செவ்வாய், 15 செப்டம்பர், 2015

சொல்லாமலே புயல் ஒன்று மையம் கொள்கிறது

வத்சலாவின் வாழ்க்கையில் இனி எந்தவிதமான மகிழ்ச்சிக்கும் இடமே இல்லை என்றாகி ரொம்ப நாளாகி விட்டது. அவளின் அப்பா வெறும் டம்மி பீஸ். அம்மா ராசலட்சிமியோ  திமிர் பிடித்த சர்வாதிகாரி. வத்சலாவின் கல்யாண பேச்சு வார்த்தைகள் எல்லாம் ராசலட்சிமி அம்மாவின்  சதுரங்க வேட்டை களமானது தான் மிச்சம், அவன்ரை படிப்பு காணாது இவன்ரை உத்தியோகம் சரியில்லை .இதொன்றும் இல்லையென்றால் அவனது குடும்ப பாரம்பரியம் சரியில்லை என்று ஏதாவது ஒரு காரணத்தை சொல்லியே தட்டி கொட்டி கொண்டே வத்சலாவின் வாழ்க்கையையே குட்டி சுவராக்கி விட்டாள்.
ராசலட்சுமியை எதிர்க்க அந்த வீட்டில் ஆளே இல்லாமல் போய்விட்டது.
வத்சலாவின் இரண்டு அக்காக்களும் அதிஷ்டவசமாக இளமையிலேயே கல்யாணம் செய்து ராசலட்சுமியின் பார்வையில் இருந்து வெகு தூரம் சென்று விட்டனர்.இருந்த ஒரே ஒரு சகோதரன்  குமாரும்  பலவருஷங்களாக அகதியாகி பலநாடுகளுக்கும் மாறி மாறி அலைந்து கொண்டிருந்தான், இவனது அலைச்சலில் சுமார்  பதினைந்து ஆண்டுகள் ஓடி போய்விட்டிருந்தது