
விட்டு விடுமா என்ன?
கண்ணுக்கு எட்டிய தூரம் வரை தெரியும் வயல்களுக்கு நடுவே நிற்கும் வெள்ளம்புட்டி விநாயகர் கோவில்.
கோயிலை சுற்றி இருந்த மக்கள் கூட்டமோ கோயிலுக்கு ஏற்ற அளவில் இல்லை .
உலகின் எல்லா திக்குகளிலும் இருந்த நாடுகளையும் நோக்கி அந்த வயல் கிராம மக்கள் ஓடிவிட்டிருந்தார்கள்.
எஞ்சி இருந்த பத்து பதினைந்து குடும்பங்களால் மட்டுமே அந்த வெள்ளம்புட்டி கிராமம் மக்கள் வாழும் ஊர் என்ற அந்தஸ்த்தை தக்கவைத்து கொண்டிருந்தது. அவர்களின் ஒரே ஒரு பொழுது போக்கு இடமாக இருந்தார் வெள்ளம்புட்டி பிள்ளையார்.
அவருக்கு பூசை பண்ணுவதாக காலத்தை ஒட்டி கொண்டிருந்தார் சம்பு அய்யர்.
நடந்து கொண்டிருந்த உள் நாட்டு போர் திடீர் திருப்பமாக ஒரு வெளிநாட்டு போர் போன்று காட்சி அளிக்க தொடங்கியது .
ஒரே இரவில் இந்திய இராணுவம் அந்த வெள்ளம்புட்டியை சுற்றி வளைத்தது, மக்களுக்கு உடனடியாக எந்த ஆபத்தும் வரவில்லை. இரண்டு நாட்கள் ஆட்களை பதிவு செய்யும் வேலையை இந்திய இராணுவம் செய்து முடித்தது. ஏராளமான கட்டுப்பாடுகளையும் பொது இடத்தில வைத்து அறிவித்தார்கள்.
ஒரு அசல் லாக் அப்பிற்குள் மாட்டிகொண்டு விட்டோம் என்று மக்களுக்கு உறைத்தது !
உணவு உண்பதற்கு மட்டுமே மக்கள் வாயை திறக்க பழகி வெகு நாட்கள் ஆகிவிட்டதனால் அங்கு எந்த சத்தமும் பெரிதாக அல்ல சிறிதாக கூட எழவில்லை.