செவ்வாய், 17 நவம்பர், 2015

குரும்பாசியின் மகள் மீனா!

குரும்பாசியின் குடும்பம்  அந்த கிராமத்தின் அடித்தள ஜாதியில் பிறந்து  அடிமட்ட தொழிலையே செய்துகொண்டும் இருந்தது.
அந்த குடும்பத்துக்கு  வந்தது  சோதனை. அவர்கள் மீது ஒரு பெரிய திருட்டு பட்டம் வந்து விழுந்திருக்கிறது.

அந்த ஊரின் கோவில் நகை ஒன்று காணாமல் போய்விட்டது,
முதல் சந்தேகம் என்னவோ குரும்பாசியின் குடும்பத்தின் மீதே விழுந்தது , அது ஏன்?
உண்மையில் கோவிலுக்கும் அவர்களுக்கும் உள்ள தூரம் மிகவும் அதிகம்,
கோவிலுக்குள் செல்லகூடிய உரிமை கிடைத்து விட்டாலும் அவர்கள் அதை அவ்வளவாக உபயோகிப்பதில்லை.
சாமி மீது  வெறுப்போ அல்லது வேறு காரணங்களோ தெரியாது ஆனால் அவர்கள் அந்த கோவிலுக்கு செல்வது மிகவும் குறைவு.
அப்படியாயின் அந்த கோவிலுடன் அதிக தொடர்புள்ளவர்களை அல்லவா சந்தேகப்படவேண்டும்?

அந்த ஊர் மக்களுக்கு பலபேர் மீதும் சந்தேகம் இருந்தது, ஆனால் அவர்கள் வெளிப்படையாக அதை கூறிவிடமுடியாது . ஏனெனில்  அவர்கள் எல்லோரும் சமுக கட்டமைப்பில் கொஞ்சம் பாதுகாப்பு கவசத்தோடு பிறந்தவர்கள்.
ஊருக்கு இளைச்சவன் என்ற ரீதியில் குரும்பாசி குடும்பம்தான் இருந்தது,
அதிலும் அந்த குடும்பத்தின் இளைய மகள் மீனாவின் மீதுதான் அவர்களின் சந்தேகம் பலமாக  இருந்ததது, அல்ல அல்ல அப்படி சந்தேகம் இருப்பதாக அவர்களால் குற்றம் சாட்டப்பட்டது,
பொதுவாகவே மீனா மீது அந்த ஊர் மக்களுக்கு கொஞ்சம் நல்ல அபிப்பிராயம் இருக்கிறது என்பதுதான் உண்மை,  அவள் படிப்பில் கெட்டிகாரி . சில நாட்களில் அவளும் கூலி வேலைக்கு செல்வதுண்டு . அவள் சமுகத்தில் எல்லோருடனும்  நன்றாக பழகுவாள்.
அப்படி இருந்தும் அந்த குற்றம் சாட்டப்பட்டது ஏன் என்பது பலரின் மனதிற்குள்ளும் குமைந்து கொண்டிருந்த கேள்வியாகும்.

புழுதியை கிளப்பி கொண்டு வந்த போலீஸ் ஜீப் குரும்பாசி குடும்பத்தின் அழுகை ஓலத்திற்கு கொஞ்சம் கூட மதிப்பு கொடுக்காது மீனாவை ஜீப்பில் ஏற்றி கொண்டு சென்றார்கள்.

அவர்கள் யார் யாரையோ எல்லாம் தேடிச்சென்று உதவி கேட்டார்கள். பலரும் சில உதவிகள் செய்வதாக தெரிவித்தனர்,
ஒரு மாதிரியாக ஒரு வக்கீலை பிடித்து ஜாமீனுக்கு வழி செய்தனர்,  மீனா பயந்தது போல போலீஸ் ஒன்றும் மோசமாக  நடத்தவில்லை. 
மீனாவுக்கும் ஒன்றுமே புரியவில்லை . பிடித்து கொண்டுபோன போலீஸ் பெரிதாக ஒன்றும் கேட்கவும் இல்லை.உண்மையில் மீனாவுக்கு அந்த திருட்டில் தொடர்பு இருப்பதாக போலீசே நம்பவில்லை என்பது போல தெரிந்தது, 
அப்படியாயின் ஏன் மீனாவை கைது செய்தார்கள்?
இந்த சம்பவம் நடந்து சுமார் நான்கு  வருடங்களுக்கு பின்புதான் முழு உண்மையும் எல்லோருக்கும் தெரியவந்தது.
முதலில் அப்படி ஒரு திருட்டு அங்கு நடக்கவே இல்லை.
திருடு போனதாக கூறப்பட்ட நகை அந்த கோவிலிலேயே ஒரு இடத்தில் மறைத்து வைக்கப்பட்டு இருந்தது. பின்பு ஒரு மர்ம கடிதம் மூலம் அந்த உண்மை தெரியவந்தது,
வழக்கு முற்று முழுதாக தள்ளுபடி செய்ய பட்டது,
மீனாவுக்கு கிடைத்த அவமானம் துக்கம் எல்லாம் ஈடு செய்யப்படாமலேயே சமுகத்தால்  மறக்கப்பட்டது,
ஆனால் அவளால் மறக்க முடியவில்லை.
மீனாவின் மனதில் அதற்கு காரணமான  ராமசாமி  மீது கோபம் கொள்வதை தவிர வேறு ஒன்றும் செய்ய முடியவில்லை.
ராமசாமியின் தூரத்து உறவு பையன் சிவகுமார்  படிப்புக்காக அவரது  வீட்டில்  தங்கி  இருந்தான்.
ஏனோ தெரியவில்லை அவன் மீது ராமசாமிக்கு  எதோ ஒரு சந்தேகம் .
ராமசாமியின் மனைவியும்  சிவகுமாரும் பழகி கொள்வதை ஏனோ அவரால் இயல்பாக எடுத்துகொள்ள முடியவில்லை.
ராமசாமியின் உளவியல் தொடர்பான ஒரு பிரச்சனையாக இது இருக்கலாம். அல்லது உண்மையாகவே அவர்களுக்கு இடையே ஏதாவது வித்தியாசமான கவர்ச்சி இருக்கலாம். எவருக்குமே இதுபற்றி சரியான தகவல் கிடைக்கவில்லை.எல்லாம் ராமசாமியின் வீண் மனப்பிராந்தி என்றுதான் பலரும் எண்ணினார்கள்.
அவருக்கு ஏற்பட்ட இந்த  சந்தேகம் தான் கோவில் திருட்டு  கூத்துக்கு எல்லாம் மூல காரணம்,

மீனா படித்தபள்ளியில்தான் ராமசாமியின்  மகள்  மலர்விழியும் படித்தாள்.
உண்மையில் மலர்விழியை விடா மீனா படிப்பில் கெட்டிகாரி.

மீனாவின் தந்தையிடம் ஏற்கனவே ராமசாமி  பலதடவை ஏன் மீனாவை சீக்கிரம் கல்யாணம் முடித்து கொடுக்காமல் இருக்கிறாய் என்று கேட்டிருக்கிறான்
தனது மகளின் படிப்பை விட மீனாவின் படிப்பு திறமை எங்கே குரும்பாசியின் குடும்ப அந்தஸ்தை உயர்த்தி விடுமோ என்று ராமசாமி  பயந்தார்.

எப்படியாவது மீனாவின் படிப்பை நிறுத்தி அவளை  ஒரு சாதாரண கூலி தொழிலாளியாக்கி விட அவர்  மேற்கொண்ட முயற்சி பலிக்கவில்லை.

ராமசாமி இயல்பிலேயே ஒரு மேட்டு குடி திமிர்  பிரமுகர்.
அவருக்கு  மீனாவின் படிப்பு துடிப்பு எல்லாமே அவளின் குடும்பம் எப்படியாவது முன்னேறிவிடும் என்று தோன்றியது.

அதிலும் மீனாவோ நிச்சயமாக மலர்விழியைவிட புத்திசாலி என்பதை எண்ணி ராமசாமியின்  நிம்மதி போய்கொண்டிருந்தது.

அது ஒரு நீண்ட நாள் பிரச்சனை .
ஆனால் தனது மனைவியுடன் சிவகுமார் அதிகம்  பேசுவது என்னவோ  தூக்கத்தை கொஞ்சம் கொஞ்சமாக கெடுத்துகொண்டிருந்தது.
சிவகுமாரை எப்படியாவது ஊரை விட்டு துரத்தி விட வேண்டும் என்று அவர் மேற்கொண்ட முயற்சிதான் இந்த கோவில் திருட்டு கதை.

 கோவில் திருட்டில் முதலில் சிவகுமாரின் பெயர்தான் அடிபட்டது,
அதில் கொஞ்சம் பட்டும் படாமலும் சிவகுமாரையும் இழுத்துவிட்டதும் ராமசாமிதான்.
 அதை காரணம் காட்டி சிவகுமாரை அனுப்பி விட்டார்.
அவனும் தலை தப்பினது தம்பிரான் புண்ணியம் என்று ஓடிவிட்டான்.
அதனால் ராமசாமியின்  மனம் மிகவும் ஆறுதல் அடைந்தது,
ஆனாலும் முழுதிருப்தி கிடைக்கவில்லை.
மீனாவின் முன்னேற்றத்தை தடுத்து நிறுத்தி தனது மேட்டுக்குடி நலனை முன்னிறுத்த வேண்டும் என்ற ஜாதி வெறி அவருள் கொழுந்து விட்டு எரிந்தது.

ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என கோவில் திருட்டு சம்பவத்தை அரங்கேற்றினார்,
வருடங்கள் ஓட ஓட மெது மெதுவாக சகல உண்மைகளும் வெளியே வரத்தொடங்கியது.
ஆனாலும் மீனாவின் மானம் மரியாதை எல்லாம் போனது போனதுதான்.
செய்யாத குற்றத்திற்காக பழி சுமந்த அவள் மனம் ஆறவில்லை.
வஞ்சம் தீர்க்க வெறியோடு படித்தாள்.
இன்று அவள் அதில் கணிசமான வெற்றியும் பெற்றுவிட்டாள்.
குரும்பாசியின் குடும்பதின் அந்தஸ்து  தற்போது ஒரு அரசு ஊழியரின் குடும்பமாக மாறிவிட்டு இருந்தது.
 மீனாவுக்கு தான்  பெற்று விட்ட வெற்றி மனதை ஓரளவுதான் அமைதிப்படுத்தியது.
அந்த வலி இன்னும் முற்றாக தீரவில்லை. அது என்றுதான் தீரும்? 

கருத்துகள் இல்லை: