயர் சிவநந்தினி.
 நான் எத்தனையோ கணக்கில் அடங்காத அளவு இது போன்ற சடங்குகள் செய்திருக்கிறேன். ஆனாலும் முதல் தடவையாக இங்குதான் என் மனம் ஏனோ என்னவோ செய்துகொண்டே இருந்தது, நெஞ்சுக்குள் எதோ ஒன்று அடைத்து கொண்டது போல இருந்தது,
பெரியவருக்கு நான்கு பெண்கள் இரண்டு ஆண்கள்  இன்னும் நெருங்கிய உறவினரால் சிலரும் அங்கு இருந்தனர். ஆனால் அவர்கள் யாரும் எதுவும் பேசவில்லை.  மிகவும் ஒரு பாரமான மௌனம் அங்கு நிலவியது,
எல்லோரும் மனதிற்குள் அழுவது எனக்கு கேட்டுகொண்டே இருந்தது.
ஏன் இவர்கள் இவ்வளதூரம் ஒரு இறுக்கமான அமைதியை கடைப்பிடிக்கிறார்கள் என்பது எனக்கு விளங்கவே இல்லை.

அந்த மௌனம்தான் மிகவும் கொடிதாக இருந்தது.
அந்த கிரியைகள் முடிந்து எனக்கு அவர்கள் தரவேண்டிய பொருட்களையும் பணத்தையும் நான் பெற்றுகொண்டு எனது ஸ்கூட்டரில் ஏறினேன்

அப்பொழுது அந்த பெரியவர் சத்தம் போட்டு குலுங்கி குலுங்கி அழுதார், ஏனையவர்கள் கூடுமானவரை சத்தத்தை அடக்கி கொண்டு அழுதார்கள்.

ஏன்தான் இந்த வீட்டுக்கு கிரியை செய்ய வந்தேன்?
அவர்களின் அடக்கி அமுக்கி அழுத சோகம் என்னை நிரந்தரமாக வருத்தி கொண்டே இருந்தது.
சில நாட்களுக்கு பின் அவர்களை பற்றி நான் பல தகவல்களை அறிந்து கொண்டேன்.
பெரியவர் மிகவும் செல்வாக்கானவர். ஏராளமான வயல் நிலம் அவர்களுக்கு இருந்தது.
பல வீடுகளும்  மார்கெட்டில் சில கடைகளும் அவர்களுக்கு உண்டு, அவர்களின் குடும்பம் ஓரளவு கூட்டு குடும்பமாகவே இருந்தது.
பெரியவர் வைத்தியநாதன்தான்  குடும்பத்தில்  எல்லாரினதும் திருமணம் வியாபாரம் போன்ற எந்த விடயத்தையும் தீர்மானிக்கும் ஸ்தானத்தில் இருந்தார்.
ஒரு நாள் அவர்களை பார்த்து விதி சிரித்தது .
அவரின்  பேத்தி சிவநந்தினி குடும்பத்தின் கட்டுப்பாடுகளை மீறி ஒருவனை (முரளி)  காதலித்து அவனோடு போய்விட்டாள்.
இதனால் அவர்களது குடும்பம் அதிர்ந்து போய்விட்டது.
அதற்கு காரணமும் இருந்தது.
அந்த முரளி  அவர்கள் கேள்விப்பட்ட அளவில்  ஒரு உதவாக்கரையாக இருந்தான். அவர்களால் அதை ஏற்று கொள்ளவே முடியாமல் போய்விட்டது.
எங்கோ ஒரு கோவிலில் சிவனந்தினியும் முரளியும் திருமணம் செய்ததாக யாரோ சொன்னார்கள். அவர்களை பொறுத்தவரை சிவநந்தினி என்ற பெயரையே அவர்கள் மறந்து விட்டதாக தாளாத வேதனையுடன்  கூறிகொண்டார்கள்.  

காதல் வாழ்வை நம்பி போன சிவ நந்தினியின் விதி அவளுக்கு மீண்டும் மீண்டும் சதி செய்துவிட்டது.

அவள்  வாழ்க்கையை ஆரம்பித்த சில நாட்களுக்குள்ளேயே அவளது கணவன்  முரளி தனது சுயரூபத்தை காட்ட தொடங்கி விட்டான்.
சிவ நந்தினி குடும்பத்தின் பெரும் செல்வத்தை மனதில் வைத்துதான் முரளி காதல் வலை வீசினான் என்ற சந்தேகம் பலருக்கும் உண்டு.  

ஒருநாள் முரளி சொல்லாமல் கொள்ளாமல் ஓடிவிட்டான்.
முன்பின் அறிமுகம் இல்லாத ஒரு  ஊரில் கையில் ஒரு குழந்தையுடன் நந்தினி எப்படி காலத்தை ஓட்டினாள் என்று யாருக்கும் சரியாக தெரியவில்லை.

சில நாட்களில் நந்தினிக்குஉடல் நிலை சரியில்லாமல் போய்விட்டது. பராமரிக்க யாரும் இல்லாமல் ஒரு அநாதைபோலஆகிவிட்டாள்.
யாரோ  சிலர்  அவளை  ஒரு  பெண்கள் விடுதியில் சேர்த்து விட்டார்கள் . உடலில் நோய்...மிகவும் மெலிந்து அழுக்கடைந்த  ஆடைகளுடன்  சிவ நந்தினி இருப்பதாக   பெரியவர்  குடும்பத்துக்கு செய்திகள் வந்தன.

என்ன காரணமோ அவர்கள் தங்கள்  பேத்தியை மீண்டும் சேர்க்கவில்லை.  அவளை பற்றி யாராவது தகவல் கொண்டு வந்தால் அவர்களையும் ஏசி விடுவார்கள்.
துக்கம் அவமானம் ஆத்திரம் எல்லாம் அவர்களின் பாசத்தை மறைத்து விட்டது.  அந்த பெரிய  குடும்பத்தின்  செல்லமான  சின்னஞ்சிறு வாரிசு அவள்தான்.
அவர்கள் அவள் மேல் காட்டிய அன்பும் பாசமும் எந்த  திரைப்படங்களிலும்  கூட  இதுவரை  கண்டிருக்க மாட்டீர்கள். அப்படி ஒரு பாசமழையை அவர்கள்  பொழிந்தார்கள்
அப்படி அவள் மேல் அளவுகடந்த அன்பு வைத்த அவர்கள் ஏன் அவளின் நொறுங்கிப்போன நிலையை கண்டு கொஞ்சம் கூட  கருணை காட்டவில்லை?
அவர்களின் மனம் அப்படி  இறுகிப்போனது  ஏன் .
அவள் இந்த உலகத்தை விட்டு போன செய்தி வந்த அந்த நேரம் அவர்கள் எல்லோருமே உண்மையில் ஒரு விதத்தில் இறந்தவர்கள் போலவே நடந்து கொண்டார்கள்.
அவர்கள் இந்த ஓராண்டாக கடைப்பிடித்து வந்த மௌனம் இன்று பெரியவரால் உடைந்து போனது.
அவர் தனக்குதானே தண்டனை வழங்கி கொண்டிருந்தார்.
குலுங்கி குலுங்கி அவர் அழுது கொண்டே இருந்தார்.
அவருக்குள் எத்தனையோ கேள்விகள? சிவனந்தினியை அவர்கள் ஏன் சேர்க்கவில்லை?
அவர்களை தடுத்தது எது? பாசம் உண்மை என்றால் அதில் ஏன் ஈரம் இருக்கவில்லை?
அவர்களின் பாசத்தை அந்தஸ்து விழுங்கி விட்டதா? அல்லது பணம் என்ற பூதம் எல்லாவற்றையும் ஒரே அடியாக நொறுக்கி விட்டதா?

ஏராளமான சொத்துக்களை சேர்த்து அவற்றை பெருக்கி பெருக்கி சொந்தங்களையும் வெறும் சொத்துக்களாகவே நினைத்து வாழ்ந்த பெரியவரின்  அறியாமை என்பதா ?    
அமைதியாக அவர் உட்கார்ந்து கொண்டு சிவநந்தினியை சிறுவயதில் தான் தூக்கி கொஞ்சி மகிழ்ந்த காலங்களை நினைத்துகொண்டார்.
அந்த  நினைவுகள்  சங்கிலி தொடராக வந்து அவரை நெருப்பில் வாட்டுவது போல வாட்டியது.

அந்த சின்னஞ்சிறு பிஞ்சு குழந்தையோடு தான் கழித்த நாட்கள் மட்டுமே தனக்கு கிடைத்த கடைசி சொர்க்கமாக இப்போ அவருக்கு தெரிந்தது.

நான் ஒரு முட்டாள் முத்துக்களை தூர எறிந்து விட்டு வெறும் குப்பைகளையே சொத்துக்கள் என்று எண்ணி இரும்பு பெட்டியில் வைத்து  பூஜித்தேனே?

கையிலே நிலவை வைத்து கொண்டும் இருட்டுலே காலத்தை வீணடித்து விட்டேன் என்று மனம் அழுதது.

கருத்துகள் இல்லை: