வெள்ளி, 12 ஜூலை, 2019

குஞ்சு பணிக்கன் வளவு

குஞ்சு பணிக்கன் வளவில் மிளகாய் மூட்டைகள் எக்கச்சக்கமாக அடுக்கி
வைக்கப்பட்டிருந்தது . சென்ற வாரம் மலையாள வியாபாரிகள்  வண்டிகளில் கொண்டு வந்து இறக்கிவிட்டு போனார்கள்
வந்து சேர்ந்த மிளகாய் மூட்டைகளை குஞ்சு பணிக்கரும்  கூட்டாளிகளும் அளந்து பனை ஓலைகளால் சிறு சிறு பொதிகளாக   கட்டி கொண்டிருந்தனர்.
இந்த மிளகாய் மூட்டைகள் எல்லாம்  கொச்சியில் இருந்து வள்ளங்கள் மூலம் வந்தவையாகும் . இன்னும் இரண்டு மூன்று நாட்களில் வந்த வள்ளங்கள் வெற்றிலையையும் வைக்கோலையும் நிரப்பி அடுக்கி கொண்டு மீண்டும் மலையாள தேசத்துக்கு சென்று விடும்.
இந்த மிளகாய் வெற்றிலை வைக்கோல் மட்டுமல்லாது வேறு பல பொருட்களும் அங்கிருந்து வருவதும் இங்கிருந்து போவதும் பல ஆண்டுகளாக யாழ்ப்பாணத்தை  சுற்றி நடைபெறுவதுதான்.
சீனிவாச ரெட்டிதான் இந்த கிட்டங்கியின் உரிமையாளர். அவருக்கு குஞ்சு பணிக்கர் மீது அளவு கடந்த நம்பிக்கை, குஞ்சு பணிக்கர் சொல்வதே கணக்கு. அவர் கூறுவதை மறுவார்த்தை பேசாது சீனிவாச ரெட்டி ஏற்றுக்கொண்டு விடுவார். சிங்கள  வியாபாரிகளிடம் மிளகாயை கொடுத்து வெற்றிலையை கணக்கிட்டு வாங்கி கூலியாட்களை கொண்டு சரியான அளவுகளில் பொதி கட்டி ரெட்டியின் வள்ளத்தில் ஏற்றி விடுவதுவரை குஞ்சு பணிக்கர் பொறுப்புத்தான்.
இந்த் மலையாளதேச தீவுத்திடல் வியாபாரம் பல ஆண்டுகளாக நடந்து கொண்டு வருகிறது.
ரெட்டிக்கு சொந்தமான கிட்டங்கியே குஞ்சுபணிக்கன் வளவு என்றே பலருக்கும் தெரிகிறது . அந்த அளவு அதில் அவர் காலூன்றி இருந்தார்..

எல்லாம் சரியாக போய் கொண்டு இருந்தது.ஒரு நாள் வழக்கம் போல வரும் மிளகாய் மூட்டைகளோடு ஒரு உயிருள்ள மிளகாயும் வந்து சேர்ந்தது .அதன் பெயர் தேவநாயகி..
இடுக்கியில் ஏதோவொரு சிக்கலில் மாட்டுப்பட்டு தற்காலிகமாக தப்பி ஒடுவந்துள்ள பெண் என்று மட்டுமே குஞ்சு பணிக்கனுக்கு தெரியும். கொஞ்ச நாட்கள் பாதுகாப்பு கொடுக்கவும் என்று ரெட்டி ஓலை அனுப்பி இருந்தார்.
குஞ்சு பணிக்கனின் குடும்பத்தோடு தேவநாயகியும் இருப்பதில் அவர்களுக்கு ஒரு பிரச்சனையும் இருக்கவில்லை.
ஆனால் மெதுவாக தேவநாயகியின் கதையை தெரிந்த பின்பு குஞ்சு பணிக்கன் குடும்பத்தின் நிம்மதி போய்விட்டிருந்தது.


திருவிதாங்கூரில் உள்ள ஒரு பெரிய மனிதனின் ஆசைக்குரியவளாக இருந்திருக்கிறாள்.. அவள் ஏன் அவரை பிரிந்து வந்திருக்கிறாள் என்பது தெரியவில்லை. ஆனால் எப்பொழுதும் ஒரு ஆழமான சோகம் கப்பிய அவள் முகம் ஏராளமான கதைகளை கூறியது.
ரெட்டியின் பொறுப்பில் வந்திருப்பதனால் எதுவும் கேட்பது பண்பில்லை என்ற கருத்தில் அவர்கள் அவளிடம் எதுவித கேள்விகளும் கேட்கவில்லை . அவளும் மெல்ல மெல்ல அவர்களின் குடும்பத்தில் ஒருவராகவே மாறி விட்டிருந்தாள்.
குஞ்சுபணிக்கனின் மனைவி பார்வதிக்கு தேவநாயகியின் வரலாறு கொஞ்சம் கொஞ்சமாக தெரியவந்தது.
திருவிதாங்கூர் பெரியமனிதன் தேவநாயகி மீது ஆழமான காதல்
கொண்டிருந்தான்.
ஆனால் அவனின் முதல் மூன்று மனைவிகளும் இதர சுற்றம் சொந்தங்கள் எல்லாம் தேவநாயகியை அடியோடு வெறுத்தனர். அவர்கள் கொடுத்த தொல்லைகள் அளவுக்கு அதிகமாக இருந்தது .
தேவநாயகியால் ஓரளவுக்கு மேல் பொறுக்க முடியவில்லை. அவர்கள் அவளை கொலை செய்ய நேரம் பார்த்து இருந்தார்கள் என்பது திருவிதாங்கூர் பெரியவனுக்கு தெரியவந்தது.
ரெட்டியை அழைத்து தேவநாயகியை பற்றி கூறினார். ரெட்டிதான் இந்த  உதவியையும் செய்தார்.
மேலும் அவர்களின் ஆபத்தில் இருந்து தேவநாயகியை காப்பாற்றும் நோக்கில் தற்காலிகமான ஏற்பாடகத்தான் வள்ளத்தில் ஏற்றி நல்லூருக்கு அனுப்பி விட்டிருந்தார் .
எல்லா ஏற்பாடுகளும் எண்ணியது போல நடைபெறுவது இல்லையே.
உள்ளூர் மக்களின் சந்தேகங்களுக்கு கூடுமானவரை இடம் கொடுக்க கூடாது என்ற நோக்கில் உள்ளூர் பேச்சு வழக்கிற்கு உச்சரிப்புக்களை மாற்றி கொண்டிருந்தாள்.
காலபோக்கில் இந்த தீவுத்திடல் வாழ்க்கையே தனது மலையாள வாழ்க்கையை விட மேல் என்ற எண்ணம் அவளுக்குள் வலுத்தது.
அங்கு அவள் காணாத பல சுதந்திரங்களை முதல்முறையாக  இங்கு கண்டு கொண்டாள்.
மக்கள் மிகவும் சாதரணமாக இருந்தார்கள் .. திருவிதாங்கூர் அதிகார கெடுபிடிஒன்றும் இங்கிருக்கவில்லை. இப்படியே இங்கே இருந்துவிட்டால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று அவள் உள்ளுக்குள் ஏக்கம் கொண்டாள்.
குஞ்சு பணிக்கர் குடும்பம் மனது வைத்தால் அது நடக்க வாய்ப்புண்டு என்று அவள் மனம் அவளுக்குள் பகன்றது .
குஞ்சு பணிக்கர் குடும்பத்திற்கும் நாயகியை பிடித்துதான் இருந்தது. அவளின் மனவோட்டத்தை அவர்களும் அறிந்துதான் இருந்தனர் . ஆனால் எல்லோரையும் பயமுறுத்தும் ஒரே ஒரு விடயம் , சீனிவாச ரெட்டியும் அவருக்குள் கரந்துறையும் திருவிதாங்கூர் அரச குடும்ப ரகசியங்களும்தான் .
ஒரு நாள் பூரணை இரவில் மணிபல்லவ தேவியின் திருவிழாவில் ஊர் கொண்டாட்டத்தில் மூழ்கி இருந்தது.
பகல் போன்ற சந்திர ஒளியில் பாட்டும் ஆட்டமும் குடியும் கூத்துமாக இரவு தன்னை ரசித்து கொண்டிருந்தது.
தேவநாயகி பாடிய பாடல் ஒன்று கிராமத்து தேவதைகளை மிகவும் கவர்ந்தது, மீண்டும் மீண்டும் அதே பாட்டை பாடுமாறு நாயகியை இன்ப தொல்லைப்படுத்தினார்கள் . அவளும் மகிழ்வோடு தொல்லைப்பட்டாள்  .
இந்த கொண்டாட்டம் கொடுத்த மகிழ்ச்சிக்கு ஒரு எல்லை வருவதை அவர்கள் எல்லோரும் அறிந்துதான் இருந்தார்கள் ..
எந்த நேரமும் ரெட்டியின் ஆட்கள் ஓலையோடு வரக்கூடும் . நாயகி மீண்டும் திரும்பி சென்றுவிடுவாள்.
அவள் திரும்பி செல்வது எவருக்கு அதிக துன்பம் விளைவிக்கும் என்று கூறமுடியாத அளவில் எல்லோரும் அதே மனோ நிலையைதான் கொண்டிருந்தனர் .
நாட்கள் ஓடிகொண்டிருந்தது.  வழக்கம்போல போக்கும் வரவும் நடந்து கொண்டிருந்தது.
ஒரு வில்லங்கமான நாளில் படகில் இருந்து பொதிகளோடு ஒரு செய்தியும் பணிக்கருக்கு வந்திருந்தது .
சீனிவாச ரெட்டியின் புதிய நான்காவது மனைவிக்கும் முதல் இரண்டு மனைவிமாருக்கும் இடையில் ஏற்பட்ட அடிதடி சண்டையில் ரெட்டிக்கு பலத்த அடிபட்டு நோய்வாய்ப்பட்டு விட்டார் .
ரெட்டியின் இந்த செய்தி தேவநாயகிக்கு பெரும் மனவேதனையை கொடுத்தது.
நிலைமை கொஞ்சம் சிக்கலாகி வருவது குஞ்சு பணிக்கர் குடும்பத்திற்கு புரிந்தது.
இனி தேவநாயகியை யாரிடம் அனுப்புவது ?
குஞ்சுபணிக்கருக்கும் ரெட்டிக்கும் உள்ள தொடர்பு பல வருட பிணைப்பு..

பணிக்கருக்கு இருப்பு கொள்ளவில்லை . ரெட்டியை பார்க்க வள்ளம் ஏறினார்.

சீனிவாச ரெட்டியின் ராச்சியம் ஆட்டம் கண்டுவிட்டதை அவரது உள்ளுணர்வு உணர்த்தியது.  ரெட்டியின்  குடும்பம் சொத்துக்கள் மற்றும் அவரது  வாழ்க்கையில் உள்ள குழப்பங்கள் பற்றியெல்லாம் ஏற்கனவே  பல தடவைகள்   பணிக்கரிடம்  கூறி இருந்தார்.
ஆனால் நாயகியின் விடயம் பற்றி மட்டும் ஏனோ போதிய விபரம் பணிக்கருக்கு தெரிந்திருக்கவில்லை .

தோற்றத்தில் ஒரு கம்பீரமான அரசனை போலவே நடமாடித்திரிந்த சீனிவாச ரெட்டி இப்போது நொந்து மெலிந்து ஒரு கட்டிலில் கிடந்தார்.
பணிக்கரின் நெஞ்சில் ஏதோவொன்று அடைத்து கொண்டது .
ரெட்டி மெதுவாக பேசினார் .. பணிக்கரை பார்த்த மகிழ்ச்சி ரெட்டியின் முகத்தில் தெரிந்தது.
ரெட்டியின் வீட்டில் ஏழெட்டு நாட்கள் பணிக்கர் தங்கி இருந்தார் . ரெட்டிவீட்டு  வில்லங்கங்கள் எல்லாம் பணிகருக்கு ஒருவாறு புரிந்தது.
ரெட்டியின் சாம்ராஜ்யத்தின் சொத்துக்களுக்கு மூன்று நான்கு மனைவிகளும் பத்து பன்னிரண்டு குழந்தைகளும் தங்களுக்கு வரப்போகும் சொத்துக்கள் பற்றிய சிந்தனையில் இருந்தனர் .
ரெட்டியின் மீது அவர்களுக்கு பாசம் இருந்தாலும் அவர்களில் பலர் ரெட்டிக்கு ஏதும்  நடந்து விட்டால் தங்களுக்கு கிடைக்க இருக்கும் சொத்தின் பங்கு குறித்தான கவலையும் இருப்பதை பணிக்கர் அவதானிக்க தவறவில்லை.

இது தான் மனித வாழ்க்கை என்று எண்ணி கொண்டார் பணிக்கர்.
ரெட்டியை கண்டாலே பம்பரமாக சுழலும் இவர்கள் தற்போது ரெட்டியின் முடிவு பற்றி சிந்தித்து கொண்டிருக்கிறார்கள் .
நாயகியின் எதிர்காலம் குறிந்து ரெட்டி கூறிய விடயங்கள் பணிக்கரை கொஞ்சம் அசைத்து விட்டது .
ரெட்டியின் வீட்டுக்குள்  தேவநாயகி வந்து சேர்ந்த விதம் ஒரு தனி கதை. .  நாயகியின் பெற்றோர் பெற்ற கடனுக்காக சர்வ சாதரணமாக ஒரு அடைமான பொருளாக ரெட்டியின் கட்டுப்பாட்டுக்குள் வந்திருந்தார் .
ஆனாலும் ரெட்டி நாயகியை ஒரு தவறான கோணத்தில் அணுகி இருக்கவில்லை. அது ஏனென்று ரெட்டிக்கு மட்டும்தான் வெளிச்சம். பொதுவாக இப்படியான கொடுக்கல் வாங்கல்களை அந்த சமுகம் ஒரு சாதாரண நிகழ்வாக கருதிய காலம் அது.
ஒரு சில மாதங்கள் ரெட்டி வீட்டில் ஒரு நல்ல பணிப்பெண் போல துறுவென்று வீட்டு பணிகளை தொடர்ந்தாள் நாயகி ..
அதற்கு ஒரு நாள் முற்று புள்ளி வந்தது ரெட்டியின் இரண்டாவது அடாவடி மகன் மூலம்.
நாயகியின் நிம்மதி பறிபோனது .. அவளின் திணறலை முகர்ந்து அறிந்துகொண்டார் ரெட்டி .. அதன்காரணமாகவே யாருக்கும் தெரியாமல் அவளை  அக்கரை தீவுக்கு வள்ளத்தில் ஏற்றி  பணிக்கரிடம் அனுப்பியிருந்தார் ரெட்டி.
இந்த விபரங்கள் ஒன்றும்  ரெட்டியின் குடும்பத்தினருக்கு தெரியாது . எல்லாவற்றையும் ரெட்டி மறைபொருளாகவே வைத்திருந்தார்.
பணிக்கரிடம் இந்த விபரங்களை கூறிய ரெட்டி நாயகியை  யாருக்கும் தெரியாத வணணம் அவளின் பெற்றோரிடம்  ஒப்படைத்து விடுமாறு கைகளை பிடித்து கொண்டு கேட்டுகொண்டார் . அப்படியே செய்வதாக் கூறிவிட்டு  கண்ணீரோடு விடைபெற்றார் பணிக்கர்.
பணிக்கர் போகும் திசையை பார்த்துக்கொண்டே இருந்தார் ரெட்டி .  திடீரென்று ஏதோ கூற நினைத்தவர் மெல்லிய குரலில் பணிக்கரை அழைத்தார் .
 ரெட்டியின் கட்டிலருகே வந்து மெதுவாக குனிந்தார் .. மிகவும் மெல்லிய குரலில் பணிக்கரிடம் மெதுவாக ஏதோ கூறினார் .
பணிக்கர் கொஞ்சம் திகைத்தார் ..      ரெட்டின் கையை பிடித்து ஆறுதலாக சில வார்த்தைகளை கூறிவிட்டு  புறப்பட்டார்.

 பணிக்கருக்கு புரிந்தது ரெட்டி இனி அதிக காலம் இருக்கமாட்டார் .. தேவநாயகி ஒரு போதும் ரெட்டியின் வீட்டுக்கு திரும்பி வரமுடியாது .ஆனால் ரெட்டியின் அடாவடி மகன் நாயகியை தேடி கடலை கடந்தால் ... அவன் மகா முரடனாச்சே ?
என்ன செய்வது என்று ஒரே குழப்பமாக இருந்தது..

 குஞ்சு பணிக்கன் மலையாள தேசத்தில் இருந்து வரும்போது கொண்டு வந்த மிளகாய் மூட்டைகளை  வழமை போல பணியாட்கள் பிரித்து சிறு சிறு பொதிகளாக கட்டி கொண்டிருந்தனர்.
ரெட்டி வீட்டு செய்திகளை  மிகவும் சாதாரண விடயமாகவே நாயகி  எதிர்கொண்டாள்..   அதற்கு காரணம் ரெட்டியின் அடாவடி மகன் கொடுத்த துன்பமாக இருக்கலாம்.
அடுத்து என்ன செய்வது என்று தெரியாமலே பணிக்கர் வளவில் வியாபாரம் நடந்து கொண்டே இருந்தது.
பணிக்கர் குடும்பத்திற்கு நல்ல ஒரு பணியாளர் கிடைத்தார் .. அதுவும் அவர்களின்  குடும்பதில் ஒருவராகவே இருக்கிறார் என்று  அக்கரை தீவு முழுவதும்  மக்கள் மட்டுமல்லாது  பயிர் பச்சை செடி கொடிகள் எல்லாம் பேசிக்கொண்டன ..
அக்கரை தீவு வாசிகளின் முக்கிய  புராணமாக குஞ்சு பணிக்கன் வளவு  தேவநாயகியின் கதை இடம் பிடித்தது  

கருத்துகள் இல்லை: