செவ்வாய், 31 மார்ச், 2020

செய்வினை.. செயல்பாட்டு வினை

சுமார் அரை நூறாண்டுகளுக்கு முன்பு மக்கள் மந்திரம் பில்லி சூனியம் போன்ற விடயங்களில் அதீத நம்பிக்கை வைத்திருந்த காலம் அது.
 அதிலும் அந்த சுள்ளிபற்று கிராமமோ சொல்லும் தரமன்று  அன்றாட வாழ்க்கையில் நடக்கும் எந்த நிகழ்வுகளும் கிராமத்து சாமி பூஜை மந்திரம் பார்வை பார்த்தல் கழிப்பு கழித்தல் செய்வினை போன்ற வார்த்தைகளோடு பின்னி பிணைந்தே இருக்கும்.
இந்தனைக்கும் சுள்ளிபற்று கிராமத்தில் கல்வி அறிவுக்கு குறைவில்லை.   பலர் படித்து நல்ல உத்தியோகத்தில் இருந்தனர் . கிராமத்தின் பெரும்பாலான மக்கள் ஏனைய பிற  கிராமங்களையும் போலவே அனேகமாக உறவினர்களாகவே  இருந்தனர் .
அடிப்படையில் மிகவும் அமைதியான கிராமமாகவே இருந்தது.
கொஞ்ச நாட்களாக அந்த கிராமத்தின் அமைதியை சில  அசாதாரணமான சம்பவங்கள்  குலைத்து கொண்டிருந்தன,
அந்த கிராமத்திலேயே மிகவும் நல்லவர் என்று கூறப்படும் சுந்தரலிங்கம் வாத்தியின் வீட்டு விவகாரங்கள் முழு கிராமத்தின் தினசரி பேசு பொருளாகி இருந்தது,
ஏறைக்குறைய மூன்று மாதங்களாக வாத்தியின் வீட்டுக்கு யாரோ செய்வினை செய்து விட்டார்கள் என்று எல்லோரும் பேசிக்கொண்டார்கள்.
நடு இரவில் மிகவும் மோசமான சத்தங்கள் கேட்கும் .. சிலவேளைகளில் வீட்டு கூரை மேல் கற்கள் வந்து விழும் . வீடு முற்றத்தில் அதிகாலை வேளைகளில் அசுத்தமான பொருட்கள் சிதறி காணப்படும் .
வாத்தியும் குடும்பமும் நிலை குலைந்து போயினர்
நாட்டின் பல திக்குகளில் இருந்தும் ஏராளமான பேயோட்டிகள . செய்வினை தகடு எடுப்பவர்கள் என்று கூட்டி கொண்டுவந்து அவர்கள் மூலம் பேய்கள் செய்வினைக்கெல்லாம் முறையான கவுண்டர் அட்டாக் கொடுத்து கொண்டே இருந்தனர். ஆனாலும்  வாத்தி குடும்பத்தை இலக்கு வைத்த எதிரிகள் ஓய்வதாக இல்லை
புதிது புதிதாக செய்வினை அட்டாக்குகளை நெறிப்படுத்தி வாத்தி குடும்பத்தை துவம்சம் பண்ணிய வண்ணமே இருந்தனர்.
ஒரு கட்டத்தில் வாத்தி என்ன செய்வது என்ற மன உளைச்சலில் அவரது தூரத்து உறவினரான  போலீஸ் அதிகாரியான்  தம்பரின் காதில்   இந்த விடயத்தை போட்டார் .
ஏன் இவ்வளவு காலமாக என்னிடம் சொல்லவில்லை என்று  தம்பர்  கேட்டார்.
வாத்தி கொஞ்சம் தயக்கத்தோடு,..
 உங்களுக்கு இதிலெல்லாம் நம்பிக்கை இல்லை
 உங்களுக்கு சொல்லி ஒன்றும் பிரயோசனம் இல்லை என்று யோசித்தேன் என்றார்

இடை மறித்த தம்பர் .இல்லை இல்லை எனக்கு தெரியும் இதில கொஞ்சம் விஷயம் இருக்கிறது . ஆனால் நிறைய பேர் ஏமாற்றுகிறர்கள்  ஆனாலும் இதில் கொஞ்சம் உண்மை இருக்கத்தான் செய்கிறது என்றார் தம்பர்  .
வாத்திக்கு கொஞ்சம் ஆறுதலாக இருந்தது இந்த தம்பர்  எப்ப எப்படி கதைப்பார் என்று யாராலும் கூற முடியாது .
இதையெல்லாம் நம்ப மாட்டார் பகிடி பண்ணுவார் என்று கருதிய வாத்திக்கு தம்பரின்  வார்த்தைகளால் மனம் கொஞ்சம் சாந்தி அடைந்தது.
தைரியம் வரப்பெற்ற வாத்தி ஆதியோடு அந்தமாக எல்லா விதமான  செய்வினை தகடு தாட்டல் எடுத்தல் போன்றவற்றை விலாவாரியாயக் கூறி முடித்தார்.
தம்பர்  மிக நிதானமாக    வீட்டில் கண்டெடுத்த தகடுகளை கொஞ்சம் பார்க்கவேண்டும் ஒருநாளைக்கு ஆறுதலாக வருகிறேன் . இந்த கிழமை எனக்கு நேரம் இல்லை .. மூன்று நாலு கேசுகள் இருக்கிறதுஎன்று கூறிவிட்டு தனது மோட்டர் சைக்கிளில் ஏறி சென்றுவிட்டார்
வாத்தியின் மனதில் கொஞ்சம் நிம்மதி பெருமூச்சு விட்டார். பூசாரியால் முடியாதது சிலவேளை போலீஸ்காரனால் முடியும் என்று உள்ளுணர்வு கொஞ்சம் எட்டிபார்த்தது .

அடுத்த நாள்  தம்பர்  சொல்லாமல் கொள்ளமல் வாத்தி வீட்டுக்கு வந்தார்,
வீட்டு முற்றத்தில் விதம் விதமான கோலங்கள் , குங்குமம் சந்தனம்  மற்றும் வாசனை திரவியங்கள் எல்லாம் தாராளமாக தெளிக்கப்பட்டு ஒரே கோயில் வாடை வீசியது
வாத்திக்கு மூளை குழம்பி விட்டது என்பது தம்பருக்கு  நன்றாகவே புரிந்தது ஆனால் அதை வெளிக்காட்டி கொள்ள வில்லை .
வாத்தி ஒரு அப்பாவி பாவம் . யாரோ சரியாக வால்கட்டி வேடிக்கை பார்க்கிறார்கள் என்று மனதிற்குள் கூறி கொண்டார்.
அந்த கல்பிரிட்டை கண்டு பிடிக்கவேண்டும் என்று பல வாறாக யோசித்து கொண்டே வீட்டை சுற்றி பார்த்தார் .
வாத்தியும் மனைவியும் பயபக்தியோடு தம்பரின்  பின்னால் நாய்க்குட்டிகள் போன்று வீட்டை  வலம் வந்தனர்
வீட்டிற்கு யார் யார் வந்து போவார்கள் மற்றும் உறவினர்கள் பற்றிய விபரங்களை கதையோடு கதையாக வார்த்தைகளை போட்டு போட்டு எடுத்து கொண்டார்.
இது மறந்து போயும் ஒருபோலீஸ் விசாரணை போன்று வாத்தியோ இதர உறவினர்களோ  கருதி விடக்கூடாது என்பதில்  தம்பர்  கவனமாக இருந்தார் .
எல்லோருமே உறவினர்கள் . அதிலும் தம்பருக்கு  போலீஸ் புத்தி கொஞ்சம் அதிகம் .
அவருக்கு இந்த செய்வினை சூனியத்தில் எல்லாம் கொஞ்சம் கூட நம்பிக்கை இல்லை.
ஆனால் சம்பவங்கள் நடப்பதாக வாத்தி சொல்வது ஒன்றும் பொய் இல்லை என்று தெரிந்தது . 
 இது யாரோ திட்டமிட்டு ஏதோவொரு காரணத்திற்காக செய்வதாக கருதினர்
 இரவில் அந்த வீட்டில் பயமுறுத்தும் சம்பவங்கள் நடப்பதால் அவர்களின் பெறாமகன் கோபாலு இரவில் வந்து தங்குவதாக கூறினார்கள்.
அந்த விடலைபையன் கோபாலுவை கொஞ்ச நாட்கள் கவனிப்போம் என்று முடிவெடுத்தார் தம்பர் .

அன்று சனிக்கிழமை தம்பருக்கு முடி வெட்ட  அந்த ஊர் நாவிதர் பெருமகனார் வந்தார் .. அவரின்  புனை பெயர்தான் பெருமகனார் .அவரது உண்மை பெயர் யாருக்கும் தெரியாது .இடையிடையே பத்திரிகைகளுக்கு ஏதாவது துணுக்குகள் அல்லது செய்திகள் எழுதும்போது இந்த பெருமகனார் என்ற புனை பெயரையே பாவித்தார்  தற்போது அதுவே நிலைத்து விட்டது.

அவரோடு நல்ல டாக்கிங் டெர்ம்ஸ் இல் உள்ளவர் தம்பர் 
பல ஊர் புதினங்களையும் இலங்கை மற்றும் தமிழக அரசியல் செய்திகளையும் தம்பருக்கு ஒரு செய்தி பத்திரிகை போன்று பெருமகனார் முடிவெட்டி கொண்டே சொல்வார்
இவர்களின் பேச்சை அலம்பல் என்ற அடைமொழியோடு தம்பரின் மனைவி   பெருமகனருக்கு தேநீர் வழங்குவார் .
 அந்த அறுபதுகளில் தம்பரும் பெருமகனாரும்  முற்போக்கு வாதிகள்தான் .என்பதை அவர்களின் தொடர்பாடலில் பரிமாறப்படும் செய்திகள் காட்டியது

வழக்கம்போல அன்றும்  இருவரின் அலம்பல்களும் நடந்து கொண்டிருந்தது .
இடையில் சந்தடி சாக்கில் கோபாலுவை தூக்கி ஒரு ஆறுமாதம் உள்ளே போடப்போகிறேன் .. நீ ஒருவரிடமும் மூச்சும் காட்டாதே என்று கூறிவைத்தார்.

தம்பருக்கு தெரியும் இவரிடம் ஒருவருக்கும் கூறாதே என்று கூறினால் முதல் வேலையாக எல்லோருக்கும் ஒலிபெருக்கியில் வாசித்து விட்டுத்தான் தன் தொழிலையே கவனிப்பார் ..
இச்சம்பவம்  நடந்து நாலாவது நாள் வாத்தி தம்பரின் வீடு தேடி வேர்த்து விறுவிறுத்து வந்தார்.
ஐ சே . இரண்டு நாள கோபாலுவை காணவில்லை . என்ன நடந்தது என்று ஒன்று தெரியவில்லை ..
மிக நிதானமாக வாத்தி கூறுவதை கேட்டு கொண்ட தம்பர் ,
எதுக்கும் போலீசில ஒரு என்றி கொடுங்கோ நான் மிச்சத்தை பார்க்கிறேன் என்று கூறி வத்தியை  ஒருவாறு சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தார்.
நாட்கள் கடந்து ஒரு மாதமாகி விட்டிருந்தது .
கோபாலுவை பற்றிய ஒரு செய்தியும் ஒருவருக்கும் கிடைக்கவில்லை .
அடிக்கடி வாத்தி வீட்டுக்கு போய் அங்கு என்ன நடக்கிறது ?
கோபாலு பற்றிய செய்திகள் ஏதாவது உண்டா என்பது போன்ற  பேச்சுகளோடு மிக சாதாரணமாக நாட்கள் கழிந்து கொண்டிருந்தது .
 கோபாலுவும் வாத்தியும் தம்பருக்கு உறவினர்கள்தான் எனவே தம்பரின் பொசிசன் கொஞ்சம்  டெலிகேட்..
செய்யும் தொழில் காரணமாக உறவினர்களோடு மனக்கசப்பு உண்டாக கூடாது என்பதில்  அவர் தெளிவாக இருந்தார் .
இந்த ஒருமாதமாக வாத்தி வீட்டில் எந்த விதமான செய்வனை சம்பவங்களும் நடக்கவில்லை .. ஏற்கனவே செய்திருந்த பூசை காவல் போன்ற கவசங்களால் அவை ஒன்றும் நடக்கவில்லை என்று வாத்தி நம்பி கொண்டிருந்தார்.

கொஞ்ச நாட்களாக கோபாலுவின் பெற்றோரும் வாத்தியும்  அடிக்கடி தம்பரிடம் வந்து கோபாலு பற்றி பேசிவிட்டு சென்றார்கள்
இப்படியாக மூன்று மாதங்கள் ஓடிவிட்டிருந்தது.
இப்போதெலாம் தம்பர்தான் அடிக்கடி வாத்தி வீடுக்கு போய் செய்வினை கோளாறு பற்றியும் கோபாலு பற்றியும் விசாரித்து கொண்டிருந்தார் .

ஊர் மக்களும் மெதுவாக கோபாலு பற்றி ரகசிய கிண்டல்களை பரிமாறினார்கள   இதில் வாத்தியும் சேர்ந்தே பரிமாறினார் . பலரின் சந்தேகபார்வை காணமல் போன கோபாலு மீதே மெதுவாக ஆனால் உறுதியாக விழுந்தது .. ஆனாலும் எல்லோரும் கொஞ்சம் அமசடக்கத்தை கடைப்பிடித்தனர் . ஏனெனில் கோபாலுவின் குடும்பம் கொஞ்சம்  வசதியானதும்  நெருங்கிய உறவினர்களும் கூட .
.
பொது இடங்களில் தம்பர் மட்டும் அடிக்கடி கோபாலு மற்றும் வழமையான  செய்வினை சூனிய விவகாரங்களை   பற்றி அப்பாவி போல முகத்தை வைத்து கொண்டு கவலையோடு பேசுவார்
இவர் எல்லோரையும் கிண்டல் பண்ணுகிறாரா அல்லது தங்களின் வாயை கிளறி ஏதாவது துருப்பு கிடைக்கிறதா என்று வேவு பார்க்கிறாரா என்று புரியாமல் அந்த கள்ளிபற்று கிராம மக்கள் குழம்பி கொண்டே இருந்தனர்.

ஏறக்குறைய எல்லோர் மனதிலும் கோபாலு மீதான சந்தேகம் இருந்தது . ஆனாலும் இதில் போலீஸ் தம்பர் இருப்பதால் வாயை மூடிக்கொண்டு உள்ளுக்குள்ளேயே உரசி கொண்டிருந்தனர் .
என்னதான் சொந்தமாக  இருந்தாலும் போலீசை நம்பமுடியாது என்று கருதினர் . மௌனமே பாதுகாப்பு .
கோபாலு விடயத்தை ஊரில் பரப்பிய அந்த புண்ணியவான் பெருமகனார்  ஒரு நாள் இரவில் யாருக்கும் தெரியாமல் கோபாலுவை கூட்டி கொண்டு தம்பரின் வீட்டுக்கு வந்தார் ..
கோபாலு ஓவென்று குளறியபடியே எல்லா flashback ஐயும் ஒன்று விடாமல் ஒப்புவித்தான் . தான் சும்மா வேடிக்கையாக செய்ததாக குளறி குளறி சொன்னான்.
ஒருநாள் இரண்டு நாள் என்றால் பரவாயில்லை ஏன் அடிக்கடி செய்தாய் என்று கோபாலுவை நோக்கி சின்னதா உறுமினார் தம்பர.

அழுதுகொண்டே கோபாலு.  செய்வினைக்கு கவுண்டர் அட்டாக் பண்ண காசு தருவினம் .கொஞ்சத்தை பூசாரிக்கு கொடுத்திட்டு கொஞ்சத்தை நான் எனக்கு எடுப்பேன் என்று பள்ளி கூடத்தில் ஒப்புவிப்பது போல ஒப்பித்தான் .
தம்பருக்கு இப்போ உண்மையாகவே வாத்தியின் மீதுதான் கோபம் வந்தது .
சரி சரி இவ்வளவு காலமும் எங்கே இருந்தாய் ?
கிளிநொச்சியில் ஒரு ... என்று சொல்ல தொடங்க முதல் இடைமறித்த தம்பர்
எல்லாம் எனக்கு தெரியும் .. சரி சரி போய் ஒழுங்கா இரு என்று சொல்லி வழியனுப்பி வைத்தார்
வாத்தி தனது  முட்டாள்தனத்தினால்  சின்ன பையன் கோபாலுவுக்கு காசு கொடுத்து அவனை தவறான வழிக்கு தூண்டியது குற்றம் .. ஆனாலும் என்ன செய்வது  .என்று தனக்குள் யோசித்து கொண்டார் .
ஒரு நாள் வழக்கம் போல இந்த விடயத்தையும் பெருமகனரிடம் மெதுவாக சொன்னார்
வாத்தி செய்த காரியத்துக்கு உண்மையில் வழக்கு போடவேணும் .. மைனர்  பையனிடம் இவர் மந்திரவாதியை பிடிச்சு கொண்டுவா என்றது குற்றம் என்று வழக்கம் போல் அந்த ஒலிபெருக்கி காதில் போட்டார் .. கூடவே இதை ஒருவருக்கும் சொல்லாதே என்றும் சொல்லிவைத்தார்

அடுத்த ஆறுமாதமாக வாத்தி தம்பரின் கண்ணில் படுவதை தவிர்த்தே வரலானார் ..
பாவம் வாத்தி காசையும் இழந்து நிம்மதியும் இழந்து இப்போது போதாகுறைக்கு தம்பரை கண்டால் நடுக்கம் வேற ...


 

கருத்துகள் இல்லை: