சனி, 27 ஜூன், 2015

அந்த இரண்டாயிரம் ரூபாய் !

கொழும்பில் இருந்து அவசரமாக யாழ்ப்பாணம் செல்லவேண்டி இருந்ததால்  வேறு வழியே இல்லாமல் தனியாகவே ஒரு வான் வாடகைக்கு பிடிக்கவேண்டியதாகிவிட்டது .  சுமார் ஆயிரம் ரூபாயில் செல்ல கூடிய பிரயாணத்திற்கு பதினெட்டாயிரம் ரூபாய் செலவழிக்க வேண்டி இருக்கிறதே என்று எனது கால்குலேட்டர் முளை கொஞ்சம்  கன்ஜல் கணக்கு பார்த்து பார்த்து விசனப்பட்டது.
வான் சாரதி வேறு சில பயணிகளையும் சேர்த்து கொஞ்சம் ரேட்டை குறைப்பதாக உறுதி அளித்தான்,
கொழும்பில் இருந்து புறப்பட்ட நாம் தற்போது நீர்கொழும்பை அடைந்து விட்டோம். வான்காரனோ சதா செல்போனில் பேசிக்கொண்டே ஏதோதோ பயணிகள் ஏற்பாடு பற்றி விசாரித்து கொண்டே இருந்தான்,
எனக்கு என்னவோ  இந்த வான் சாரதி வேறு ஒரு பயணியையும் தேடிப்பிடிக்க போவதில்லை என்ற எரிச்சலில் அவனிடம் பேச்சு கொடுத்தேன்.
தம்பி ஒரு ஆளும் கிடைக்கவில்லையோ?
ஒரு வயசு போன அம்மாவும் மகளும் இருக்கினம் ஆனா ... என்று இழுத்தான் .
உடன பிடிக்கவேண்டியதுதானே இவன் என்ன இழுக்கிறான்?
இதையும் கோட்டை விடப்போகிறான், வேற வான்காரர் மடக்கி கொண்டு போய்விடுவினம் ,
தம்பி பிறகென்ன உடன அவயளை போய் ஏத்துவோம் !
அப்ப சரி .. ஆனா அவை கொஞ்சம் வில்லங்கமானஆக்கள் அய்யா!
நாம பேசாம வாயை கொடுக்காம இருந்தா சரிதானே , சும்மா வாற காசையும் ஏன் விடுவான்?
ம்ம்ம்ம் . காசு செலவழிக்கிறது நான்தானே ? இவனுக்கென்ன ஆக்களிண்ட டீடெயில் ஆராய்கிறான்?

ஒரு மாதிரி ஒரு சந்திப்பில் வானை நிறுத்தி ஒரு கொஞ்சம் காஞ்சு கருத்த கிழவியையும் நடுத்தர வயது மதிக்க தக்க மகளையும் வானில் ஏத்தினான்.
என்ர தலையெழுத்து பதினெட்டாயிரம் குடுத்து வானை பிடிச்சு  போட்டு இரண்டாயிரம் குடுத்து ஏறுற தாய்குலத்துக்கு ஏகப்பட்ட மரியாதை குடுத்து வழிவிட்டேன்,
கிழவி மிகவும் பண்பாக தம்பிக்கு எந்த ஊர் என்றார் ?
அவரின் பேச்சு தோரணை அவர் மிகவும் பண்பான ஒரு பாக்கிரவுண்டில் இருந்து வந்திருக்கிறா என்று விளங்கியது,
கொஞ்ச நேரத்தில் தாயும் மகளும் வளவள என்று பேச தொடங்கிவிட்டார்கள்.
அதனால் எனது பயணத்தின் அதீத செலவை கொஞ்சம் மறந்து ஊர் புதினம் சொந்த புதினம் எல்லாம் பரஸ்பரம் விசாரித்து பிரயாணம் சந்தோஷமாகவே இருந்தது.
கிழவியின் பெயர் நாகரத்தினம் என்று சொன்னார். மகளுக்கு பெயர் ஜீவா என்றும் சொன்னார்கள்.
எல்லாம் சரிதான் ஜீவாவின் இரண்டு கால்களும் எதோ விபத்து அல்லது போலியோ வந்த மாதிரி சரியாக வழங்காமல் இருந்தன. நடக்கும்போது சற்று சிரமப்பட்டு ஒருமாதிரிதான் நடந்தார்.
அதைப்பற்றி நான் ஒன்றும் கேட்கவில்லை . அறியவேண்டும் என்ற ஆவல் இருந்தாலும் அதை கேட்பது பண்பல்ல என்று எனது சிவிலைஸ்ட் பக்கம் தடுத்துவிட்டது,
வான் மதவாச்சியை நெருங்கியபோது  ஜீவா செல்போனை எடுத்து பேச ஆரம்பித்தார். சுத்தமான சிங்களத்தில் பேசினார். எனக்கு சிங்களம் தெரியாது எனவே அவர் பேசியது சுத்தமான சிங்களமாக தான் தெரிந்தது.
மெயின் ரோட்டை விட்டு வானை எங்கெங்கோ விடுமாறு வான்சாரதிக்கு தமிழில் கூறிக்கொண்டே செல்போனில் சிங்களத்தில் பேசிக்கொண்டே வந்தார்.
எனக்கு வான்சாரதி குறிப்பிட்ட வில்லங்கம் இதுதானோ என்று சற்று சீரியசாக மூளை வேலை செய்ய தொடங்கி விட்டது.
வான் ஒரு சிறிய ஆமி செக்போயிண்டுக்குள் போய் நின்றது.
இங்கே ஏன் வானை விடுகிறான் என்று நான் நினைக்கமுதலே இரண்டு ஆமிக்காரர் வானை நோக்கி கையை ஆட்டி கொண்டே வந்து ஜீவாவுடன் சிங்களத்தில் கதைத்தனர் .
ஜீவாவும் தாயாரும் வானை விட்டு இறங்கி உள்ளே செல்ல வான்காரனும் இறங்கி என்னையும் வாங்கோ என்று கூப்பிட்டான்.
இதென்ன புது வில்லங்கமாக இருக்குது என்று நான் நினைக்க முதல் அம்மாவும் மகளும் என்னையும் கூப்பிட்டனர்.
நான் மாட்டன் என்று சொல்ல முடியாதமாதிரி ஆமிக்கரனும் என்னை கூப்பிட்டான் , அய்யா வாங்கோ டீ குடிக்கலாம்!
ம்ம்ம் ரொம்ப முக்கியம், இந்த படுபாவி வான்காரன் அப்பவே வில்லங்கம் எண்டு சொன்னவன் ! தெளிவா சொல்லி இருக்கலாம் ,
வேற வழி இல்லாமல் ஈ எண்டு பல்லை காட்டி கொண்டு நானும் போனேன்,
நல்ல ருசியான கேக்கும் டீயும் தந்தாங்கள் ,
கேக்கை சாப்பிட்டுக்கொண்டு டீயும் குடித்துக்கொண்டு  நைசாக அவங்களை நோட்டம் விட்டன்,
அந்த ஆமிக்காரங்கள் ஜீவாவோட கதைக்கிறதை பார்த்தால் அவங்களை ஆமிக்காரங்கள் மாதிரியே தெரியாது .அவ்வளவு அன்னியோன்னியம்,
அவங்கள் நல்லவங்களாக இருக்கலாம் .அல்லது ஜீவா ஒரு வில்லங்கம் பிடிச்ச பிரகிருதியாக இருக்கலாம் .மொத்ததில எனக்கு ஒரு பிடியும் கிடைக்கவில்லை.அவர்களுக்குள்ள உள்ள தொடர்பு கொஞ்சம் ஆபத்தான சமாசாரமோ தெரியாது .
மீண்டும் வானில் எமது பயணம் தொடர்ந்தது, இப்ப நான் வெகு ஜாக்கிரதையாக மௌனத்தை கடைப்பிடித்தேன்
அம்மாவும் மகளும் வழக்கம்போல வளவளத்து கொண்டே வந்தார்கள்.

திடீரென்று ஜீவா கேட்டாள் : அய்யாவுக்கு ஆமிக்காரர் எண்டால் சரியான பயம் போல?
நான் அசடு வழிய சிரித்தேன் , இப்போதைக்கு அதுதான் எனக்கு சேப்.
பின்பு அவளே தொடர்ந்தாள் ,அய்யா அந்த கறுத்த உயரமான ஆமிக்காரர்தான் என்னை  பொறுத்த இடத்தில காப்பாத்தினவர்.
எந்த இடத்தில?
புதுக்குடியிருப்பில!
எப்படி?
அட்டாக்கில நான் மயங்கி விழுந்திட்டன் , எனக்கு பிறகு கண் முழிச்சி பாக்கேக்க அவர்தான் எனக்கு முதல் உதவி எல்லாம் செய்திருக்கிறார் எண்டு தெரிஞ்சுது.
பிறகும் எனக்கும் அம்மாவுக்கும்  நிறைய உதவி செய்தவர்.

எனக்கு தூக்கி வாரிப்போட்டது,
இவ்வளவு நேரமும் நான் யாரோட பேசி கொண்டிருந்தனான் எண்டு திடீரென்று மூளைக்கு உறைந்தது.
இதுதான் அப்பவே வான்காரன் எதோ வில்லங்கம் எண்டு சொன்னவன் . அப்பவே விளக்கமாக சொல்லிருக்கலாம் . குறுக்கால போவான் சிலேடை பேச்சு வேற !
ஜீவா குறிப்பிட்ட அந்த ஆமிக்காரனின் முகத்தில் மிகவும் கோரமான தழும்புகள் இருந்தது. டீ குடிக்கேக்க சரியாக பார்க்காத அந்த ஆமிக்காரனின் முகத்தை கொஞ்சம் ஞாபகப்படித்தி பார்த்தேன், மனதிற்குள் அவனுக்கு நன்றி சொன்னேன்,
இப்ப ஜீவாவை நான் பார்க்கும் பார்வை கொஞ்சம் வித்தியாசமாக இருந்ததை விளங்கியோ என்னவோ அவள் :அய்யா ஆமிக்காரனும் மனுசன்தானே?
அவனுக்கும் பிள்ளை குட்டி எல்லாம் இருக்கு. 
பின்பு நாங்கள் ஏதோதோ பேசிக்கொண்டே யாழ் வந்து சேர்ந்தோம் , அவர்களிடம் காசு வேண்டாம் என்றேன்.
அவர்கள் மிகவும் பிடிவாதமாக
இரண்டாயிரத்தையும் எனது கைக்குள் திணித்து விட்டு இறங்கினார்கள்.

தாயும் மகளும் சிரித்து  கையை காட்டி விட்டு நடந்து சென்றனர்.
ஜீவா இருகால்களையும்  மிகவும் சிரமப்பட்டு  தாண்டி தாண்டி எடுத்து முன்னே வைத்து  நடந்து செல்வதை இப்போதுதான் சரியாக அவதானித்தேன்,

இந்த அழகான பெண்ணின் வாழ்வை இப்படி தள்ளாடி தள்ளாடி  நடக்க வைத்த விதியை என்ன சொல்வது?
விதி மட்டும்தான் குற்றங்களை ஏற்று கொள்ளும் ,
மனிதர்கள் குற்றச்சாடுக்களை  யார் மீதாவது சுமத்தி விட்டு எஸ்கேப் ஆகிவிடுகிறார்கள்.
சிரித்து கொண்டே சந்தோஷமாக  அவர்கள் தந்த இரண்டாயிரம் ரூபாய் என்னை மிக சிறியவன் ஆக்கிவிட்டது.
அந்த இரண்டாயிரம் ரூபாய் இப்போ எனக்கு ஒரு பாறாங்கல்  போலாகி விட்டது . வீடு வந்து சேரும்வரை  என்னால் ஏனோ இயல்பாக இருக்க முடியவே இல்லை.


கருத்துகள் இல்லை: